தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட முரட்டு நஷ்டத்தை சரிக்கட்டும்படி அப்பட விநியோகஸ்தர்கள் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்காமல் ரஜினியும், ஹாலிவுட் இயக்குநர் முருகநோலனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகக் கூறப்படுகிறது.
ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது.பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள்.
ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல கோடிகள் நட்டம் என்பதால் படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, படத்தை வெளீயிடும்போதே நட்டத்தில்தான் வெளீயிட்டோம். அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஒதுங்கிக் கொண்டார்களாம்.
சட்டப்படி எதுவும் செய்யமுடியாத நிலையில் தார்மீக அடிப்படையில் ரஜினியிடமும் ஏ.ஆர்.முருகதாஸிடமும் இதுபற்றி முறையிட முடிவு செய்த விநியோகஸ்தர்கள் இருநாட்களுக்கு முன்பாக ரஜினி வீட்டுக்கும் முருகதாஸ் அலுவலகத்துக்கும் சென்றனர்.அப்போது ரஜினி தரப்பிலிருந்து ரஜினி உங்களை அழைப்பார் என்று சொல்லியனுப்பிவிட்டார்களாம்.ஆனால், அடுத்தநாள் ரஜினி தரப்பை தொடர்பு கொண்டபோது, இது தொடர்பாக ரஜினி உங்களைச் சந்திக்கமாட்டார் என்று சொல்லிவிட்டார்களாம்.
ஆனாலும் மனம் தளராத விநியோகஸ்தர்கள், நேற்று (பிப்ரவரி 3) ரஜினி வீட்டுக்குச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டது.அதன்பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்துக்குச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த ஓர் உதவி இயக்குநர், விநியோகஸ்தர்களை தரக்குறைவாகப் பேசினாராம். இதனால் அதிர்ந்த சிலர் அவரை அடிக்கப்பாய்ந்திருக்கின்றனர். உடனே காவல்துறைக்கு அழைப்புவிடுத்து அவர்கள் வந்துவிட்டனராம்.காவல்துறை விநியோகஸ்தர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டதாம்.
அதன்பின் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்குப் போன விநியோகஸ்தர்கள், ரஜினியைச் சந்திக்க வேண்டும் என்று மனு எழுதி மண்டப மேலாளரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாராம் மேலாளர்.அனாலும் விநியோகஸ்தர்கள் விடாப்பிடியாக நின்றதால், ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று வாய்மொழியாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.இன்று (பிப்ரவரி 4) ரஜினி விநியோகஸ்தர்களைச் சந்திப்பார் என்று சும்மாக்காச்சும் சொல்லி வைத்திருக்கிறார்கள். இம்முறை ரஜினி தொடர்ந்து தலைமறைவாகவே இருப்பார் என்றே தெரிகிறது.