ஓர் அலசல்!
டெல்டா மாவட்ட விவசாயிகளின் சார்பில் நீண்டகாலமாகவே வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளில் முக்கியமானது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம். பல ஆண்டுகள் கழித்து, சேலத்தில் கடந்த 9-ம் தேதி கால்நடை ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்து வேளாண் மண்டலத்தைப் பற்றிப் பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதைக் கேள்விப்பட்ட டெல்டா விவசாயிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதை பிப்ரவரி 20-ம் தேதி, மசோதாவாக சட்டசபையில் தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. “ஒரு விவசாயியாக இதைத் தாக்கல் செய்வதில் பெருமை கொள்கிறேன்” என்றார். மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், இதற்காக முதல்வர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதிகளில் வேளாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பைத் தரும் எந்தத் தொழிற்சாலைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது என்ன?
பொதுவாக வேளாண் மண்டலங்களானது தேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில்தான் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி 80 சதவிகிதம் மக்கள் வேளாண்மையைச் சார்ந்திருக்க வேண்டும். விவசாயிகள் இருபோகமும் சாகுபடி செய்யும் நிலப்பகுதியாகவும் இருக்க வேண்டும். அதிக விளைச்சல் திறனுள்ள மண்வளம் உடையதாக இருக்க வேண்டும். நீர்வள ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.
ஒரு பகுதி வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதிகளில் வேளாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பைத் தரும் எந்தத் தொழிற்சாலைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. அதேபோல எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களையும் அந்த மண்டலத்தில் செயல்படுத்த முடியாது. விவசாயம் சார்ந்து விளங்கும் தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்க முடியும். விளைநிலங்களை எளிதில் வீட்டு மனைகளாக மாற்ற முடியாது. மணல் கொள்ளையும் தடுக்கப்படும்.
தமிழக வேளாண் மண்டலம் மசோதா சொல்வது என்ன?
வேளாண் மண்டல மசோதாவில், “தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாகக் கொண்டுவரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த முடியாது.
அதேபோல் துத்தநாக உருக்காலை, தோல் பதனிடும் ஆலைகளையும் புதிதாகத் தொடங்க அனுமதியில்லை. சட்டம் கொண்டுவரப்பட்ட தேதிக்கு முன்னதாக அங்கு செயல்படும் திட்டங்களுக்கு எந்தப் பதிப்பும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்!
இதுவரைக்கும் டெல்டாக்களில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்கள் எதற்கும் தடை கிடையாது. அந்தத் திட்டங்கள் வழக்கம்போல செயல்படும். இனிமேல் வரப்போகும் திட்டங்களுக்கு மட்டுமே தடை ஏற்படும். அதேபோல இனி விளைநிலங்களை விற்பனை செய்வது குறைய வாய்ப்புகள் உண்டு. மணல் கொள்ளையும் தடுக்கப்படும்.
இந்த மசோதா பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் பேசினோம். “இந்தச் சட்ட மசோதாவால் இதுவரைக்கும் இருக்கும் எண்ணெய்க் கிணறுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தடையும் இல்லை. இனி புதிதாக எந்தவிதமான திட்டங்களும் அனுமதிக்கப் படாது.இருக்கிறதுட்டங்கள் வராது என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணெய்க் கிணறுகளை மூடுவதற்கான வாய்ப்பிருந்தும் அதைச் செய்யவில்லை. வேளாண் மண்டலம் என்று அறிவிப்பது மட்டும் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடாது. விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களை அடியோடு தடை செய்து, விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு உரியவிலை, விவசாயத்துக்குத் தண்ணீர், தொழில்நுட்ப மானியம் எனப் பல விஷயங்களை அரசு செய்து கொடுக்க வேண்டும். இந்த வேளாண் மண்டல மசோதா முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டிருக்கிறது” என்றார்.
இதுபற்றி பேசிய மீத்தேன் எதிர்ப்புக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனிடம் பேசினோம். “இதை எங்களுக்குக் கிடைத்த ஆரம்ப வெற்றியாகவே கருதுகிறோம். இன்னும் அடைய வேண்டிய இலக்கு அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக அனுமதி மட்டும் கொடுக்கப்பட்ட திட்டங்கள் வராது என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். இன்னும் இயங்கிக் கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளையும் மூட தொடர்ந்து களத்தில் பணியாற்ற தயாராக இருக்கிறோம். இவர்கள் சொல்லியிருக்கும் வேளாண் மண்டல பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதையும் எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது எனவே கருதுகிறோம். இந்த மசோதாவுக்கான பலன், வரும் காலங்களில்தான் தெரிய வரும்” என்றார்.
வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவில் ‘இனி அனுமதிக்கப் படாது’ என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, தற்போது இருக்கும் திட்டங்கள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. துறைமுகம், சாலை, எரிசக்தி, குடிநீர் உள்ளிட்ட பணிகளை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது எனச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல அனுமதி கொடுத்துவிட்டு இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் கம்பெனிகளின் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் என்னவாகும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. தெளிவான விளக்கம் அரசு தரப்பில் இன்னும் தரப்படவில்லை. அதனால் ஏற்கெனவே உள்ள திட்டங்கள் அப்படியே செயல்படுமா என்ற அச்சம் இன்னும் அகலவில்லை.