.
காலையில் ஒரு துயர சம்பவம்.
.
அம்மா எந்த சடங்கை செய்யச் சொன்னாலும்
இரக்கமில்லாமல் மறுத்துவிடுவது
என் வழக்கம்.
.
அப்பாவின் நினைவு தினச் சங்கதிகள் உட்பட.
.
ஆனாலும் கிழவி விடுவதேயில்லை.
.
ஏதோ இன்றுதான் என்னைப் பார்த்ததுபோல
எதையாவது சொல்லும்.
நான் வழக்கம்போல ரெண்டு கடியைப் போட்டவுடன்
அமைதியாகி விடும்.
.
அதைவிட அம்மாவின் சமையல் சுவை
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது.
அப்பா நாற்பத்தி எட்டே வயதில் “விடைபெற”
அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
.
“பொங்கல் சாப்புடு…”ன்னு நீட்டினால்
அதை எடுத்துச் சாப்பிட ஏலாது.
.
நக்கித்தான் சாப்பிட முடியும்.
.
பாயாசம் என்கிற பெயரில் வந்திறங்கும் வஸ்துவோ
வெட்டிச் சாப்பிட வேண்டிய வகையறாவாகக்
காட்சி அளிக்கும்.
.
சிறுவயதில் அம்மா சமைக்கச் சமைக்க
எழுந்து ஓடியவன் வீட்டின் முன்புறம் இருந்த
பெரிய தண்ணீர்த் தொட்டியில் குப்புற விழுந்து
கை காலெல்லாம் செம அடி….
.
ஆறுதல் சொல்ல வீட்டுக்கு வந்த என் மச்சான்கள்….
” அக்கா கேசரி செய்யறேன்….னு சொல்லீருக்கும்….
அதான் அதுக்குத் தப்பிச்சுப் போயி தொட்டீல விழுந்துட்டான்…”
என்று கவலையோடு என்னைப் பார்த்தார்கள்.
.
ஆனாலும் அம்மாவிடம்
என்றும் மாறாத குணம் ஒன்று உண்டு.
அதுதான் அதன் இரக்க குணம்..
.
அது பார்சல் சோறோ…
அல்லது பத்து நாளாய் “பதப்படுத்தி” வைத்திருந்த
தன் சொந்த தயாரிப்போ….
காக்காய்க்கு வைத்து விட்டுத்தான் சாப்பிடும்.
.
யாராவது கல்யாணத்துக்குப் போயிருந்தாலும் சரி.
பந்தியில் வைத்ததில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் பிச்சு எடுத்து
கையில் ஏந்திக் கொண்டு மண்டப
காம்பவுண்ட் சுவரை நோக்கிச் செல்லும்.
.
காக்காய்க்கு வைக்கும் மேட்டர் தெரியாதவர்கள்
இது ஏதோ பிச்சை எடுக்கத்தான்
உள்ளே வந்துவிட்டதோ என்று சந்தேகப்படவும்
சாத்தியப்பாடுகள் உண்டு.
.
என் அம்மாவின் சமையலுக்கு பயந்து…
வானத்தில் வரவரவே எங்கள் வீட்டைக் கண்டதும்
அப்படியே நெட்டுக்குத்தலாய் மேலே போய்
அடுத்த தெருவில் லாவகமாய் இறங்கி விடும் காக்கைகள்.
.
இது அந்த வட்டாரக் காக்கைகள்
ஒன்றுகூடி போட்ட தீர்மானம்….
அதை இன்றுவரை செயல்படுத்தி வருகின்றன.
.
அப்படி தப்பித் தவறி வந்து உட்காரும்
காக்கைகளும் அநேகமாக வெளியூர்
காக்கைகளாகவே இருக்க வாய்ப்பு.
.
காக்காய்களின் மீதான கரிசனத்திற்குக் காரணம்
அவைகளின் மீதான ஜீவகாருண்யம் அன்று.
.
என் அப்பாவை காக்காயின் ரூபத்தில்
காண்கிற “மாளாக் காதல்” அது.
.
அப்பா “காக்காய் ஆவதற்கே”
தான் பரிமாறிய பண்டம்தான்
பிரதான காரணம் என்பதை அறியாத அப்பாவி அவள்.
(அதைப்பற்றி பிறகு ஒரு நாவலே எழுதலாம்)
.
இன்றைக்கும் அதுதான் நடந்தது.
.
ராஜன் கடையில் வாங்கிப்போன இட்லியிலும்…
ஆப்பத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து…
செய்து இரண்டே வாரங்கள் மட்டும்
ஆகியிருந்த தனது பதார்த்தத்திலும் கொஞ்சம் பிய்த்து…
.
“டேய்… கொஞ்சம் காக்காய்க்கு
வெச்சிட்டுப் போயிருடா….” என்றது.
.
உனக்கு வேற வேல வெங்காயம் இல்லையா
என்றேன் கனிவோடு.
.
“நடக்க முடியலடா அதுதான்…. “என்று கெஞ்ச….
அந்த நேரம் பார்த்து எனக்குள் இருந்த
வள்ளலார் கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க….
.
சரி…. சரி…. ஏதாவது கப்புல போட்டுக் குடுத்துத் தொலை….
என்று கடுப்போடு வாங்கி வந்து
வீட்டு காம்பவுண்ட் சுவரில் வைத்ததுதான் தாமதம்.
.
எங்கிருந்தோ எகிறிக் குதித்து வந்து சேர்ந்தது
ஒரு அண்டங்காக்கா.
.
அவ்வளவுதான்….
.
கதவருகில் நின்ற அம்மா கண்ணில்
தாரை தாரையாய் கண்ணீர்….
.
“உங்கப்பாடா”…. “உங்கப்பாடா…. “என்று.
.
எனக்கும் என்னையறியாமல்
கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.
.
இன்னும் சில மணி நேரத்தில்
உசுரை விடப் போகும் அந்தக் காக்கையை நினைத்து.
.
#காக்கைகளைக் காப்போம்#

— முகநூலில் எழுத்தாளர் பாமரன்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.