கடந்த 12 ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், “மக்களிடம் எழுச்சி வரட்டும், அப்ப நான் வரேன்” என்று, திரைப்படப் பாணியில் ஒரு ‘பன்ச் டயலாக் ‘ சொல்லிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினார் ரஜினிகாந்த்..

இன்று (14.03.2020) காலை நாளேடுகளில், “மக்களிடம் எழுச்சி வந்துவிட்டதாக ரஜினி நம்புகிறார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் ஒரு சிற்றூரில் (பெரும்பாலும் புவனகிரி) கட்சியின் முதல் கூட்டம் நடைபெறலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாமும் இதே ஊரில்தான் இருக்கிறோம். இடைப்பட்ட ஒரே நாளில் என்ன புரட்சி நடந்துவிட்டது என்று நமக்குத் தெரியவில்லை.

சரி, இது குறித்து ஏன் நீங்கள் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டுள்ளீர்கள் என்று நண்பர்கள் சிலர் கேட்கின்றனர். அப்படியில்லை. மக்களிடம் சென்று சேரும் கருத்துகள் தவறானவை என்று நாம் கருதினால், அதற்கான மறுமொழியை மக்கள் மன்றத்தில் வைப்பதே, அரசியலில் நேர்மையானது.

45 ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம், ரஜினி பெற்றுள்ள புகழை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மேலும், ஊடகங்கள் அவருக்கு கொடுக்கும் அளவற்ற விளம்பரத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இரண்டு நாள்களுக்கு முன், “இதோ ரஜினி வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார், இதோ ரஜினி லீலா பேலஸை அடைந்துவிட்டார்’ என்றெல்லாம் அளவுக்கு மீறிய வருணனைகள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். ஆதலால் நாமும் மக்களிடம் பேசியே ஆகவேண்டும்.

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்றவர், இரண்டு ஜாம்பவான்கள் உள்ளனர், அவர்களை அகற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என்றும் சொன்னார். எவ்வளவு முரண்! ஜாம்பவான்கள் இருக்கும் இடம் எப்படி வெற்றிடம் ஆகும்?

அறிஞர் அண்ணாவின் ஆட்சியைப் பாராட்டியவர், அடுத்த நிமிடமே, 54 ஆண்டு கால ஆட்சியை அகற்ற வேண்டும் என்றார். அதில் அண்ணாவின் ஆட்சிக் காலமும் அடங்குமே! பிறகு ஏன் அதனையும் சேர்த்து அகற்ற வேண்டும்?

இரண்டு உவமைகள் சொன்னார். அதில் ஒன்று, மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல், சர்க்கரைப் பொங்கல் வைக்கக் கூடாது என்றார். இங்கே மீன் குழம்பு அகற்றப்பட வேண்டிய ஆட்சிக்கும், சர்க்கரைப் பொங்கல் வரப்போகும் ஆட்சிக்கும் பொருத்தப்படுகிறது. அதாவது மீன் குழம்பு தாழ்ந்தது என்பதும், சர்க்கரைப் பொங்கல் உயர்ந்தது என்பதும், பொதுப்புத்தியில் உறைந்துள்ள எண்ணம். அந்தக் கருத்து ரஜினியிடமும் உள்ளது என்பது தெரிகிறது. ரஜினிக்கு ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது, பெரும்பான்மையாகவும், பரந்துபட்டும் , மீன் குழம்பு உழைக்கும் மக்களின் உணவாக இருப்பதும், சர்க்கரைப் பொங்கல், அவாளின் விருப்ப உணவாக இருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

உணவில் கூடவா அரசியல் என்று கேட்கக்கூடாது. எல்லாவற்றிலும் இங்கு சாதியும், மதமும் ஒளிந்து நிற்கின்றன. கும்பகோணம் டிகிரி காபி கடைக்கும், பீப் பிரியாணி கடைக்கும் இடையில் உணவு மட்டுமே வேறுபடவில்லை. சமூக அரசியலும் வேறுபடுகிறது என்பார் பேராசிரியர் அ. மார்க்ஸ்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றால், அவர்களெல்லாம் கட்சியை விட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சத்தில், அதற்கு பாண்டே மூலம் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. உங்களுக்குத்தான் இடம் இல்ல என்று ரஜினி சொன்னாரே தவிர, உங்கள் மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் போட்டியிடும் வாய்ப்பைப் பெறக்கூடும் இல்லையா என்று சமாதானம் சொல்கிறார் பாண்டே.

பதவி ஆசை கூடாது என்று ஒரு பக்கம் அறிவுரை சொல்வது, பிறகு, கொல்லைப்புற வழியாகப் பதவிக்கு வந்துவிடலாம் என்று ஆறுதல் கூறுவது! நேர்மை பற்றி வாய்கிழிய பேசும் இவர்களின் திட்டங்கள் எல்லாம் நேர்மையற்றனவவாக இருப்பதை என்னென்று சொல்வது!

லஞ்சம், ஊழலால் மட்டுமில்லை, கறுப்புப் பணத்தாலும், சிஸ்டம் கெட்டுக் கிடக்கிறது, அதனையும் சேர்த்து ஒழிப்பேன் என்று ரஜினி சொன்னால் அவரது நேர்மையை நாம் பாராட்டலாம். அதற்கான புரட்சியையும் அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். வேறு யாரோ எழுச்சியை ஏற்படுத்தியபின், இவர் அதற்குத் தலைமை தாங்க நினைக்கக் கூடாது.

புரட்சியை யாரும் இறக்குமதி செய்ய முடியாது. போராட்டங்கள் இல்லாமலும் புரட்சியை நடத்த முடியாது.

திரைப்படப் படப்பிடிப்புகளில் நாம் பார்த்திருக்கிறோம். பெரிய நடிகர்கள் வெளியில் அமர்ந்திருப்பார்கள், உள்ளே எல்லா வேலைகளும் முடிந்தபின், உதவி இயக்குனர்கள் நடிகர்களிடம் வந்து, ‘ ஷாட் ரெடி’ என்றதும், இவர்கள் உள்ளே நடிக்கச் செல்வார்கள்.

அரசியலிலும் ரஜினி அதனையே எதிர்பார்க்கிறார். எல்லா வேலைகளையும் ஊடகவியலாளர்களும், மன்ற உறுப்பினர்களும் முடித்துவிட்டு, ரஜினியிடம் வந்து, ‘புரட்சி ரெடி’ என்று சொன்னவுடன், இவர் களத்துக்கு வந்துவிடுகிறேன் என்கிறார்.

ஆறுமுக நாவலர் எழுதிய கதை ஒன்று. நம் திரைப்படத்த்தில் வந்துள்ளது. எல்லோரும் மலையைத் தூக்கி என் தோள் மீது வையுங்கள். நான் தூக்குகிறேன் என்பார் நடிகர் செந்தில். அப்படித்தான் இருக்கிறது ரஜினியின் பேச்சு! DB;

திரைப்படத்தில் பாட்ஷாவாக இருந்தவர் அரசியலில் செந்திலாக ஆகிவிட்டார்!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.