தியாகராஜ பாகவதர் குடும்பம் வறுமையில் வாடுவதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1 லட்சம் நிதி உதவி : செய்தி
காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது?
தியாகராஜ பாகவதர் கொடிகட்டி பறந்த 1950களில் அவரை போல் வாழ்ந்தவர் யாருமில்லை, தங்க தட்டில் உண்டு, பன்னீரில் வாய்கொப்பளித்து, அந்த மதிப்பான காரில் ஏறி, அரண்மனை போன்ற வீட்டில் இருந்து அவர் ராஜவாழ்வு வாழ்ந்த பொழுது, யாரும் கண்டுகொள்ளா அபலையாய் வறுமையில் சிக்கி நீண்ட கிராப் மண்டையுடன் வாய்ப்பு கேட்டு அலைந்தவர் எம்.ஜி ராமசந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.
இன்று அவர் கட்சி எம்.எல்.ஏ பாகவதர் குடும்பத்துக்கு நிதி அளிக்கின்றார்
கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம்
1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி, காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். எம்ஜி ராம்சந்தர் உருவாகியிருக்க மாட்டார்.
சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் முதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை.
பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.
பிண்ணணிப் பாடலே படத்திற்கு பிரதானம் என்ற தொடக்க காலங்களில் தன் காந்தர்வ குரலால் திரையுலகினை கட்டியாண்ட சக்கரவர்த்தி.
ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு உண்டு , எம்.கே தியாகராஜ பாகவதர் பற்றி அவரது ரசிகர்களிடம் கேட்டால் அப்படி உருகி சொல்வார்கள்.
அப்படி பெரும் கூட்டம் அவருக்கு இருந்திருக்கின்றது.
அக்கால முடிதிருத்துவோருக்கும் இளைஞர்களுக்கும் வரும் தகராறே இப்படித்தான் இருக்குமாம்.
“எனக்கு பாகவதர் மாதிரி முடிவெட்டணும்”
“அது அவர் முடிக்கு தான் வரும்,உங்க முடிக்கெல்லாம் வராது..சொன்னா கேளு இல்லண்ணா மொட்டை அடிச்சி விட்டுருவேன்”
இன்னும் சில வாலிபர்கள் கொஞ்சம யோசித்து அடிக்கடி முன் தலையை சுவரில் உரசிகொண்டே இருப்பார்களாம். காரணம் பாகவதருக்கு முன்நெற்றி வழுக்கை.
அக்கால கொண்டையிடும் (குடுமி) ஆண்களில், இவரைப்போல் கிராப் வெட்டி கிட்டதட்ட விகார அலங்கோலமாகி பின் மொட்டையிட்டவர்களும் உண்டு
அக்கால எம்.ஜி.ஆர், கமலஹாசன், இம்ரான்கான் போல இவருக்கும் எண்ணெற்ற பெண்கள் கடிதம் எழுதுவார்களாம், அவருக்காக காத்திருந்த பெண்கள் ஏராளம்.
ஒரு கலெக்டர் மகள் இவரிடம் பாடல் கற்றுகொள்ள ஏற்பாடு, முதல் நாள் பாடல் வகுப்பு முடியும் போது கலெக்டர் தலையில் இடிவிழுந்தது, “எனக்கு பாகவதரை திருமணம் செய்து வைக்காவிட்டால் சாவுதான்” என்றாள் மகள்
உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம்.
“பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்” என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாட்கள் உண்டு.
அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீககுரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர்
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்துவைத்துக் கொள்வார்களாம்.
இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். .
ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிப்பர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். ஒருசமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க நேரிட்டது. பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.
ரயிலையே நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.
வெள்ளைக்குதிரை, அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள்.
இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி. பார்த்து கொண்டிருக்கும் பெண்கள் சொல்லுவார்களாம் “பாகவதர பாத்து ஓடுதாபாரு நானா இருந்தா ஓடிப்போய் குதிரைமேல ஏறிருப்பேன்”. ஹரிதாஸ் படம் தொடர்ந்து மூன்று தீபாவளிகள் தாண்டி ஓடிய பெருமையுடையது.
இன்னொரு படத்தில் “வதனமே சந்திரபிம்பமோ” பாடிகொண்டே 20 அடி தள்ளி நிற்கும் காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுப்பாராம், தியேட்டரில் ஆரவாரம் கூரை பிளக்குமாம்.. (அட பாவமே ஒரு பறக்கும் முத்தத்திற்கா…இது சன்னி லியோன் எல்லாம் தமிழில் நடிக்கும் காலமல்லவா நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் 🙂 )
பாகவதர் தங்க தட்டுலதான் சாப்டுவாராம், பன்னீர்ல வாய் கொப்பளிப்பாராம், அரேபியா செண்ட் போடுவாராம், காஷ்மீர் குங்கும பூவுல தான் தூங்குவாரம் இன்னும் பல செய்திகள் வந்துகொண்டே இருந்தது.
திரையுலகம்,நாடக உலகம், இசை உலகம் என மூன்று உலகங்களையும் ஆண்ட, தமிழக நெஞ்சங்களை எல்லாம் கொள்ளையடித்த அவரின் வாழ்வு ஒரு கொலைவழக்கில் தலைகீழானது. (இப்பொழுதெல்லாம் கொலை செய்து தப்புவது எவ்வளவு எளிது)
நீதிமன்றமும், பிரபல வக்கீல் எத்திராஜும் (எத்திராஜ் கல்லூரி நிறுவணர்) அவர் சொத்துக்களை எல்லாம் கரைக்க, மிக பெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி போல வாழ்ந்த பாகவதர், மிகப் பரிதாபமாக குடிக்கு அடிமையாகி திருச்சி காவேரி ஆற்று கரையோரம் 50 வயதுக்குள்ளாக அனாதையாக செத்துகிடந்தாராம்.
சினிமா கலைஞர்கள் கோடியில் புரளமுடியும் என முதலில் நிரூபித்து காட்டிய , பெரும் ரசிகர் பட்டாளமும், கிட்டதட்ட அரசனுக்கு உண்டான வாழ்வும் வாழ்ந்த பாகவதர் கல்லறை திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் அனாதையாய் இருக்கின்றது
ஒரு நொடியில் மாறுவதுதான் வாழ்க்கை
நிலாவில் இனி யாரும் கால் பதிக்கலாம், ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் இடத்தை யாரும் மறைக்கமுடியாது, அப்படி ஆயிரம் ஸ்டார்கள் வந்தாலும் பாகவதருக்கு இருந்த மவுசே தனி.
காலம் பொல்லாதது, கொடுமையானது, இரக்கமில்லாதது மிககொடூரமாக எதையும் செய்யும் என்பதற்கு பாகவதர் வாழ்வு பெரும் உதாரணம், நொடிப்பொழுதில் யாரையும் கோபுரத்திலும் வைக்கும், கொண்டாட வைக்கும், ஒரே நொடியில் குப்பைமேட்டிலும் வீசும்.
அப்படி கோபுரத்தில் வாழ்ந்து,குப்பை மேட்டில் வீசபட்ட உன்னத கலைஞர்களில் ஆண்களில் பாகவதரும் பெண்களில் சாவித்திரியும் மறக்கமுடியாதவர்கள்.
தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். பெரும் வாழ்க்கை தத்துவத்தை அனுபவித்து சொல்லி 49 வயதிலே விடைபெற்றவரும் அவர்தான்.
—முகநூலில் ஸ்டேன்லி ராஜன்