1. மாதா பிதா இளையராஜா தெய்வம்
2. அம்மா பாடிய தாலாட்டுகளில் தூங்கிய குழந்தைகளைவிட இளையராஜா பாட்டு கேட்டு தூங்கிய குழந்தைகளே தமிழகத்தில் அதிகம்.
3. இளையராஜாவால் பலர் மனப்பிறழ்வில் இருந்து தப்பித்தார்கள்.
4. தூக்க மாத்திரைக்கு அடிமையாகாமல் பலர் தப்பியதற்கு காரணம் ராஜாவின் பாடல்கள்தான்.
5. கஞ்சா மது மாது எல்லாம் உயிரை உருக்கும் போதை, ராஜாவின் இசை ஆன்மாவை உருக்கும் போதை.
6. காதலிக்கும் பலருக்கு முதல் காதல் கடிதம் இளையராஜா பாடல்கள்தான்.
7. பயணங்களின் தொலைவை மறக்க வைக்கும் சாகசம் ராஜாவின் இசைக்கே உண்டு.


8. ராஜா இசைக்க ஆரம்பித்தார், இசைத்தட்டுகளில் மண் வாசம் பதிவானது.
9. ஒவ்வொரு முறை ராஜாவின் ஹார்மோனியம் இயங்கும் போதும், ஏதோ ஒரு இதயம் ஆசிர்வதிக்கப்படுகிறது.
10. வெள்ளை யானை ராசியானது என்பார்கள்.. அப்படித்தான் இளையராஜாவும்.
11. ராஜா பாட்டுக்கு என்ன ராயல்டி கொடுக்க முடியும், ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவரிடம் இருந்து அள்ளிக்கொண்டதற்கு பாதி தமிழ்நாட்டை பட்டா போட்டு ராஜாவுக்கு கொடுத்தாலும் போதாது.
12. விழி இழந்தோருக்கு செவியால் உலகை காட்டிய உன்னதன் இந்த ராகதேவன்.
13. இளையராஜா இசைக்கத்தொடங்கினார், தமிழ்நாடே இந்த மேய்ப்பனின் பின் ஆட்டுக்குட்டியாக திரண்டது.
14. ராஜாவுக்கு எல்லை கிடையாது, மொழி கிடையாது. இசை போலவே!
15. ராஜா ஹீரோக்களுக்கு இசையமைக்கவில்லை, இவரின் இசையால் ஹீரோக்கள் உருவானார்கள்.
16. ஆஸ்கர் இதுவரை ராஜாவை வாங்கியதில்லை.
17. தூக்கம் தொலைத்த இரவில் நினைவுக்கு வந்து தொலைக்கும் முதல் காதலியின் முகம் இளையராஜாவின் இசை.
18. தாய்ப்பால் சுரக்கும் மார்பில் முட்டிக்குடித்த குழந்தையின் ஒட்டியிருக்கும் எச்சிலின் ஈரம் ராஜாவின் இசை.
19. அதிகாலை சூரியனின் இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் குழையும் அந்த புள்ளி ராஜாவின் இசை.
20. கடவளை பார்த்திருக்கிறீர்களா? இல்லை ராஜாவையேனும்??!
21. ராஜா ராஜா தான். ஏன்.. ஏன்னா அசல் எப்பவுமே ஒன்னுதான்.
22. இங்க் அடித்து கொண்டாடி கடைசியாக கழற்றி பெட்டிக்குள் புதைத்து வைக்கப்பட்ட பத்தாம்வகுப்பு சட்டைதான் இளையராஜாவின் இசை.
23. கண்ணீரின் கரிப்பில் உணரும் உப்பு ராஜாவின் இசை.
24. முத்தத்தின் சிலிர்ப்பில் உணரும் சில் – ராஜாவின் இசை
25. குழந்தையின் மழலையில் தெறிக்கும் அழகு ராஜாவின் இசை
26. கடவுள் பூமிக்கு வந்தார், இளையராஜா இங்கிருப்பது தெரிந்ததும் தனக்கு வேலை இல்லையென கிளம்பிவிட்டார்.
27. ஏழல்ல ஸ்வரம் – 5! அது இ ளை ய ரா ஜா!
28. பூமிக்கு இளையராஜாவுடன் சேர்த்து இரண்டு நிலவு
29. இளையராஜாவின் இதயம் தான் உலகின் மிகப்பெரிய இதயம். அதுதான் எவ்வளவு பேரை ஆசிர்வதிக்கிறது.
30. பாடல்களை உருவாக்குவதில்லை இளையராஜா, செதுக்கிறாரா / நெய்கிறாரா / வரைகிறாரா என்பதுதான் கேள்வி!?
31. இரவில் கேட்கும் இளையராஜா பாடலுக்கு போதை அதிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
32. காதலி பிரிந்து ஊருக்கு செல்லும் போது கொடுக்கும் கடைசி முத்தத்தின் அழுத்தம் இளையராஜாவின் இசை.
33. அம்மாவின் புடவையை போர்வையாக போத்தி தூங்கும்போது கிடைக்கும் வெப்பத்திற்குள்தான் ராஜா எங்கோ ஒளிந்திருக்க வேண்டும்
34. இளையராஜா இசைக்க ஆரம்பித்த பிறகு மனிதர்களின் ஆயுட்காலம் கூடியிருக்கிறது.


35. ராஜாவின் கனவில் கடவுள் வந்தார். சில வரங்கள் வேண்டி இருக்கலாம்!
36. ராஜாவின் எந்தப்பாட்டு உங்களுக்கு பிடிக்கும் என கேட்கிறார்கள். எந்தப்பாட்டு பிடிக்காது என கேட்டாலே பதில் சொல்லத்தெரியாது. இதில் பிடித்தது எது என கேட்டால்!!
37. நாம் நட்டு வைத்த செடியில் பூக்கும் முதல் பூவின் முதல் இதழ் இளையராஜா.
38. மனிதன் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் முன் அடிமையானது, இசைஞானிக்கு. அவை நிரந்தரமற்றவை, இவர் நிரந்தரமானவர்.
39. ராஜாவுக்கு போட்டி கிடையாது. ஏனென்றால் அவர் பந்தயத்தில் இல்லை. பந்தயத்தில் ஓடுபவர்களின் எல்லைகளை தீர்மானிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
40. ராஜாவுக்கு திமிர் அதிகம் என்பார்கள். ஆம், இவருக்கு திமிர் இல்லாவிட்டால்தான் ஆச்சர்யம் என்பது திமிருக்கே தெரியும்.
41. இளையராஜாவின் குரலில் ஒரு தாயை இழந்த பிள்ளையின் அழுகுரல் ஒளிந்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
42. ராஜாவின் வருகைக்குப்பின் காதல் திருமணங்கள் கூடின, காதல் தோல்விகளும் தான்
43. ராஜா கம்போசிங் செய்யாத நாட்களில் இசை உறங்குவதாக கேள்வி!
44. ராஜாவின் இசையால் தீர்க்க முடியாத நோய்கள் தீரும், பில்லி சூன்யம் ஏவல் உடையும் என்பது மலையாள மாந்த்ரீக வாக்கு
45. காசிக்கு போனால் பாவம் கழியும் என்பது நம்பிக்கை. இளையராஜாவின் இசையை கேட்டு கண்ணீர் விட்டழுது பாவத்தை போக்க முயல்வதும் சிலர் நம்பிக்கை.
46. காசிக்கு எல்லாம் துறந்து போனவர்கள், இளையராஜா இசையை துறக்க முடியாமல் அவர் பாடல் ஒலிக்கும் டேப்ரெக்கார்டரை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதை நேரில் பார்த்திருக்கிறேன்.
47. அனாதை இல்லங்களில் ஒலிக்கும் கடவுள் உள்ளமே கருணை இல்லமே பாடலை கேட்டு கடவுள் பலமுறை மனம் விட்டு தேம்பி தேம்பி அழுததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
48. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான் பாடல் இல்லாத திருமண மண்டபங்களில் கடவுளின் மொய்க்கவர் மிஸ்ஸிங்!
49. ஐய்யப்பனுக்கு அரிவராசனம், எனக்கு கற்பூர பொம்மை ஒன்று!
50. புல்லாங்குழல் கவிதை பாடி கேட்டிருக்கிறீர்களா? வளையோசை பாடல் கேளுங்கள்.
51. இளமை இதோ இதோ பாடல் ஒலிக்காத நாடுகளில் புத்தாண்டு சற்று தாமதமாகத்தான் பிறக்கிறது.
52. திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு போகும் யார் வேண்டுமானாலும் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை ஒலிக்க விட்டு கேட்கலாம். ஐயப்பன் கூட அவ்வப்போது வரிசையில் வருவதாக தகவல்
53. இந்த இரவு முடிவதும், பகல் விடிவதும் எப்படி இயல்போ அப்படித்தான் ஒரு இளையராஜா பாட்டுடன முடிவதும், மற்றொரு பாட்டோடு விடிவதும்.
54. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத விஷயங்கள் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? உண்டென்றால் அந்த பட்டியலில் முதலாவதாக தென்றல் வந்து தீண்டும்போது பாடலை சேர்க்கவும்.
55. இளையராஜாவின் தென்மதுரை வைகை நதி பாடலை கேட்டு கௌரவர்களும் பாண்டவர்களும் தேவலோகத்தில் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டார்களாம்.
56. எந்த நாட்டுக்கு போனாலும் மோடி பாடும் பாடல் சொர்க்கமே என்றாலும் நம்மூர போல வருமா பாடல் என ANI செய்தி
57. நோட்டு புத்தகங்கள் உள்ளே பாட்டு புத்தகங்கள் வைத்து படிக்கவைத்த பாவலர் ராஜா!
58. ராஜாவுக்கு ஏன் கோபம் வருகிறது என்றால், அவர் ராஜா அதனால் கோபம் வருகிறது என்பேன்.
59. அட்சயபாத்திரம் நம்பாதோரும் ராஜாவின் ஆர்மோனியத்தை நம்புவர்.
60. ராஜாவின் முதல் கம்போசிங்கில் கரன்ட் போனதாம், அன்று முதல் இன்று வரை கரன்ட்டிலேயே இருக்கிறார் ராஜா.
61. ராஜா பாடல்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து பதிவு செய்து ஒலிக்கவிடும் ஊர்ப்பக்கத்து பஸ் டிரைவர் கண்டக்டர்கள் முன் எப்எம் ஸ்டேஷன்கள் எல்லாம் எம்மாத்திரம்??
62. ராஜா பாடல்கள் நிகழ்த்திய அற்புதங்களை பட்டியல் போட்டால் பல பேர் என்னை மூடநம்பிக்கைவாதி பட்டியலில் சேர்க்கலாம். ஆம் அவர் விழுந்தவர்களை எழுந்தும், எழுந்தவர்களை பறக்கவும் வைத்த வல்லவர். என் ராஜா – ஆமென்.
63. கிராம்போன் ரெக்கார்டுகளில் இளையராஜா பாடல் ஓடும் போது, கிராம போனாகியது!
64. காதல் தோல்வியில் மது, புகை என போகாமல் இளையராஜா இசையை தேர்ந்தெடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
65. இளையராஜா பாடல்களை பதிவுசெய்து கொடுக்கும் மியூசிக்கல்ஸ் வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்போது எப்படி இருப்பார்கள் என யோசிக்கும் போது ஒரு துவர்ப்பு ருசி தொண்டை கடக்கிறது.
66. இறந்து போன ஸ்வர்ணலதா இன்னும் வாழ்வது இளையராஜா இசையால்தான்.
67. மும்மூர்த்திகள் வரிசையில் ராஜாவை வைக்க சங்கீத சபாக்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். சபாக்கு தெரியுமா சங்கீத வாசனை?
68. ராஜா ராஜா என ஏன் உருகுகிறாய் என கேட்கிறார்கள். சுக்கு நூறாய் உடைந்தவனை ஒட்டி வைத்து உரு கொடுத்தவனுக்கு உருகாமல் வேறாருக்கு உருகப்போகிறேன்?
69. எங்கோ இருக்கும் நமக்கான ஒரு இதயத்தை என் அருகே வைத்து துடிக்க வைத்து கேட்பது போல் உணர்கிறேன்.. தூரத்தில் ஒலிக்கும் ராஜா பாடலை!
70. ஏர்போர்ட்டுகளில் கடத்தி வரும் தங்கத்தை வைரத்தை பிடிக்கிறார்கள், போனில் ஃபோல்டர்களில் ஒளிந்திருக்கும் ராஜா பாடல்களை விட்டுவிடுகிறார்கள். மடையர்கள்.
71. ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா. யார் சொன்னாங்க? ராஜாவே சொல்லிட்டடார்.
72. ராஜாவை நம்பினோர் கைவிடப்படார். ஆதாரம் – மோகன், ராமராஜன், கார்த்திக் இன்னும் பலர்
73. உன் குத்தமா என் குத்தமா என ராஜா பாடத்தொடங்கினார். மூடியே கிடந்த பல டிரங்பெட்டிகள் திறந்து கொண்டன.
74. ராஜா தும்மினால் பல்லவி, இருமினால் சரணம்.
75.இளையராஜா இல்லையென்றால் யார் இசைக்கு மோட்சம் கொடுத்திருப்பார்ரகள்?
76. இதயம் லப் டப் என்றா துடிக்கும்? எனக்கு ரா ஜா ரா ஜா என்றே துடிக்கிறது. இதற்கு இசையராஜாபோபியா என பெயரிட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
77.இளையராஜா எனும் இசை கொரோனா தொற்றாதோர் யார் உளர். எனக்கு இல்லை என்பார்கள், சோதித்துப் பார்த்தால் தெரியும். அவர்களும் asymptomatic Ilayaraja affected என்பது!

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙂

குறிப்பு: இந்த ஸ்டேட்டஸை காப்பி பேஸ்ட் பண்ணி என் பெயர் போடாமல் போடுபவர்கள் மேல், காப்பிரைட்ஸ் இல்லாமல் பாட்டு போடும் நபர்கள் மேல் இளையராஜாவுக்கு வரும் அதே கோபம் எனக்கும் வரும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.