ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக நினைவிலிருக்கிறது.
ஆம் பசி மனிதனின் கண்ணை மறைக்கிறது. எத்தனையோ கொலை, குற்றங்கள் நாளுக்கு நாள் நடந்த வண்ணமிருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மூன்று வேளை உணவு உத்திரவாதத்திற்காக மக்கள் அல்லல் படும் துன்ப வேதனைகளை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என சொல்வார்கள் அப்பேர்பட்ட பசி வந்தவனின் ஒரு சிறுகதை தான் பிரபஞ்சனின்
‘ஒரு மனுஷி’. சாதாரண மனிதர்களை,மனித மனங்களை பிரபஞ்சனுக்கு நிகராக நேசித்தவர்கள் தமிழ் இலக்கிய உலகில் குறைவானவர்களே.
சிறுகதையிலிருந்து ஒரு பகுதி…
“அம்மணியம்மா ஆப்பக் கடையிலிருந்து கொலையே நிகழ்வது போன்ற பெருங் கூச்சல் எழுந்து, சேகரின் தூக்கத்தைக் கலைத்தது. அவன் எழுந்து, பாயில் அமர்ந்து கண்களைக் கசக்கிவி்ட்டுக் கொண்டான் கண்கள் எரிந்தன. இடுப்பில் தொங்கி வழிந்த கைலியைச் சரி செய்துகொண்டான். கையை ஊன்றிக் கொண்டு எழுந்தான். தலை சுற்றுவதுபோல் இருந்தது. முந்தின இரவு சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. கூஜாவில் இருந்து தண்ணீர் கவிழ்த்துக் குடித்தான். வயிறு குளிர்ந்ததுமாதிரி இருந்தது. ஆணியில் மாட்டியிருந்த சட்டைப்பையைத் துழாவினான். ஒரு சார்வினார் சிகரெட்டும் முப்பத்தஞ்சு பைசாவும் இருந்தன. சட்டைப்பைக் கொண்டு, சட்டையையும் மாட்டிக்கொண்டு கிழே இறங்கி வந்தான்.
என்னா? போட்டோக்கார்ரே… சௌக்கியமா கீறியா?“
எட்டாவது போர்ஷனில் இருந்த எல்லம்மா கேட்டாள். வீட்டுக்கு வெளியே குத்துக்காலிட்டுக்கொண்டு மரச்சீப்பால் தலைவாரிக்கொண்டிருந்தாள் அவள். ஒவ்வொரு இழுப்புக்கும் சற்றே நரை கலந்த, சுண்ணாம்புக் காரை படிந்த தலைமுடிகொத்துக்கொத்தாக வந்துகொண்டிருந்தது. மயிர்க் கற்றைகள் சுருள் சுருளாகத் தரையில் உருண்டன.
“உம்“ என்றான் சேகர்.
“எம்மா நாளாச் சொல்றேன். என்னை ஒரு போட்டோ எடுக்க மாட்டேங்கறே… சின்னதா, அறியாப் பொண்ணுங்களை மட்டும்தான் எடுப்பே போல…“
“எடுக்கறேன். எடுக்கறேன்.“
கேமரா இருந்த பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான். அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.
கேமராவுக்கு இன்றைக்காவது ஆபீசில் பணம் வாங்கி, பிலிம் வாங்கிப்போட வேண்டும். மத்தியானத்துக்கும் இரவுக்கும் சாப்பிடக் காசு தயார் பண்ண வேண்டும். ஒரு பாக்கெட் சிகரெட் மூன்று ரூபாய் விற்கிறது.
கோடம்பாக்கம் போகிற பஸ் வந்து நின்றது. கோடம்பாக்கத்தை நினைக்கிறபோதெல்லாம் விஜயாவின் ஞாபகம் வராமல் போகாது. விஜயா அவள் காதலன் பக்கிரியுடன் கோடம்பாக்கத்துக்கு வந்த புதிதில் அவளை அவன்தான் படம் எடுத்தான். சில சினிமா பத்திரிகைகளுக்கு அவள் ஸ்டில்லைக் கொடுத்துப் பிரசுரிக்கவும் செய்தான். எப்போது சென்றாலும் ஏதாவது கொடுத்து உபசரிக்க அவள் தயங்குவது இல்லை. ஏற்கெனவே புகழ் பெற்ற மற்றும் புகழ்பெறத் துடிக்கிற விஜயாக்கள் நிறையப் பேர் இருந்ததால் விஜயாவின் பெயரை லாவண்யா என்று மாற்றி அமைத்ததும் சேகர்தான்.
அட, சேகரா! வா… வா… இப்பத்தான் வழிதெரிஞ்சதா?“ என்று வரவேற்றாள் விஜயா. இரும்பு நாற்காலியில் அமர்ந்து, பையைக் கீழே வைத்துவிட்டு, “கொஞ்சம் தண்ணீ கொடு“ என்றான்.
விஜயா, மண் கூஜா தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள் ‘மடக் மடக்‘ கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்தான் சேகர்.
“எப்படி இருக்கே?“ என்று கேட்டாள் சேகர்.
“ஏதோ காலம் போவுது… நீதான் என்னை மறந்துட்டே…“
“அதெல்லாம் இல்லை. ஒரு விஷயம். புதுசா ஒரு பத்திரிகை வருது. சினிமாப் பத்திரிகைதான். படம் வேணும்… ரொம்பப் பெரிய கம்பெனி, கலர் கலரா படம் வேணும்னு சொல்றாங்க…“
“எடுக்கப் போறியா?“
“ஏன்?“
“முகம் கழுவணும்… கொஞ்சம் மேக்கப் பண்ணிக்கணும்… துணியை மாத்திக்கணும்…“
“அந்தப் பச்சை கவுண் இருக்கி்ல்லை. அதைப் போட்டுக்க…“
பையைத் திறந்து கேமிராவை வெளியே எடுத்தான் சேகர்.
“எப்படி வேணும்? செக்ஸியாவா, சாதாரணமாவா?“
“இரண்டுமா“
அவள் பல விதங்களில் குனிந்தும், கைகளை மேலே தூக்கியும், பக்கவாட்டில் நிமிர்ந்தும், குப்புறப் படுத்துக் கொண்டும், நிமிர்ந்து படுத்துக் கொண்டும், சிரித்தும், அழுதும், உதட்டைக் கடித்துக் போஸ் கொடுத்தாள். பளிச் பளிச்சென்று பிளாஷைத் தட்டிக் கொண்டிருந்தான் சேகர்.
தொழி்ல் எப்படி நடக்குது விஜயா?“
“நொண்டுது. படத்துக்குப் போயி பத்துநாள் ஆகுது சேகர். ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னும் இந்த மாடி வீட்டு வாடகை கூட தரல்லை.“
“பார்ட்டி ஒண்ணும் வரல்லையா?“
“நாலுநாள் ஆச்சு, ஒருத்தர் வந்தாரு. ரூபாய் ஐம்பது கிடைச்சுச்சு, இடம் வசதி இல்லையே? கட்டில் இல்லை. மெத்தை இல்லை என்க்கும் முப்பது ஆயிருதே? அதுவே அதிகம். அதை வச்சுத்தான் நாலு நாளைத் தள்ளிட்டேன்…“
“கந்தசாமியைக் கவனிச்சுக்கணும்…“
“அந்தக் களவாணியைச் சொல்லாதே! ஒருத்தரு ஐம்பது கொடுத்தா, கமிஷன் பத்தை எடுத்துக்கிட்டு நாப்பதுதான் தரான். அப்புரம் போலீசுக்காரனுக்கு அஞ்சு, பேட்டை பிஸ்தா ஒருத்தனுக்கு அஞ்சு. எல்லாம் போக என் கைக்கு வர்றது முப்பதுதான். அதை வச்சு நான் விளக்கேத்துவேனா, கஞ்சி குடிப்பேனா, நீயே சொல்லு…“
சேகர் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் வரலட்சுமி அக்கா வந்தாள்.
“என்னடி தலைபோவற அவசரம்னு பணம் வாங்கிட்டு வந்தே, பார்த்தா, யாரோ ஒருத்தன் பையை எடுத்துகிட்டுப் போறானே என்ன சங்கதி?“
“ஒன்றுமில்லைக்கா, ஒரு சினேகிதக்காரு.“
“சினேகிதன் பணம் கொடுக்கலையா?“
“இல்லை. நான் தான் கொடுத்தேன்.“
“தலைகீழா இருக்கு?“
“நல்ல மனுஷங்கா, படம் எடுக்கிறவரு. நான் மொதோமொதோ, இங்க வந்தப்போது என்னை படம் எடுத்தவறு இவருதாங்கா.“
“இப்பவும் எடுத்தானா?“
“எடுத்தாறு. ஆனா…“
“ஆனா?“
“கேமராவில் ஃபிலிம் இல்லாமே எடுத்தாரு“
அவனைச் சும்மாவா விட்டே?“
“பாவம்கா. கண்ணைப் பார்த்தாத் தெரியுதே. சாப்பிடல்லைனு…! சோத்துக்காக நல்ல மனுஷன் பொய் சொல்றாரு, பாரு…! அதுதான்…!“
விஜயா எழுத்து பூட்டு சாவியை எடுத்தாள்.
“சாப்பிடல்லைக்கா. பாய் கடைவரைக்கும் போய் வந்துடறேன்!“
“இந்நேரம் சோறு இருக்காதேடி“
“பிரியாணி இருக்குமேக்கா, வரியா?“
நான் துன்னுட்டேன். நீ போ…“
வீட்டைப் பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினாள் விஜயா தெருவில் வெயில் குறைந்திருந்தது.
–முகநூலில் அமுதன் தேவேந்திரன்