1877ம் ஆண்டு.. நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினிச்சாவு மட்டும் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தது. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது மகள் ஐடா ஸ்கடர்!”

ஒரு நள்ளிரவு கதவு தட்டப்படுகிறது.. 14 வயது சிறுமி ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். “அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்… உடனே வாருங்கள்” என்றார். ஐடாவோ, “நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்கள் அவரை எழுப்பறேன்” என்கிறார்.

“இல்லையம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்கள் பிராமணர்கள். பெண்ணை ஒரு ஆண் தொட அனுமதி இல்லை” என்று சொல்லிவிட்டு தலையை தொங்க போட்டுக் கொண்டு நகர்ந்துவிடுகிறார். சிறிது நேரத்தில் மற்றொருவர் கதவை தட்டுகிறார்.. அவர் ஒரு முஸ்லிம்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, “வேண்டாம்மா… நாங்கள் இஸ்லாமியர்கள்… எங்கள் பெண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது” என்று அவரும் சோகத்துடன் திரும்பிவிட்டார்.

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் நடமாடுகிறாள் ஐடா… மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் கொண்டு செல்லப்படுவதை பார்த்து தேம்பி தேம்பி அழுகிறாள்.. “என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களைக் காப்பாற்றுவேன்” என சபதமேற்கிறாள்!

திரும்பவும் அமெரிக்கா சென்று மருத்துவம் படிக்கிறார்.. இளம்வயது ஐடாவின் அழகையும், அறிவையும், சக தோழர் ஒருவர் விரும்பி கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்.. ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததும் அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி உதவி கேட்கிறார்.. அதன்படி நிதி சேர்கிறது… இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின் முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

மருத்துவமனை கட்டும் பணி ஒரு பக்கம் துவங்குகிறது.. மற்றொரு பக்கம், சோதனைகூடம், கருவிகள் எதுவும் இல்லாமல் காடுகள், மேடுகள், குடிசைகள், கூடாரங்கள் என ஊர் ஊராக ஓடி மருத்துவம் பார்க்கிறார்.. இறுதியில், 40 படுக்கை வசதி, நோயாளிகளுக்கு இலவச கூடங்களுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்கென அந்த மருத்துவமனையை கட்டி முடித்தார் ஐடா! அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து, கம்பீரமாய் உயர்ந்து.. நூற்றாண்டை கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் புகழ்பெற்ற வேலூர் “சிஎம்சி” மருத்துவமனை!!

இந்த பெண் யார்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே வழிக்காட்டி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!!

ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது.. தேசிய மருத்துவர் தினமான இன்றைய நாளில், இந்த வெள்ளுடை தாய்க்கு மட்டுமில்லை.. உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து மனித தெய்வங்களுக்கு என் கோடி நன்றிகள்!!

ஹேம வந்தனா

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.