விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது
கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி

இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக இக்கவிதை அமைந்தது.

தமிழில் சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியின் பிரிவைப் பாடும் பாடல்களைப் பாலைத்திணை என்று அழைப்பார்கள். அது பாலைவனத்துக்கு நிகரான துயர் மிகுந்தவை.

இவ்வுலக சரித்திரத்தில் பாலைத்திணைப் பிரிவுத் துயரில் படாதபாடு பட்டவர்கள், இன்றும் படுபவர்கள் தமிழ்முஸ்லிம்கள்தாம் என்றால் அது மிகை இல்லை என்றே சொல்லத் தோன்றும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் படித்தவர்களாய் இருக்கவில்லை. அப்படியே படித்துமுடித்து வெளிவந்தாலும் வேலை கிடைக்காத நிலையே தமிழ்முஸ்லிம்களுக்கு அன்று அதிகம் இருந்தது.

அது இன்றும் நீடிக்கும் அரசியல்தான் என்றாலும் அன்று அது ஆகக் கொடூரமாய் இருந்தது.

அன்று தமிழ்நாட்டில், வேலைக்குச் சேரவேண்டும் என்றால் சிபாரிசு தேவை. சிபாரிசுக்கு ஏற்கனவே பணியில் இருக்கும் தமிழ்முஸ்லிம்கள் தேவை. அப்படியான அமைப்பு ஏற்கனவே பதவிகளில் இருந்த சமூகத்தினருக்குத்தான் பல்கிப் பெருகி இருந்தது. ஆகவே தமிழ்முஸ்லிம்கள் கல்வியிலும் அரசுப் பணியிலும் பின் தங்கிப்போனார்கள்.

அன்று, பெரும்பாலான தமிழ்முஸ்லிம்கள் மளிகைக்கடை வைத்திருப்பார்கள், கறிக்கடை வைத்திருப்பார்கள், மீன்கடைகளில் வேலை பார்ப்பார்கள்.
இந்நிலையில், அவர்களுக்கு இருந்த ஒரே சம்பாதிக்கும் வழி திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதுதான்.

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று அறத்துப்பாலில் வள்ளுவன் சொன்னான். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கொன்றை வேந்தனில் ஔவை சொன்னாள்.

அதை எந்தத் தமிழன் கேட்டானோ கேட்கவில்லையோ, தமிழ் முஸ்லிம்கள் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். ஆகையினாலேயே, முதலில் கப்பல் ஏறினார்கள் இப்போதெல்லாம் விமானம் ஏறுகிறார்கள்.

ஆரம்பத்தில் சிங்கப்பூர், மலேசியா, சிலோன், பர்மா, செய்கோன் என்று ஆண்கள் மட்டுமே செல்வார்கள். சம்பாதித்து அவ்வப்போது வீட்டுக்குப் பணம் அனுப்புவார்கள். சில காலம் பணமே அனுப்பமாட்டார்கள். சில நேரம் அங்கேயே செத்தும் போயிருப்பார்கள்.

பெண்கள் எல்லோரும் கணவனுடன் சேர்ந்து வாழாத தனித்த துயர வாழ்க்கையையே எப்போதும் வாழ்வார்கள்.

தாயும் கணவன் அருகின்றித் தனித்திருப்பாள், அவளோடு சேர்ந்து மகளும் கணவன் அருகின்றித் தனித்திருப்பாள். இந்தத் தொடர்கதை இன்றும்கூட நீடித்தவண்ணமாய்த்தான் இருக்கின்றது.
இவர்கள் பெரும்பாலும் கடலோரக் கண்ணீர்க் கவிதைகளைகளாய் தமிழ்நாட்டின் கடலோரங்களில்தான் பெருமளவு வாழ்கிறார்கள்.

கப்பலுக்குப் போன மச்சான்
கண்ணிறஞ்ச ஆசமச்சான்
எப்பத்தான் வருவீங்க
எதிர்பார்க்கின்றேன்
நான் இரவும்பகலும்
தொழுதுதொழுது கேட்கிறேன்

இந்தப்பாடலைக் கேட்டுக் குமுறிக் குமிறி அழுத தமிழ்முஸ்லிம் பெண்களின் துயரை எத்தனை கவிதைகளில் வடித்தாலும் அத்தனை கவிதைகளும் அதனுள்ளேயே கரைந்து மூழ்கிவிடும்.

எண்பதுகளில் இந்தப் பாடல்தான் சுனாபிப் பேரலைகளாகக் கடலோரத் தமிழ்முஸ்லிம் வீடுகளில் பாடிக்கொண்டே இருக்கும். கண்ணீர் பெருகி ஓடிக்கொண்டே இருக்கும். வீடே கடலாக ஆகிக்கொண்டே இருக்கும்.

இப்படிப் பெண்கள் மட்டுமே தனித்து வாழ்வதாலேயே, இவர்கள் வாழும் வீடு இவர்களுக்கு மட்டுமே சொந்தமானதென்று எழுதிக் கொடுத்துவிடுவார்கள் பெற்றோர்கள். ஆண்பிள்ளைகளுக்கு வீட்டில் உரிமை இல்லை.

திருமணம் முடித்த ஆண்கள், வீட்டைவிட்டு வெளியேறி, அவர்கள் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்றுதான் வாழவேண்டும்.

ஒரே வீட்டில் ஒன்றுக்கும்மேல் பெண்கள் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுக்கும்போது, அந்தப் பெண்ணுக்கு என்று ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். வீடு கொடுக்காமல் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையே இன்றும் சில தமிழ்முஸ்லிம் கடலோரக் கிராமங்களில் இருந்துவருகிறது.

தமிழ்முஸ்லிம்களின் வெளிநாட்டுத் தனிமை வாழ்க்கையின் நீட்சி 70 களுக்குப் பிறகு அரபு நாடுகளில் பெருமளவுக்குக் படர்ந்தது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்றும் இன்று இவர்களின் எல்லைகள் உலகலவில் விரிந்தன.

அதிராம்பட்டிணம் போன்ற ஊர்களுக்குச் சென்றால், அங்கே ஆண்களே தென்படமாட்டார்கள். அப்படித் தென்படுபவர்கள் எல்லோரும் ஒன்று எல்லாம் முடித்து ஓய்வில் உள்ளவர்களாய் இருப்பார்கள் அல்லது ஒரு மாத விடுப்பில் ஊர் வந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஊர் செல்வதற்கு ஆயத்த நிலையில் இருக்கும் இளைஞர்களாய் இருப்பார்கள்.

ஒரு நடுத்தர ஆண் ஊரில் இருந்தால், அது நாக்கைப் பிடிங்கிக்கொண்டு சாகும் அளவிற்கு மானக்கேடான விசயமாக அம்மாதிரியான ஊர்களில் பார்க்கப்பட்டன.

கட்டை
விளக்கமாறாய் இருந்தாலும்
எனக்குக்
கப்பல்
விளக்கமாறுதான் வேண்டும்

என்று சொல்லும் அளவிற்குப் பெண்கள் அந்த வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்டிருப்பார்கள்.

திருமணமான பத்தாவது நாள் புறப்பட்டு துபாய் போனவன் மகனுக்கு நாலு வயதானபோது திரும்பி வருகிறான். இரவில் சேர்ந்து படுக்கப்போகும்போது அந்த நாலு வயது அழுது அடம்பிடித்துக் கத்தியது ‘இந்த மாமாவை வெளியே போகச்சொல்லு’

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழ்முஸ்லிம்களை உண்டியல் வியாபாரிகள் வளைத்துப் பிடித்தார்கள். அந்த தொழிலில் கையாட்களாக வெகுவாக தமிழ் முஸ்லிம்களை ஈடுபடுத்தினார்கள்.

சிலர் முறையாகப் பணமாற்றுச் சேவைகளைச் செய்து பெரிதாக வளர்ந்தார்கள், சிலர் உண்டியல் பணி செய்தார்கள், சிலர் குருவிகளாகவும் ஆக்கப்பட்டார்கள். ஆனால் வட்டிக்குப் பணம் தரும் சேவையை மட்டும் அவர்கள் செய்வதே இல்லை.

செய்கோன், பர்மா, இந்தோநேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் வைரக்கல் வியாபாரிகள் ஆனார்கள்.

தமிழ்முஸ்லிம்கள் எத்தனை ஏழையாய் இருந்தாலும் தன் வீட்டுப் பெண்களை மணமுடித்துக்கொடுக்க பெருமளவில் சீர்வரிசைகள் செய்ய வேண்டிய கலாச்சாரத்துக்குள் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை மணமுடித்துக்கொடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு குடும்பத்தையே அழித்துமுடிக்கும் அளவுக்குப் பொருள் தேவைப்படுகிற விசயமாகவே தமிழ்முஸ்லிம்கள் பலரிடமும் இருக்கின்றது.

இதன் காரணமாகவும் பதினைந்து வயதை எட்டிய சிறுவனை எப்படியாவது கப்பலேற்றிவிட குடும்பம் முழுவதும் முழுமூச்சாய் இயங்கும்.

நான் பம்பாயில் இரண்டு மாதங்கள் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி இருந்தேன். படித்துவிட்டு துயாய் சவுதி செல்பவர்களைவிட எதுவுமே படிக்காமல் புறப்பட்டவர்கள்தான் ஏராளம்.
சவுதியோ துபாயோ சென்று அங்கும் நல்ல நிலையில் வாழ்வை அமைத்துக்கொள்ளும் கல்வியோ அறிவோ அவ்வளவாக அவர்களுக்குக் கிடையாது.

பம்பாயில் ஓர் அதிரை இளைஞன் சொன்ன ஒரு சொல் இன்றும் என் நினைவில் இருக்கிறது. அவன் கற்றவன் இல்லை. எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டதால் உடனே செல்ல வேண்டும் என்ற அவமானம் அவனைக் கொன்றுதின்றுகொண்டிருந்தது.

”அரபிக்குக் குண்டிகழுவியாவது நான் வூட்டுக்குப் பணம் அனுப்புவேன்” என்றான்.

எனக்குக் கண்ணீர்ப் பெருக்கெடுத்துவிட்டது. இந்த அறியாமை நிலையிலிருந்து இவர்களைக் காப்பாற்று இறைவா என்று வேண்டிக்கொண்டேன்.

இவ்வேளையில் இஸ்லாத்தின் சரித்திரத்தையும் நாம் பார்க்கவேண்டும். நபிகளின் நாயகம் நமக்கெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புலம்பெயர்ந்தார்.
மெக்காவைவிட்டு மதினாவுக்கு அவர் புலம்பெயரும்போது, அது ஒரு பொருள்தேடியப் புலம்பெயர்வாய் இருக்கவில்லை.

குறைசிகளின் கொடூரங்களிலிருந்தும் கொலை முயற்சிகளிலிருந்தும் தப்பித்து இஸ்லாத்தையும் ஈமான் எனும் இறையச்சத்தையும் காக்கும்பொருட்டு அவர் சகாபாக்கள் என்று சொல்லப்படும் அவரின் சீடர்களான நண்பர்களோடு புலம்பெயர்ந்தார். இஸ்லாமிய அரசை மதினாவில் நிறுவினார்.

அந்தப் புலம்பெயர்வுதான் இஸ்லாமிய நாட்காட்டியான ஹிஜ்ராவின் முதலாவது ஆண்டினை முடிவு செய்வதற்கானதாய் அமைந்தது.

ஆகவே தமிழ்முஸ்லிம்களே புலம்பெயர்வு என்பது கூடாது என்றில்லை, தாராளமாக வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள். செல்வதற்கு முன் உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல கல்வி, சுயவேலைத் திறன் என்று தேர்ச்சிபெற்றபின் செல்லுங்கள். அங்கே செல்லும் போது மனைவி மக்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

நாற்பதுநாள் மனைவியைப் பிரிவதையே இஸ்லாம் விரும்பவில்லை. நாலுமாதம் என்பது அதிகப்படியான பிரிவு நாட்களாக இருக்க வேண்டும் என்றும் அது சொல்கிறது. அதன்பின் எல்லாமே பிழைதான் – காரணங்களாக எதைச் சொன்னாலும்கூட அது பிழைதான்.

பிரயாணங்கள்
பிரிவுகள் மட்டுமல்ல
பிறவிகளும்

இஸ்லாத்தில் பிறவிகள் என்பது கிடையாது. ஒருமுறை பிறந்தவர் அதற்குமுன் பிறந்ததே இல்லை. அதே போல இறப்பவர் எவரும் மீண்டும் எங்கும் பிறப்பதே இல்லை.

அப்படி என்றால் இக்கவிதையில் வரும் பிறவிகள் என்ற சொல் எதைக் குறிக்கிறது?

உடலுக்குப் பிறவி என்பது ஒரே ஒருமுறைதான், ஆனால் மனதுக்கோ பலமுறை என்ற உண்மையையே குறிக்கிறது.

— முகநூலில் அன்புடன் புகாரி
https://www.facebook.com/anbudanbuhari/posts/4667050479986755

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.