சதுர்த்தியா…
அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாக
அமர்ந்த நாள்களில்
சதுர்ரென்ற நாலாம் நாள்
பிரதமையில் பிறப்பெடுத்து
துவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்
திருதியையில் அட்சயம் பெற்று
சதுர்த்தியில் சம்மணம் இடுகையில்
சட்டெனெ தெறித்து மறைகின்ற
வெட்டிக்களையமுடியா நினைவுகள் !

அல்லோனுக்கும் ஆதவனுக்குமிடையே
அடைபட்ட கோணம்
முத்தாறுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இடை !
சிக்கிய காலம் சுக்கில பட்சச் சதுர்த்தித் திதிஎன்றகொடை !
சுக்கிலம்தெரித்து சுக்கிரதசையில் பிறந்தபிள்ளை
வக்கனையாய் வெளிநாட்டில் வாழ்வாங்கு வாழயில
வச்சகண்ணு வாங்காம பார்த்துநீ வாழ்த்தாம எங்கபோன ?

வெளிநாட்டுலே உன்னைவிட்டு
உயிர்வளர்ப்பது எப்புடி எனச்சொல்லி
உணர்வாலே யெனைக்கட்டி கனகாலம்
உன்னோடு வைத்திருந்த என்ஆத்தா !

கடவுச்சீட்டு நாங்காட்டி நாடுநான் கடக்குறேன்
நாலுவாரத்தில, எனச்சொல்ல
நடுங்காம நீ சொன்ன ஒத்த வார்த்தை..
‘நல்லா இருயா’…..

சதுர்த்தியா…
சதுரென்ற நாலாம் நாள் …
நல்லாருக்க எனைச்சொல்லி
பிரதமையில் உன் நலம்குன்றி
துதியையில் துடிப்படங்கி
திருதியையில் அமரத்துவமாகி
சதுர்த்தியில் சாங்கியம் இடுகையில்
சட்டெனெ தெறித்து மறைகின்ற
வெட்டிக்களையமுடியா நினைவுகள் !

அமாவாசைக்கு அடுத்ததினம் முதல் பூரணை ஈறாக
அமர்ந்த நாள்களில்
சதுரென்ற நாலாம் நாள்
அல்லோனுக்கும் ஆதவனுக்குமிடையே
அடைபட்ட கோணம்
முத்தாறுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இடை !
உடைபட்ட உணர்வுகளை உயிரென்ற ஊசியில
உணர்வென்ற நூலெடுத்து தைத்து
கடந்துவிட்டேன் நாப்பத்தெட்டும் ஒம்பதும்

கடல்கடந்து நீயிருக்க- இன்னும்
ஊனும்சதையுமா என்றெண்ணி
எண்ணுவேதே இல்லை உன்னை !
மறந்தால் தானே நினைப்பதற்கு !

யாருக்குப் வாழ்த்துக்கள் சொன்னாலும்
கட்டாயம் சொல்லுகிறேன் நல்லா இரு…
பதின்மவயது என்பிள்ள காதோரம் கேக்கிறா
அப்பா பிறந்த நாள் வாழ்த்து சொல்லாம
நல்லாயிருன்னு சொல்றீங்க,
அப்படின்னா என்ன ?
விழியோரம் நிறைந்தநீரை சுண்டிவிட்டு சொல்லுகிறேன்
“அப்பத்தா சொல்லித்தரலப்பா “

வெளிநாட்டுலே உன்னைவிட்டு
உயிர்வளர்ப்பது எப்புடி எனச்சொல்லி
உணர்வாலே யெனைக்கட்டி கனகாலம்
உன்னோடு வைத்திருந்த என்ஆத்தா !

நீ என்னை பெத்தெடுத்த நாளாம் இன்று
நட்பும் சொந்தமும் வாழ்த்துச்சொல்ல
கண்ணியமாய்நன்றி சொல்லிவிட்டு
கண்மூடிகேட்கிறேன்
எங்கொதொலைவில இருக்கிற என்அம்மா நீ
நல்லா இருக்கியா !!!

— முருகன் இலக்குமணன்

( துங்கீசன்-அல்லோன் -சந்திரன் ) ஆதவன்- சூரியன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.