கடந்த 2 நாட்களாக காய்ச்சல், கடுமையான தலைவலி இருப்பதால் இன்று கொரோனா சோதனைக்கு போயிருந்தேன். அதில் தென்பட்ட சில விசயங்கள்.
காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை கிடையாது. நேரே கொரோனா சோதனை எடுக்கும் ஒரே ஒரு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.அங்கே நேற்று மாலை சென்றேன், மருத்துவர் இல்லை. ஒரு செவிலியர் நாளை காலை டெஸ்ட்டுக்கு வாங்க என்று முடித்துக்கொண்டார். முற்றிலும் அனுபவம் இல்லாதவர் என்பது தெரிகிறது.
தொடர்ந்து பாரசிட்டமால் 650 போட்டும் காய்ச்சல் குறையவில்லை என்றேன், அப்போதும் நாளை டெஸ்ட்டுக்கு வா என்பதுதான் பதில் (அவர் எவ்வித கேள்விகளை கையாளவும் பயிற்றுவிக்கப்படவில்லை என்பது தெரிந்தது)
இன்று காலை சென்றேன்.
மருத்துவர் இல்லை (நகரின் ஒரே காய்ச்சல் கிளினிக் அது). கால்கள் துவண்டு போகும் அளவு களைப்பு. ஆனால் அங்கே உட்கார நாற்காலிகள் இல்லை. ஏனைய நோயாளிகளில் பாதிபேர் முதியவர்கள். ஒரே ஒருவர் மட்டுமே சுவை தெரியவில்லை என்கிறார், மற்ற எல்லோரும் காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி உடையோர்.
நிற்க இயலாதவர்கள் ரோட்டில் உள்ள கொடி மர மேடையில் அமர்ந்துகொண்டார்கள்.5 பேரின் பெயர்களை பதிந்ததும் டெஸ்ட் எடுக்கிறார்கள். பெயர் எழுதுபவர்தான் மருந்து கொடுக்க வேண்டும். அவரே வருவோருக்கு பதில் சொல்லவும் வேண்டும். அவரே சோதனைக்காக அடுத்த நோயாளியை அழைக்க வேண்டும். இது கூட்டத்தை அதிக நேரம் நிற்க வைக்கிறது. 10 நோயாளிகள் கிளம்பும் வரைக்கும் அங்கே இருந்தேன்.
எல்லோருக்கும் அவர் சொன்னவை இது மட்டுமே..பாசிடிவா இருந்தா 2 நாள்ல அவங்களே கூப்பிடுவாங்க. நெகட்டிவ் என்றால் லேட் ஆகும். (அதுக்கு எத்தனை நாள் ஆகும்? தெரியாது.)பாசிடிவ் முடிவை உடனே சொல்ல முடியும் என்றால் நெகட்டிவ் முடிவையும் சொல்ல முடியும்தானே? என்ன எழவுக்கு இந்த தாமதம்? 20 ம் தேதி டெஸ்ட் கொடுத்த ஒரு முதியவர் ரிசல்ட் வராமல் காத்திருக்கிறார். இருமல் தீவிரமானதால் பயந்துபோய் தனியார் மருத்துவமனை போயிருக்கிறார். ஒரு லட்சம் அட்வான்ஸ் கேட்டதால் இங்கே வந்து எப்பம்மா ரிசல்ட் வரும் என்று பாவமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அவருக்கு சொல்ல அங்கே பதில் இல்லை.என்ன சாப்பிடுவது, என்னென்ன அறிகுறி இருந்தால் உடனடி சிகிச்சைக்கு போக வேண்டும்? எங்கே போக வேண்டும்? என்பது பற்றியெல்லாம் எந்த தகவலும் இல்லை. முடிவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பதை மட்டும் கவனமாக சொல்கிறார்கள்.
(இவை அங்கே நிகழ்ந்த சில உரையாடல்கள்)
இருமல் மருந்து கொடுங்க,
இங்க இல்ல. ஜி.ஹெச் போங்க.
ஆக்சிஜன் அளவு 92 இருக்கிறது. எவ்வளவு இருந்தா உடனே ஆஸ்பத்திரிக்கு போகணும்?
தெரியலங்க. ஜி.ஹெச் போய் கேளுங்க. இல்லன்னா நாளைக்கு மேடம் வந்துருவாங்க அப்போ வந்து கேளுங்க.
டோலோ போட்டும் ஜுரம் குறையல, மெப்தால் மாத்திரை இருந்தா கொடுங்க.
அந்த மாத்திரை இங்க இல்லை. ஜி.எச் போங்க.
அப்ப எழுதியாவது கொடுங்க.
இல்லைங்க நாங்க எழுதிக்கொடுக்கக் கூடாது. நாளைக்கு வாங்க.
கிட்டத்தட்ட அரை வருட காலமாக கொரோனாவை அரசு கையாள்கிறது. இன்றுவரைக்கும் இப்படிப்பட்ட அடிப்படை சிக்கல்களை களைய வழியில்லை.
இந்தியாவின் அதிக வரி வருவாய் தரும் 2வது பெரிய நகராட்சி. ஆனால் சாம்பிள்கள் கிருஷ்ணகிரி அனுப்பப்படுகின்றன.
தாமதம்தான் நிலைமையை சிக்கலாக்குகிறது என்று தங்கமாட்டம் பேசுகிறார் சுகாதாரத்துறை அமைச்சைர் (இன்று காலை செய்திகளில்). ஆனால் இங்கே 4 வது நாளாக முடிவுக்கு காத்திருக்கிறார் ஒரு முதியவர்.
–முகநூலில் வில்லவன்.