தமிழில் டூலெட், திரௌபதி என ஒருபக்கம் வெற்றிகளை தட்டிக்கொண்டே…
இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார்.

சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.

“மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற படம் மிகச்சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது. ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன். புதிய முயற்சி என்கிறபோது அதில் நாமும் ஒரு பாகமாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றுதான் அந்தப் படத்தில் நடித்தேன். அந்த படத்துக்குப்பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன.

தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.

அதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன். இந்தியன்-2 படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

ஏற்கனவே பாதி படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

பெரும்பாலும் என்னுடைய படங்கள் அனைத்துமே அறிமுக இயக்குநர்களுடன் தான் அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் முதல் படம் என்பதால் கதையையும் கதாபாத்திரங்களையும் சரி வலுவாக அமைத்திருப்பதால் எனக்கான கதாபாத்திரங்களும் அப்படியே அமைந்து விட்டது எனது அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம்.

“டூ லெட்”, “கும்பளங்கி நைட்ஸ்”, படங்களுக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ரசிகர்கள் எப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். நானும் எனது கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

டூ லெட் படம்தான் ஒரு நடிகையாக அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது. அந்தப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டபோது, அதைப்பார்த்த மோகன்லால் மேனேஜர் மூலமாக எனக்கு மலையாளத்தில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதற்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆடிஷன் செய்துள்ளனர். ஆனாலும் திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்த கதாபாத்திரம் வந்தது.. ஆடிஷனில் கலந்துகொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகி விட்டேன்..

நான் அந்தப்படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள்.. மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் அற்புதமாக நடித்து இருந்தார்கள். அந்தப்படத்தில் நடித்த மலையாள நகைச்சுவை நடிகர் சௌபின் சாஹிர், ஒரு காட்சியில் எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்த காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக, அவர் என்னிடம் வந்து, தான் எப்படி நடிக்கப் போகிறேன் எப்படி காலில் விழப் போகிறேன், உங்களுக்கு இது சரியாக இருக்குமா என்பதையெல்லாம் முன்கூட்டியே என்னிடம் பகிர்ந்து கொண்டு நடித்தார். அதற்கு ஏற்றபடி நடிப்பதற்கு எனக்கும் வசதியாக இருந்தது

என்னை பொருத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை.. அதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை.. எனக்கு நன்றாக நடனம் ஆடத்தெரியும்.. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அதேசமயம் கதையம்சத்துடன் என்னைத்தேடி வரும் படங்களில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. பாசிட்டிவ் மட்டுமல்லாமல் நெகடிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். எப்போதும் பசியோடு இருக்கும் ஒரு கலைஞராக இருக்கவே நான் விரும்புகிறேன்.. எனக்கு ஃபுல் மீல்ஸ் தரும் கதைகளோடு இயக்குநர்கள் தேடி வரும்போது அதை எப்படி நான் மறுக்க முடியும்..?

“மண்டேலா” படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதுவரை அவர் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஜானர். இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு நடிப்புத் திறமை இருக்கிறதா என்பது இந்த படம் வெளியாகும்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.. சமீபத்தில் யோகிபாபு பேசும்போதுகூட, நான் என்னைக்குமே காமெடியன் தான் என்று கூறியிருந்தார்.. ஆனால் என்னை பொருத்தவரை காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோதான் என்று சொல்வேன்..

அவர் சிரிக்க வைக்கவும் செய்வார். அழ வைக்கவும் செய்வார்.. ஒரு காமெடியனாக இருந்து, இந்த அளவிற்கு அவர் வந்து இருக்கிறார் என்றால் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.

அதேசமயம் படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியும் விதமாக தனித்துவமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்களை சொல்ல வேண்டுமென்றால் படத்தின் கதையை சொல்ல வேண்டியிருக்கும்.. அதனால் இந்தப் படம் வெளியான பின்பு இந்த படத்தில் நடித்த அனுபவங்களை தனி பேட்டியாக கொடுக்கும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

இந்த கொரோனா தாக்கம் சினிமாவை மட்டுமில்ல, தனி மனித வாழ்க்கையும் நன்றாகவே அசைத்துப் பார்த்துவிட்டது. எப்போதும் துறுதுறுவென ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு, இந்த ஆறு மாதங்கள் கொஞ்சம் சவால் தான்.. இருந்தாலும் இந்த சமயத்தில் புத்தகங்கள் நிறைய படித்தேன்.. மனதில் தோன்றியதை எழுதவும் ஆரம்பித்தேன்.. நமக்கு இதெல்லாம் வருமா, எதுக்கு ரிஸ்க் எடுக்கணும் என சந்தேகப்பட்ட சில விஷயங்களை பரிசோதனை முயற்சியாக செய்து பார்க்க இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டேன். அவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்த உதவியது இந்த லாக் டவுன்” என பாசிடிவ் விஷயங்களை பகிர்ந்தார் “நம்ம வீட்டுப் பிள்ளை” ஷீலா ராஜ்குமார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.