தமிழகத்தின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.
அப்போது சூரப்பாவின் நியமனத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்திலேயே பற்பல கல்வியாளர்களும் அறிஞர்களும் இருக்கும் நிலையில் வெளி மாநிலத்திலிருந்து துணைவேந்தர் இறக்குமதி செய்யப் படுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அப்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை இதில் எந்த ஆர்வம் காட்டாததால் சூரப்பாவே பல்கலைக்கழக துணை வேந்தராக தொடர்ந்தார்.
இந்த நிலையில்தான் அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் என்ற முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், ’ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தருவதற்கு மாநில அரசின் நிதி உதவி தேவையில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கிடையில்தான் இப்போது அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த ஆணையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு. ஆனால், இதற்கு அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. துணைவேந்தர் மீது விசாரணை நடத்தும் அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், சூரப்பா வந்த பிறகே பல்கலைக் கழகத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார் என்றும், தாங்கள் துணை வேந்தருக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது. நாளை நவம்பர் 16முதல் சூரப்ப்பா மீதான கலையரசன் ஆணையம் விசாரணையைத் துவங்க இருக்கிறது
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வின் கோரிக்கைக்கு பின்னால் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள் தமிழக உயர்கல்வித் துறைக்குள்.
“இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினென்ஸ் என்ற பெயரில் அந்த கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்பதுதான் அந்தத் திட்டம். இந்த அந்தஸ்து வழங்கப்பட்ட அரசு தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ரீதியாகவும் பாடத்திட்ட ரீதியாகவும் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது. மேலும் இப் பல்கலைக் கழகங்கள் அரசுப் பல்கலைக் கழகங்களாக இருந்தால் குறிப்பிட்ட தொகை மானியம் வழங்கப்படும் தவிர முழுமையான அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து அவை விலகி விடும்.
இந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு இந்தியாவில் 114 கல்வி நிலையங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. அதில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. 2016 இல் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி இரண்டு ஆண்டுகள் காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. அப்போது முழுக்க முழுக்க அதிகாரிகள் மூலமாகவே அண்ணா பல்கலைக்கழக நிர்வாக பணிகள் இந்த காலகட்டத்தில் தான் மத்திய அரசின் உயர் சிறப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு சூரப்பா துணைவேந்தராக பதவி ஏற்றவுடன் அந்த செயல் திட்டத்தை விரைவுபடுத்த தொடங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து சிறப்பு அந்தஸ்து பெற்ற தன்னாட்சி பல்கலைக்கழகமாக ஆக்கி அதை தனியார் கைகளில் ஒப்படைப்பது தான் சூரப்பாவுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டு உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்த உயர் சிறப்பு அந்தஸ்து என்பது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் இருந்துவரும் சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு சமாதி கட்டி விடும் என்ற நிலையில்… அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவெடுத்து அது தொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் முதலீட்டை பெறுவதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. ஏற்கனவே தொடங்கவேபடாத ஜியோ இன்ஸ்டியூட்டுக்கு எமினென்ஸ் அந்தஸ்ந்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத்துக்குத் தேவையான நிதியை ஜியோ இன்ஸ்டிடியூட் மூலம் முதலீடு செய்து அண்ணா பல்கலையை அம்பானி பல்கலையாக்கும் திட்டம் இதன் பின்னால் இருக்கிறது என்கிறார்கள்.
தற்போது அகில இந்திய பாஜகவின் அமைப்பு பொதுச் சயலாளராக இருக்கும் பி எல் சந்தோஷுக்கு நெருக்கமானவர் தான் இந்த சூரப்பா. இருவருமே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை என்ன செய்யவேண்டும் என்ற வரைவுத் திட்டம் முடிவு செய்யப்பட்ட பிறகே சூரப்பா இங்கே அனுப்பப்பட்டுள்ளார். அந்த வரைவுத் திட்டத்தை நோக்கி தான் சூரப்பா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகம் என்ற நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திறகு முழுக்க தன்னாட்சி அளித்து அதன் நிதி பிரச்சனையை அம்பானி குழுமம் மூலமாக தீர்ப்பதுதான் மத்திய அரசின் திட்டம். அண்ணா பல்கலைக்கழகம் அம்பானி பல்கலைக்கழகமாக மாறுவதற்கான திசையை நோக்கித்தான் இந்த திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன’என்கிறார்கள் உயர் கல்வித்துறையில் இருப்பார்களே”.