மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தொடரில் தமிழ்நாட்டில் எல்லோரும் எதிர்த்து வரும் சேலம் எட்டுவழிச் சாலையை போடுவதற்கு நிதி ஒதுக்கியுள்ளார். இதிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கே எதிராகச் செயல்படும் அவரின் தமிழின்ப் பற்றை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக சென்னையில் மெட்ரோ ரயிலுக்கு 65 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். முழுக்க ஏசி வசதி செய்யப்பட்ட மெட்ரோ ரயிலில் மேல்தட்டு, மேல் மத்திய வர்க்கத்தினரே பெரும்பாலும் பயணிக்க முடியும். ஏனெனில் அதன் கட்டணங்கள் அப்படி.

ஒரு நாளைக்கு 95 ஆயிரம் பேர் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலுக்கு 65ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய பொருளாதாரப் புலி நிர்மலா மேடம், அதே சென்னையில்
ஒரு நாளைக்கு 11 லட்சம் பேர் பயணம் செய்யும் சப்-அர்பன் மின்சார ரயில்களுக்கு எத்தனை பைசா ஒதுக்கினாங்க ? கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார். 

இங்கே தான் இவர்களின் திருட்டுத்தனம் உள்ளது. மெட்ரோ ரயிலில் ஒரு ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷனுக்கு போக 10 ரூபாய், 2 வது ஸ்டேஷனுக்கு 20 ரூபாய், 3வதுக்கு 30 ரூபாய், … 70 ரூபாய் வரை ஒன்-வே டிக்கட் விலை.

அதே சமயம், மின்சார ரயிலில் பீச்சில் ஏறி தாம்பரத்தில் இறங்கினால் கூட 10 ரூபாய் தான். குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் 10 கி.மீ வரை.  20 கி.மீ தூரம் வரை 10 ரூபாய் டிக்கட். 45 கி.மீ தூரம் வரை பயணம் செய்ய 20 ரூபாய் தான் டிக்கட்.

இதே மெட்ரோ ரயிலில் 70 ரூபாய் வரை போகும் 20 கி.மீக்கு. ரயிலில் வேலைக்கு சென்றாக வேண்டிய ஒரு அன்றாடத் தொழிலாளிக்கு தினமும் போக வர 140 ரூபாய் என்றால் மாதம் 4200 ரூபாய் செலவாகும். சென்னையில் அன்றாடங் காய்ச்சிகளாக போகும் முக்கால்வாசிப் பேருக்கு மாதச் சம்பளமே 7ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் தான். இதில் பாதியை மெட்ரோவுக்கு அழுதுவிட்டு சாப்பாட்டுக்கு பிச்சையெடுத்தா சாப்பிட முடியும் ?

சென்னையில் மெட்ரோ ரயில் வந்ததும் 28 சதவீத மின்சார ரயில்களை ரத்து செய்தது மத்திய அரசு. எல்லாம் ஏழைகளின் நன்மைக்காகத் தான் என்று இதைச் சொல்லுமா? ஏசி பெட்டி, பளிச்சென்ற ப்ளாட்பார்ம் என்று விளம்பரம் வேறு.

கொரோனாவைக் காரணம் காட்டி முழுக்க மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனாலும் இன்றுவரை முழுதாக ஆரம்பிக்கப்படவில்லை. கொரோனா பரவிவிடும் என்று சப்பைக் கட்டு காரணம் சொல்லப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் நெருக்கமாக 2 மணி நேரம் உட்கார்ந்து பார்த்தால் பரவாத கொரோனா , ஏ.சி. மெட்ரோ ரயிலில் பரவாத கொரோனா, மின்சார ரயிலில் எல்லோரும் போனால் மட்டும் பரவிவிடுமா? எடப்பாடி அரசு தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்களை கூட்டி வைத்திருக்கிறார்களே அப்போது கொரோனா பரவவில்லையா ?

இதில், மின்சார ரயிலில் பொருட்கள் விற்போர் முதல் ரயில்வே ஸ்டேஷன்களின் இருபுறங்களிலும் இந்தப் பயணிகளை நம்பி இருந்த சிறு ஹோட்டல்கள் முதல் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வாழ்க்கை அந்தோ பரிதாபம் தான். அவர்களுடைய நலனுக்காக இந்த மாநில மத்திய அரசுகள் என்ன செய்தது ? ஒன்றுமேயில்லை.   ஒரு நிவாரணம் கூட இல்லை. மின்சார ரயில்வே ஸ்டேஷன்களின் இருபுறங்களிலும் மூடிக்கிடக்கும் காலிக் கடைகளைப் பாருங்கள்.                

இனிமேல், மின்சார ரயில்களில் போகப் போக தரத்தை தேய்த்து, வசதிகளை இல்லாமல் செய்து, சிதைத்து அழிப்பார்கள். அதை நம்பி வாழும் கோடிக் கணக்கான கீழ்த்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்வாதார போராட்டம் மேலும் மோசமாகும்.

இன்னும் வரும் வருடங்களில் மின்சார ரயிலின் சேவை என்ன லட்சணத்தில் வாழும் என்பதை நினைத்தால் மனது வலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.