ஜெர்மனி நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண் விட்ஜா, நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி, ரூ.70 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையம் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி இருந்தார். அப்புகார் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தப்புகார் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறையினர் விசாரணையைத் தாமதப்படுத்தி வந்த நிலையில் ஆர்யா மீதான மோசடி புகார் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தக்கோரி ஈழத்தமிழ்ப் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடினார்.

அதன்பின்னரே அப்புகார் மீதான விசாரணை தொடங்கியது.

அண்மையில் ஆர்யாவுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என்றும் அவரைப் போல் பேசி அப்பெண்ணை ஏமாற்றிய முகமது அர்மான் மற்றும் ஹுசைனி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான், முகமது ஹீசைனி ஆகியோர் கைது செய்யப்பட்டபோது காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து ‘டுவிட்டர்’ பதிவு வெளியிட்டிருந்தார் ஆர்யா.

ஆர்யா விடுவிக்கப்பட்டதற்கு ஈழத்தமிழ்ப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீலா, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகியோர் மீது கடந்த மாதம் 19 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஆர்யா போன்று பேசி அந்த பெண்ணிடம் மோசடி செய்ததாக முகமது அர்மான், ஹூசைனி ஆகியோர் பிணை கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி பெண் தரப்பில் வழக்குரைஞர் ஆனந்தன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் …..கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனிவாழ் இலங்கை பெண்ணை, நடிகர் ஆர்யா தனது ‘வாட்ஸ்-அப்’ எண் மூலம் தொடர்புகொண்டு தனது காதலை வெளிப்படுத்தி அவரைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். ஆர்யாவைத் திருமணம் செய்து வைப்பதாக அவரது தாயாரும் உறுதி அளித்துள்ளார். ‘வீடியோ’ அழைப்பிலும் அவர்கள் பேசி உள்ளனர். இந்தநிலையில், அவர்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி ஜெர்மனி பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். இதை உண்மை என நம்பி அவர்களுக்கு ரூ.70 இலட்சத்து 40 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார். சினிமா பிரபலம் என்பதால் தன்னால் வங்கிக்குச் சென்று பணத்தை எடுக்க இயலாது எனக்கூறி அவரது ஆட்களின் வங்கிக் கணக்கு மூலம் இந்தப் பணத்தை ஆர்யா பெற்றுள்ளார்.

ஆர்யா, ஜமீலா ஆகியோரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கில் முகமது அர்மான் இந்த மோசடியில் தான் மட்டுமே ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து கூறி உள்ளார். ஆனால், அப்போது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்படாததால் அவர் சரண் அடைந்ததை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து அவர், முன்பிணைகோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஆர்யா, ஜமீலா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது ஆகும்.

இந்தநிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர்கிரைம்’ காவல்துறையினர், ஜெர்மனி பெண்ணின் புகாரை சி.பி. சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணைக்கு அனுப்பி உள்ளதாகக் கடிதம் அனுப்பினர். சி.பி. சி.ஐ.டி. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே நடிகர் ஆர்யா உள்ளிட்ட 4 பேர் மீது 19.8.2021 அன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகிய 2 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். ஆர்யா, ஜமீலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் அவர்களைக் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. ஆர்யாவை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே குற்றத்தைத் தாங்கள் செய்ததாக இந்த மனுதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆர்யா, தன்னுடைய ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசிய பதிவுகளை தனக்கு வழங்கும்படி ஜெர்மனி பெண் தரப்பில் ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு மனு தரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை தேவைப்படுகிறது. ஜெர்மனி பெண்ணை ஏமாற்றவில்லை என்று ஆர்யா, அவரது தாயார் ஆகியோர் நிரூபிக்கவில்லை. அதேவேளையில் அவர்கள் அமைதியாக இருந்து கொண்டு இந்த மனுதாரர்களை வைத்து வழக்கை நடத்தி வருகிறார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி முடிக்கும் வரை பிணை வழங்கக்கூடாது…என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க அரசு தரப்பில் காலஅவகாசம் வழங்கக் கோரியதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நேற்று மதியம் 2.40 மணி முதல் 3 மணி வரை சந்தித்துப் பேசி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.அதோடு, நடிகர் ஆர்யா ஆணையர், கூடுதல் ஆணையர்கள் போன்ற உயரதிகாரிகள் செல்லும் நுழைவுவாயில் வழியாக இரகசியமாக வந்து சென்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தன் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கவே இந்த இரகசிய சந்திப்பு என்று சொல்லப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.