லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகர் அக்கார்ட் நட்சத்திர விடுதியில் நேற்று வெள்ளியன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசும்போது, “இப்போது என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. நான் அனுபவித்துள்ள துன்பத்தை வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது.

வைகைப் புயல் என என்னைத்தான் எல்லாரும் சொல்வார்கள். ஆனால் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் என் வாழ்வில் நான் ஒரு சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன். என் மனது சரியில்லை.. ராத்திரி தூக்கமில்லை.. உடம்பும் சரியில்லை..இதனால் டாக்டர்கிட்ட போனேன். அந்த டாக்டரோ “மனசை ரிலாக்ஸ் செய்ய பக்கத்துல நடக்கற சர்க்கஸூக்குப் போயி பபூன் பண்ற சேட்டையை பாரு.. ரிலாக்ஸ் கிடைக்கும்”ன்னு சொன்னாரு.. அந்த பபூனே நான்தான்னு டாக்டர்கிட்டே மட்டுமில்லாமல், உங்ககிட்டேயும் சொல்லிக்கிறேன்.

இந்தக் கொரோனா நாம் எல்லோரையும் மிரள வைத்துவிட்டது. கொரோனா காலத்தில் எனது காமெடிதான் மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி என் மனசை தேற்றிக் கொண்டேன்.

மறைந்த நடிகர் விவேக் எனக்கு அருமையான நண்பன். அவரது இறப்பு எனக்குப் பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

கடந்த நான்காண்டுகளில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுள்தான் காரணம். முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்த பிறகுதான் எனக்கு வாழ்க்கையே பிரெய்ட் ஆகிவிட்டது. எனக்கு END -ஏ கிடையாது. இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக அமைந்தது.

இந்தப் படத்தைத் தயாரிப்பதன் மூலமாக சுபாஷ்கரன் எனக்கு வாழ்க்கை கொடுத்து சபாஷ்கரன் ஆகிவிட்டார். எனது பயணம் இனிமேல் நகைச்சுவை பயணமாக தொடரும். சாகும் வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை.

எனக்கு ரெட் கார்ட் போடப்பட்டது என்பதே பொய். வாய்மொழியாக கூறப்பட்ட வார்த்தை அது. என் மூலம் நட்டம் ஏற்பட்டதாக இயக்குநர் ஷங்கர் சொன்னது எல்லாம் பொய். சங்கரின் சாவகாசமே இனி எனக்கு வேண்டாம். சங்கர் இருக்கும் ஏரியா பக்கமே இனி போக மாட்டேன்.

முன்பு நடித்ததைவிட இனி நிறைய பெரிய படங்களில் நடிப்பேன். அதே சமயம் வரலாற்று படத்தில் நடிப்பதற்கு இனிமேல் வாய்ப்பில்லை. பலரிடமிருந்தும் நடிப்பதற்கான அழைப்பு வந்து கொண்டேயிருக்கிறது. லாரன்ஸ், அர்ஜூன் போன்றவர்களும் புதிய படம் பண்ண முடிவாகியுள்ளது. இதுவரையிலும் நான் எந்தவொரு இணையத் தொடரில் நடிக்கவில்லை.

தமிழ்ச் சினிமாவில் எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன். சூரி, யோகிபாபுவும் நன்றாகவே நடிக்கின்றனர்.

உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். தற்போதைய தி.மு.க. ஆட்சி நன்றாக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

இப்போதெல்லாம் சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் மூலம் உடனுக்குடன் கவுண்டர் கொடுக்கிறார்கள். மீம்சில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை.

‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தை உருவாக்கிய மூளை என்னுடையதுதான். அந்தப் படத்தில் திரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு சொன்னதாலே இதில் நயன்தாரா நடிக்கிறார் என்பதெல்லாம் உண்மையில்லை. இந்தப் படத்தில் கதாநாயகியே கிடையாது. இந்தப் படத்தில் இரு பாடல்களில் ஒரு பாடலை நானே பாடுகிறேன்.

இப்போதுள்ள மன நிலையில் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்..’ என்று பாடத் தோன்றுகிறது…” என்று கூறினார் வடிவேலு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.