பொய்த்துப் போன மழை, தொடர்ந்து விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் அடிக்கடி ஊருக்குச் சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள்.

இந்நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந் நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசனம் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. இந்த தோட்டத்தை திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

-Banumathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.