டெல்லியில் ஓடும் பேருந்தில் 4 பேரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு இறந்த நிர்பயாவின் உண்மையான பெயர் நிர்பயா அல்ல. பயமில்லாதவள் என்கிற அர்த்தத்தில் அந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. நாடெங்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்தச் சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் முதல் செய்தியாகத் தொடர்ந்தன.
தற்போது அதே டெல்லியில் அதைவிடக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட நிகழ்வு ஒன்று நடந்தேறியுள்ளது. இதுவரை போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் கொல்லப்பட்டவர் டெல்லி கலெக்டர் ஆபிசில் பணியில் இருந்த 21 வயதேயான இளம் பெண் போலீஸ்.
காவல் துறையைச் சார்ந்தவராக இருந்தும் இந்தப் பெண்ணின் வழக்கை காவல்துறை விசாரிப்பதில் முனைப்பு காட்டவில்லை. சில இஸ்லாமிய ஊடகங்களாலேயே தற்போது ஓரளவு வெளியே வந்துள்ளது. இந்த இளம் பெண்ணிற்கு சாபியா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. சாபியாவின் உண்மையான பெயர் தெரியாது.
டெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் சாபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் பெற்றோருடன் வசித்து வந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் டெல்லி காவல் துறையில் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளார். டெல்லி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவே இல்லை.
அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் , மூன்று நாள் கழித்து டெல்லியிலிருந்து சற்று தொலைவில் சூரஜ்குண்டுவில் ஒரு புதரில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார் சாபியா.
அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து போலீஸ் குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டது. அவரது குடும்பத்தினர் வீட்டில் இறுதிச் சடங்கு செய்த போது அவர் உடலின் மேல் 50 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வாயில் கத்தியால் குத்தி கத்தி தொண்டை வழியாக வெளியேறியிருக்கிறது. இரண்டு மார்புகளும் அறுக்கப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவரது பிறப்புறுப்பு அறுக்கப்பட்டுள்ளது.
கொதித்துப் போன பெற்றோரும் உறவினர்களும் காவல்துறையில் வந்து புகார் கொடுக்க வந்த போது காவல் துறை ஒரு புதிய கதை சொல்லியிருக்கிறது. அதாவது அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், திருமணமான அந்தப் பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் கணவனே அவரைக் கொன்றுவிட்டதாகவும் சொல்லியிருக்கிறது காவல்துறை.
இவ்வளவு வருடங்களாக பெற்றோருடன் வசித்து வந்த அந்தப் பெண் திருமணமானவர் என்கிற பொய்யை நம்ப மறுத்த பெற்றோர், சாபியா திருமணம் செய்த நபர் யார், அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லப்பட்ட 3வது நபர் யார் என்கிற விவரங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் போலீஸ் எந்தத் தகவலும் தர மறுத்துவிட்டது. சாபியாவை கொன்றதாகச் சொல்லப்படும் கணவனையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. அவனது பெயர் நிஜாமுதீன் என்று சொல்லியிருக்கிறது போலீஸ். அதே போல் மருத்துவர்கள் வழங்கிய பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சாபியா வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. காயங்களினால் ஏற்பட்ட ரத்த இழப்பினால் சாபியா இறந்தார் என்றே அறிக்கை சொல்கிறது.
இந்தச் சூழலில் தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சாபியாவின் தந்தை வேறு ஒரு காரணத்தை முன் வைக்கிறார். அதாவது, சாபியா பணி புரிந்த டெல்லி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு ரகசிய லாக்கர் அறை இருப்பதாகவும், அலுவலகத்தில் வாங்கப்படும் லஞ்சப் பணங்கள் அத்தனையும் அந்த ரகசிய இடத்தில் வைக்கப்படுவதாகவும், எந்த நேரத்திலும் சில கோடிகளாவது அந்த லாக்கரில் இருக்கும் எனவும், அந்த லாக்கர் அறை பற்றி தனக்குத் தெரியுமென்றும் சாபியா தன் பெற்றோரிடம் கூறியிருந்திருக்கிறார்.
சாபியாவின் பெற்றோர் சாபியாவுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும், அது போன்ற சந்தேகத்துக்குரிய விஷயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியிருக்க, தானாகவே வந்து சரணடைந்ததாகச் சொல்லப்படும் நிஜாமுதீன் என்பவன், தான் சாபியாவைத் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்குப் பின்பு சாபியா பலருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்து அவரை ஊருக்கு வெளியே பைக்கில் அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொன்றதாகவும் நிஜாமுதீன் தரப்பு வாக்குமூலத்தை சொல்கிறது போலீஸ்.
கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்த அந்தப் பெண் இறந்ததைப் பற்றி அவருடன் வேலை செய்த ஒருவரும் வந்து சாபியாவின் பெற்றோரிடம் பேசவில்லை. காவல்துறையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதை நன்றாக ஊகிக்க முடிகிறது. டெல்லி காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு காவல்துறை மேல் நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. எனவே, சிபிஐ விசாரணை வேண்டும் என்று சாபியாவின் பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் ஒரு வினோதம் என்னவென்றால் பல பெரிய பெரிய ஊடகங்களும், இவ்வளவு சந்தேகங்கள் நிறைந்த இந்தச் செய்தியை வெளியிடக் கூட இல்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை சாபியா இஸ்லாமியர் என்பதால் மூடி மறைக்கின்றனவா அரசும் ஊடகங்களும் ? கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்தவர் என்பதால் அரசின் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளால் அவர்கள் மேல் தீவிரமாக எழுகிறது.
சாபியாவின் கொடூர கொலைக்கு நீதி கிடைக்குமா ? ஆப்கானிஸ்தானில் தலீபன்கள் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய அரசு சாபியாவுக்கு நீதி வழங்குமா ?
சாபியாவின் மரணத்துக்கு நீதி வேண்டி ஊடகங்களிடம் சாபியாவின் சகோதரர் விடுக்கும் வேண்டுகோள் வீடியோ கீழே.