நேற்று சேனல்களில் திடீரென்று சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண்கள் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்று ப்ளாஷ் நியூஸ் பளிச்சிட்டது. கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களாக ஆண்களை மின்சார ரயில்களில் பயணிக்கவே வழி இல்லாதபடி கொரோனா பெயரைச் சொல்லி விதிக்கப்பட்ட தடையை நேற்று தான் நீக்கியிருக்கிறது தென்னக ரயில்வே.  

சென்னை புறநகர் மின்சார ரயிலில் ஆண் பயணிகளுக்கு காலை 7.30 முதல் 9 வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே ஒரு 8 மாதங்களாக கட்டுப்பாடு விதித்திருந்தது. அதனால் சாதாரண மக்கள் மின்சார ரயில்களில் பயணிப்பது என்பது கடுமையாக சிக்கலுக்குள்ளானது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் செல்லும், மாலை வேலையிலிருந்து திரும்பும் நேரங்கள் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ள நேரங்கள். அதனால் மின்சார ரயில்களில் பயணிக்கும் ஆண்கள் கிட்டத்தட்ட பயணிக்க முடியாமலே போய்விட்டது.

மிக முக்கியமான இந்த நேரங்களில் ஆண்கள் பயணம் செய்யக் கூடாது என்று ஆப்படித்ததன் மூலம் பல லட்சம் ஆண் பயணிகளுக்கு ஆப்படித்தது தெற்கு ரயில்வே. மின்சார ரயில்கள் ஆளின்றி காலியாகச் செல்ல ஆரம்பித்தன. கூட்டம் இல்லை என்று காரணம் காட்டி மின்சார ரயில்களின் எண்ணிக்கையையும் குறைத்தது அரசு.

சரி, இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் ? இப்படி மின்சார ரயில்களுக்கு ஆப்படிக்கக் காரணம் என்ன. இருக்கிறது. அது மெட்ரோ ரயில். மின்சார ரயில் வழித்தடங்களில் அதற்கு இணையாகவே போடப்பட்டது தான் மெட்ரோ ரயில். இதுவரை சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு போடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் ஏழைகளுக்கானது அல்ல. அதன் குறைந்த பட்ச டிக்கெட்டே 20 ரூபாய். மின்சார ரயிலில் 5 ரூபாய் தான். அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு இருபது ரூபாய் கட்டணம் கூடும். தினந்தோறும் வேலைக்காக அதில் போக வேண்டுமென்றால் அது அன்றாடக் கூலி வேலை செய்யும் சென்னை நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்திற்கு மெட்ரோ ரயில் ஒத்து வராது. ஏனென்றால் ஒரு மாதத்தில் அவர்கள் வாங்கும் சொற்ப சம்பளத்தில் கால்வாசியை மெட்ரோ ரயிலுக்கு அழ வேண்டும்.

மெட்ரோ ரயிலை கொண்டு வந்தது திமுக அரசு. பளபளப்பான, ஏசி வசதி கொண்ட ஆனால் அளவில் சிறிய மெட்ரோ ரயில் நகரின் வளர்ச்சியின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. ஆனாலும் கடந்த மூன்று வருடங்களாக மெட்ரோ ரயில் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. காரணம் ? இவ்வளவு கட்டணம் கொடுத்து செல்ல சென்னைவாழ் நடுத்தர மக்களால் முடியாது என்பதே. ஆனால் விடியல் அரசுக்கு அதெல்லாம் கவலையில்லை. அவர்கள் நோக்கம் முழுக்க ஏ.சி. செய்யப்பட்ட மெட்ரோ ரயில்கள் லாபமாக ஓட வேண்டும். அதை வைத்து அடுத்து கோயமுத்தூர், திருச்சி, மதுரை என்று எல்லா ஊர்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து காண்ட்ராக்ட்டுகள் விட்டு கல்லா கட்ட வேண்டும். அது தான் நோக்கம். ஏழை நடுத்தர மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன.

கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் சென்னை மெட்ரோ ரயிலில் ஆண் பெண் பேதமின்றி நெருக்கடியாக இருந்தாலும் எந்நேரமும் பயணிக்கலாம். ஏ.சி அறைகளில் கொரோனா நீண்ட நேரம் உயிரோடு இருந்து பரவும் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட மெட்ரோ ரயிலில் எல்லோரும் பயணிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லவே இல்லை. ஆனால் இன்றுவரை மெட்ரோ ரயிலில் மட்டும் இந்தக் கேவலமான நரித்தனமான கட்டுப்பாடுகள். கேட்டால், கொரோனாவைக் காரணம் காட்டுகிறார்கள். இரண்டாம் அலை முடிந்து இவ்வளவு நாள் கழித்து தற்போது தான், ஆண் பயணிகள் அனைத்து நேரமும் பயணிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அப்பாடா தொல்லை விட்டது என்று பார்த்தால் அதிலும் தடுப்பூசி போட்ட ஆண்களுக்கு மட்டுமே என்று இக்கன்னா வைக்கிறார்கள். மக்களை தடுப்பூசி போட மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறார்கள். தடுப்பூசி போட்டு செத்தால் ஏதாவது அரசோ, தடுப்பூசி நிறுவனமோ தருமா என்றால் கிடையாது. ஆனால் ரயிலில் போக தடுப்பூசி போட்டே ஆகவேண்டும், டாஸ்மாக்கில் சரக்கு வாங்க தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று நிபந்தனைகள் மட்டும் விதிப்பார்கள். இவ்வளவு அற்பப் புத்தியுடன் மக்கள் வாழ்வில் விளையாடும் ஒன்றிய அரசுக்கு மௌனமாகத் துணை போகிறது விடியல் அரசு.

நேற்று வந்த அறிவிப்பின்படி, சென்னை புறநகர் ரயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய  சான்றிதழை காண்பித்து ஆண்கள் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் என்றும், இந்த தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதெல்லாம் ஒரு தளர்வு என்று இதை வேறு ஏன் அறிவிக்கிறார்கள் ?

ஒன்றிய அரசின் இந்த மின்சார ரயில்கள் ஒழிப்பு சதிக்கு மாநில அரசும் துணை போகக் கூடாது என்பது தான் நமது எதிர்பார்ப்பு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.