செப்டம்பர் 12 ஆம் தேதி மருத்துவ நுழைவு நீட் தேர்வு இந்தியாவெங்கும் நடந்து முடிந்தது. இந்தியா முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் மருத்துவ சீட்டுகளுக்கு 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
நேற்று தேர்வு நடந்து முடிந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களின் நம்பிக்கை, கனவுகளை தகர்த்துள்ளது.
சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வுக்கான ஸ்பெஷல் கோச்சிங், பல வருடங்கள் தேர்வு எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்ய இயலாமல் போவது.
நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது எனவே ஒன்றிய அரசின் இச்சட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும்.
இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுகவும் தீர்மானம் இயற்றியது. அந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை அதிமுக அரசு வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டது. இதே அதிமுக, 2016ல், நீட் தேர்வு மசோத பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.
திமுகவின் தற்போதைய இந்தத் தீர்மானம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரவில்லை. ஏனெனில் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய கோர முடியாது. எனவே, ஸ்டாலின் சட்டத்தில் உள்ள வேறொரு பிரிவின் கீழ் சமூக நீதிக்கு எதிராக நீட் தேர்வு இருப்பதால் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோருகிறார்.
இந்தச் சட்டம் நிறைவேறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதலளித்தால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். ஆனால் எந்த குடியரசுத் தலைவர் ஒன்றிய அரசுக்கு எதிராக போடப்பட்ட ஒரு மாநிலச் சட்டத்தை அங்கீகரித்து கையெழுத்து போடுவார்? போடவே மாட்டார். அது அப்படியே குடியரசுத் தலைவரிடம் நிற்கும். அப்படியே கிடப்பில் போடப்படும்.
ஜெயலலிதா காலத்தில் கூட நீட் தேர்வு வரவில்லை என்று ஸ்டாலின் எடப்பாடியின் கேள்விக்கு பதில் கூறினார்.
இந்த விவாதத்தை எதிர்த்து எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள், பாஜக வெளிநடப்பு செய்துள்ளன.
வெளிநடப்பு செய்து பேட்டியளித்த எடப்பாடி காங்கிரஸ் காலத்தில் தான் நீட் தேர்வு மசோதா முதலில் கொண்டு வரப்பட்டது. அதை திமுக ஆதரித்தது என்று குற்றம் சாட்டினார். தற்போதைய நீட் வடிவம் மிகக் கடுமையாக ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும் பாதிக்கும் என்பதைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.