தமிழ் சினிமாவின் பிரமாண்ட, மற்றும் தண்டச்செலவு இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, ஷங்கரின் தேர்வாக இருந்தது இந்தியன் 2.
கமல்ஹாசன் நடிக்க லைகா தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் இந்தியன் 2 தொடங்கியது. தொடக்கத்திலிருந்து இப்போதுவரை சிக்கல் மேல் சிக்கலைச் சந்தித்து வந்தார் ஷங்கர். எப்படியாவது படத்தை முடித்துவிட்டு சிக்கலிலிருந்து வெளியே வரவேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் கமல் விதியும் அவ்வளவு லேசில் அவரை விடுவதாயில்லை.
இந்தியன் 2 அடம்பிடித்து நகராததால், அடுத்தடுத்து இரண்டு படங்களை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார் ஷங்கர். அதிலொன்று, தில்ராஜு தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் படம், ரன்வீர் சிங் நடிக்க அந்நியன் பட இந்தி ரீமேக். இவ்விரண்டு படங்களில் ராம்சரண் படத்துக்கான முதல்கட்டப் பணிகள் தற்போது நடந்துவருகிறது.
இந்த நேரத்தில் ஷங்கருக்கான பிரச்னைகளும் ஒன்றன்பின் ஒன்றாகத் தீர்ந்துவிட்டன. ஷங்கருக்குப் பெரும் பிரச்னையாக இருந்த ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் இல்லையென்றாகிவிட்டது. அதுபோல, சமீபத்தில் லைகா தயாரிப்பாளர் கருணாகரனுடன் நிகழ்ந்த சந்திப்புக்குப் பிறகு, இந்தியன் 2 படத்தையும் முடித்துக் கொடுப்பதென முடிவாகிவிட்டது. இந்த நிலையில், புதிய பூதமொன்று வெளியே தலை காட்டத் தொடங்கியிருக்கிறது.
பொதுவாக, ஷங்கர் இயக்கும் அனைத்துப் படங்களின் கதையும் ஷங்கருடையதாக [?] இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே, இவரின் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் போது, கதைக்கான உரிமை இவரிடம் இருக்கும். முதன்முதலாக, ராம்சரண் படத்துக்கு ஷங்கர் கதை எழுதவில்லை. ஷங்கருக்காக கதையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதுகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, கார்த்திக் சுப்பராஜ் சொன்ன ஒன்லைனை மையமாகக் கொண்டே ஷங்கரின் படம் இருக்கப் போகிறதெனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் செல்லமுத்து என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஷங்கர் – ராம்சரண் படத்தின் கதை தன்னுடையதென தெரிவித்துள்ளாராம்.
ஷங்கர் – ராம்சரண் படத்துக்கான கதை முழு வடிவம் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப்படாத கதைக்கு இப்போதே ‘கதைத்திருட்டு’ சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கு முன்னரும் ஷங்கரின் சில படங்கள் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.