என். நன்மாறன்

ஓசூர் தாலுக்கா ஆபீஸ் சாலையை நம்மில் பலர் இப்போது மறந்து விட்டிருக்கக் கூடும். சிலர் அதன் பெருமை தெரியாமல் கடந்துவிடவும் கூடும். எழுத்தாளனும், செயற்பாட்டாளனுமாகிய லேலேண்ட் ஊழியன் போப்பு ஒரு காலத்தில் அச்சாலையை தன்னகத்தே கொண்டிருந்தான்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இன்றளவும் அடையாளமான நிகழ்வுகள் பல, அச்சாலையின் திறந்த வெளி மேடையிலேயே அப்போது நிகழ்ந்தது.

அந்த குளிரிரவின் பிடியில், முன் வரிசையில் நான் நண்பர்களோடு தரையில் குந்தியிருந்தேன்.
ஒரு கறுத்த மனிதன் பேச ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் மேடையின் பின்புறத்திலிருந்து தொடர்ந்து ஒலித்த ஒரு லாரியின் ஹாரன் சத்தத்தை அம்மனிதன் தன் முன் நிற்கும் மைக் ஒலியால் இடைமறித்து,  ‘மேடை நகராதுண்ணே நீங்கதான் சைடு எடுக்கணும்’
என பதில் சொன்ன அந்நிமிடம் எழுந்த ஆரவாரக் கை தட்டலில் நன்மாறன் என் மனதுக்கு மிக அருகாமையில் வந்திருந்தார்.

ஒரு கலைஞனை ஒரு சொல்லில், ஒரு அசைவில், ஒரு செய்கையில் நாம் இனம் கண்டுவிடமுடியும். அந்த இரவில் தான் நான் அவருக்கு ரசிகன் ஆனேன். அவரின் அநியாய எளிமையைப் பின் பற்ற முயன்று இன்றளவும் தோற்கிறேன்.
சரித்திரத்தின் வழியெங்கும் நாம் பல இரவுகளில் பல ஆளுமைகளை, பேச்சாளர்களைக் கடந்தே ஜீவிதத்தை நிறைக்கிறோம். சிலரின் அடையாளம் மட்டுந்தான் அப்படியே நிறைந்து மனதில் உறைந்துவிடுகிறது.

“ஜீவா இறந்துவிட்டார்” என்ற செய்தி சுந்தரராமசாமியை அடைந்த அடுத்த நிமிடம் அவர் நினைக்கிறார், “ஜீவா ஒரு மேடையில் ஒலிபெருக்கியின் முன் நின்று கர்ஜித்துக் கொண்டிருக்கும்போதுதான் மரணித்திருக்கவேண்டும்.”
சு.ரா அமெரிக்காவில் தன் மகள் வீட்டில் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் நான் நினைக்கிறேன். மகள் வீட்டிலிருந்து அவர் யாருக்கேனும் ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கவோ, ஒரு கவிதையின் மூன்றாவது வரியை கடக்கத் தெரியாமல் திணறிக்கொண்டோ, தாஸ்தாவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நான்காவது முறை வாசித்துக்கொண்டோயிருக்கையில் அவர் தரையில் சரிந்திருக்கக் கூடும்.

நன்மாறன் என்ற எளிமையிலும் எளிய அம்மனிதனை ஒரு அரசியல் வாதியாகவோ, போராட்டக் களத்தில் முன்னணியில் நின்று வானுயர கோஷமிடும் களப்பணியாளனாகவோ, சட்ட மன்ற இரைச்சலில் தன் அபூர்வ குரல் தொலைக்கும் உறுப்பினராகவோ என்ன யோசித்தும் என்னால் நினைக்க முடியவில்லை.

நன்மாறன் என்றால் எனக்கு மேடையும், பேச்சும்தான்.

ஒலி பெருக்கியே அவர்முன் எழுந்து நின்று
‘இன்னும் கொஞ்சம் சத்தமாய்ப் பேசு தோழா’
எனக் கேட்டுவிடுமோ எனப் பலமுறை எண்ணியிருக்கிறேன்.

பேச்சிற்கு எதற்குச் சத்தம்? காந்தியும் பெரியாரும், இ.எம்.எஸ்-சும் உரக்கவா பேசி இந்த உலகையே உலுக்கியிருக்கிறார்கள்?

நன்மாறன் தன் உரையை அதற்கு முன் விநாடி வரை மனதால் கூடத் தயாரிப்பவரில்லை. மனதாலே தயாரிக்காத ஒருவருக்கு தாள்கள் எதற்கு? ஐ பேட் எதற்கு? எதுவுமற்று சற்றுமுன் கழுவி விடப்பட்ட சுத்தமான மனதோடு அவர் மேடை முன் நிற்கிறார். அவருக்குப் பேசுவதற்கு தூரத்திலிருக்கிற யாரோ ஒரு பாட்டாளி தோழனின் இரு கண்கள் போதும். அவரிடம் வார்த்தைகள் புது மழையின் செம்மண் கலந்த காட்டாற்று வெள்ளம் போல் புரள்கிறது. பாவனைகள் இல்லாத அப்பேச்சு ஒரு துளியும் சிதறிவிடாமல் நம் மனதுக்குள் நுழைந்து விடுகிறது.

தன் உடல் மொழியின் அசைவுகள் இப்பேச்சிற்குத் தேவையற்றது என அவர் மேடையேறுவதற்கு முன் நிமிடமே அதை உதறிவிடுகிறார்.
அவரின் நீண்ட உரைகளை, குறுகிய உரைகளை, மிக குறுகிய ஐந்து நிமிட வாழ்த்துரைகளை, நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அசல் கலைஞனின் வார்த்தைப்பாடுகள் அவை.

பீமா என்றொரு திரைப்படத்தில், விக்ரமின் அதீத நடவடிக்கை களைப் பார்த்து மிரண்டு போய், பிரகாஷ் ராஜ் தன் உதவியாளனிடம் கேட்பார்.
‘யார் சாமி இவன்?’ எங்கிருந்து வந்தான்? யாரோட மிச்சம்?
அதே மனநிலையில் தான் ஒசூர் கலையிரவு முடிந்து மூடவிருந்த ஒரு புரோட்டா கடையின் முன் இருட்டில் நின்று நான் என் நண்பன் போப்புவிடம் கேட்டேன்.
யார் போப்பு இவர்?
எங்கிருந்து வந்தார்?
எப்படி இப்படி மன மொழியால் இவரால் மட்டும் பேச முடிகிறது?
சிரிப்பு முழுமையாகிவிடாத ஜாக்கிரதையோடு போப்பு சொன்னான்.
மதுரை, சி.பி.ஐ.எம்-ன் முழு நேர ஊழியர், நிறைய வாசிக்கவும், குறைவாக எழுதவும், நமக்கேன் வம்பு என எந்த இலக்கியச் சண்டையிலேயும் மாட்டாமல், குழந்தைகள் முன் தன் பாடல்களை இசைப்பவன் என்றும் அவரைப்பற்றிய முழுமையை நான் அடையமுடியாமல் பாதியில் நிறுத்தினான் போப்பு.

அது மட்டுமா நன்மாறன்?
அவர் ஒரு மில் தொழிலாளியின் மகன். மத்தியான சாப்பாட்டை, ஆறிவிடாமல் ஒரு பித்தளைத் தூக்குச்சட்டியில் போட்டு பத்திரமாக எடுத்துக்கொண்டு போய் மில்லுக்கு எதிரே நீண்டிருக்கும் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு சாலையோர மனிதர்களை வேடிக்கை பார்த்த பால்யத்தை கொண்ட சிறுவன் அவன்.

வியர்வை வழியும் சட்டையோடு வெயிலேறிய மத்தியானங்களுக்குத் தன் உடலுழைப்பைக்கொடுத்து வாசலுக்கு வரும் அப்பாவை, அப்பையன் தினம் தினம் தன் புன்னகையால் எதிர்க்கொண்டு அவர் வலிமறக்கச் செய்வான்.

பிளாட்பாரத்தின் தரையில் உட்கார்ந்து அப்பா சாப்பிடுவதை எதிரில் உட்கார்ந்து கவனிப்பான். முதல் வாய் சோறும், கடைசி வாய் சோறும், அப்பாவின் ஈரமான கையிலிருந்து மகன் வாய்க்கு வந்தடையும்.

அப்பாவோடு சேர்ந்து கரும்புத் துண்டுகளைக் கொண்டு போய், கீரத்துறை மூலைக்கரை மயானத்திலுள்ள சித்தர் சமாதியில் வைத்துவிட்டு மீண்டும் அவைகளை எடுத்து வந்து மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் யானைக்கு கொடுத்த பிஞ்சுக்கரங்கள் நன்மாறனின் பால்யத்துக்கானவை.

இருமுறை மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த நன்மாறனிடம் இன்று ஒரு தொலைபேசி அழைப்பில் நான் கேட்டேன்!
‘ஒரு வருஷம் எம்.எல்.ஏ.வாக இருந்தவனெல்லாம் பார்ச்சுனர் கார், ஆடி கார்ன்னு போறானே, ஒரு தடவைக்கூட அதைப்பார்த்து நீங்க சபலப்பட்டதில்லையா தோழர்?’
அவர் சற்று நேர அமைதிகாத்து இன்னும் நிதானத்தோடு சொன்னார்.
‘இல்ல பவா, பிளாட்பாரத்துல உட்கார்ந்து சாப்பிட்ட நமக்கு, நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்து சாப்பிட வாய்ச்சிருக்கேன்னு சந்தோஷமாத்தான் இருக்கு.’
இவரை நீங்கள் எந்தச் சட்டகத்துக்குள் அடைப்பீர்கள்?
இவர் யாரின் மிச்சம்?
அல்லது யாரோட தொடர்ச்சி?

அவரே சொல்கிறார். “நான் ஏ.பாலசுப்ரமணியத்தின், சங்கரய்யாவின், கே.பி. ஜானகியம்மாளின், வி.பி. சிந்தனின் தொடர்ச்சி பவா.’ ஒரு வேளை அவர்களின் தொடர்ச்சிதான் நான் என நீங்கள் நம்பினால் அது போதும் எனக்கு. என் பொதுவாழ்வு அப்படி அமைந்திருந்தால் நான் ஒரு பெருமிதமான வாழ்வை வாழ்ந்திருக்கிறேன் என நிறைவு கொள்வேன்.”
இந்த உரையாடலைத் தொடர திராணியற்று நான் முடித்துக் கொண்டேன்.

ஒரு சந்தோஷமான கணத்தில் நான் நன்மாறனிடம் கேட்டேன்.
முதல்வர் ஜெயலலிதா உங்கள் மேல் தனி பரிவோடு இருந்ததாக தோழர்கள் சொல்கிறார்களே?
அவர் சிரித்துக் கொண்டார். அச்சிரிப்பு உள்ளிருந்து அப்படியே வருவது.
என் மீதல்ல பவா. என் பேச்சின் மீதும், என் உண்மையான செயல்பாடுகளின் மீதுமானது அது. ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையெனில் நான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளின் மீதும், என்னை வழிநடத்தும் கட்சியின் மீதும் அவர்களுக்கிருக்கும் மரியாதை என்று மட்டுமே அதை எடுத்துக் கொள்வேன்.
அப்பரிவை எனதாக்கி, வைகை ஆற்றில் மணல் அள்ளும் காண்ட்ராக்டையா கேட்டுவிடப் போகிறேன்?

சட்டசபை அனுபவங்களில் கலைஞரிடம் கூட நான் பல சுவராஸ்மான உரையாடல்களைச் சந்தித்திருக்கிறேன்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வேலூர் ஞான சேகரனுக்கும் எனக்கும் நடந்த ஒரு காரசாரமான உரையாடல் தொடர்ச்சியில் கலைஞர் இடைமறித்து என்னைக் கேட்டார்,
“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் நன்மாறன்?”
“இரண்டு பேர்”
“பெயர் என்ன?”
“குணசேகரன், ராஜசேகரன்”
அப்பவே ஞானசேகரன் வேண்டாமுன்னு விட்டுட்டீங்களா?
அதைக் கேட்டு ஞானசேகரனே சிரித்து விட்டார்.

மதுரை கிழக்கில் நான் இருமுறை சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராகக் கட்சியால் நிறுத்தப்பட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே தனிப்பட்ட முறையில் டெபாசிட் கட்டகூட வக்கில்லாதவன் நான். எல்லாமே கட்சிதான்.
இருமுறையும் என் தொகுதிக்கு மட்டும் மூன்று முறை ஜெயலலிதா அம்மையார் பிரச்சாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் கட்சி ஆட்களுக்கு அது மிகப்பெரிய வியப்பு.
என்னைக் கேட்டார்கள். எங்கள் தொகுதியின் தெருக்களுக்கு ஒருமுறைகூட வராத அம்மா உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனைமுறை, இப்படி குறுகிய சந்து பொந்தெல்லாம் நுழைந்து பிரச்சாரம் செய்கிறார்கள்?
நான் சிரித்துமட்டும் அவர்களின் சொற்களைக் கடந்தேன்.
அதற்கு ஒரு பின்னணி உண்டு. அது எனக்கும், என் கட்சிக்கும், அந்த அம்மாவுக்கும் தெரியும்.

தோழர் சங்கரய்யா மதுரை கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராக நின்றபோது நான் முன்னணி ஊழியன். பிரச்சாரக் கூட்டத்தில் உணர்வு வயப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர். சொன்னார்.
எனக்கு ஒரு லட்சம் ஓட்டுப் போட வாய்ப்பிருந்தால் ஒரு லட்சம் ஓட்டையும் தோழர் சங்கரய்யாவுக்கே போடுவேன்.
அதே எம்.ஜி.ஆர். மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளராக நின்றபோது தோழர் என்.எஸ்.சும் நானும்தான் அவர் வேட்பு மனுவை முன்மொழிந்தோம்.
திண்டுக்கல் இடைத்தேர்தலுக்காக மட்டுமே என் கல்லூரிப் படிப்பைத் தூக்கி திண்டுக்கல்லுக்கு அப்பால் வீசியெறிந்திருக்கிறேன் பவா. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடாதுதானே! துருவேறிய எவர் நினைவுகளிலும் இந்தக் கசிவு இன்னமும் மிச்சமிருக்கும்தானே! அதுதான் ஜெயலலிதாவின் இந்தப் பரிவுக்கான காரணமென நான் நினைக்கிறேன்.

கலை இரவு மேடைகளில் பேசுவதற்கு முன்னும், பேசி முடித்த பின்னும் அவருக்குச் சொக்கலால் பீடிக்கட்டு வேண்டும். அதை எப்படியாவது வாங்கி தந்துவிட வேண்டுமென பல நள்ளிரவுகளில் திறந்திருக்கும் ஏதோ சில பெட்டிக்கடைகளை நோக்கி ஓடியிருக்கிறேன்.
இரண்டு பேர் பீடிபிடிப்பதைப்பார்த்து நாமும் அதைக் கைக்கொண்டால் என்ன வென்று ஆர்வம் மேலிட்ட என் வேலையற்ற நாட்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.
ஒருவர் மம்முட்டி, இன்னொருவர் நன்மாறன்.
அந்த ஆர்வ புகை என் நெஞ்சுக் கூட்டை அடையுமுன்பே கைகளால் அதைத்தடுத்து காற்று வெளியிடைத் திரியவிட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆளுமைக்கும் எதோ ஒரு கவிஞனோ, எழுத்தாளனோ, இன்னொரு ஆளுமையோ அல்லது அவர்களின் ஒரு வார்த்தையோ ஒரு வரியோதான் வாழ்வின் ஆதர்சமாக இருந்திருக்கிறது.
‘பேசித் தீர்க்கலாம்’ என்ற காந்தியின் சொல் இன்றளவும் எத்தனையோ மனிதர்களின் ஆதர்சம்.
தோழர் நன்மாறனுக்குச் சொல் அல்ல ஒரு பாடல் வரியே இன்றளவும் அவரை, அவரின் நிழல் போலப் பின் தொடர்ந்து வருகிறது.
அவர் படித்த பள்ளிகளின் நாட்டு ஓடு வேய்ந்த கட்டிடங்களிலோ, அல்லது கூரைக்கொட்டகைகளிலோ மழைநீர், ஒழுகாத இடம் பார்த்து ஒதுங்கும் தருணங்களில் மாணவக் கதகதப்புக்கிடையே யாரோ ஒரு நண்பன் அல்லது யாரோ ஒரு ஆசிரியர் எப்போதுமே நன்மாறனைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள் எல்லோருக்கும் நேயர் விருப்பமான அந்த ஒரே பாடலின் வரிகள் இவை.
எளியோரைத் தாழ்த்தி
வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா?
எத்தனை அடர்த்தியான சொற்கள் இவை?
இப்பாடல் வரிகள் தன் வாழ்வை இன்றளவும் முன் செலுத்துவதாக அவர் நம்புகிறார்.

என் மகன் வம்சிக்கு அப்போது மூன்று வயது. கடுங்குளிரைச் சற்றுத் தணிக்கவேண்டிக் குழந்தையை ஒரு சிறு கம்பளியால் போர்த்தி, எங்கள் மடியில் கிடத்திக்கொண்டு, பாண்டிச்சேரியில் நடந்த த.மு.எ.சவின் மாநிலக் குழுக்கூட்டத்திற்கு நானும் ஷைலஜாவும் பேருந்தில் பயணித்தோம். நேரம் அதிகாலை ஐந்தரை மணி இருக்கலாம் தாங்க முடியாத குளிர் எங்கள் முகத்தில் மோதிச்சென்றது இன்னும் நினைவிருக்கிறது.

யாரோ ஒருவரின் கைமறிப்பில் பஸ் வில்லியனூரில் நின்றது.

ஒரு புளிய மரத்திற்கு அடியில் நின்றிருந்த ஐந்தாறு பேர் பேருந்தில் ஏறினார்கள். தலையை உல்லன் மப்ளர் போட்டு மூடியிருந்த அந்த மனிதனின் கண்களை நான் சட்டென அடையாளம் கண்டு கொண்டேன்.
அவர் தோழர். நன்மாறன்.

அப்போது அவர் மதுரை கிழக்குத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.
நான் என் இருக்கையிலிருந்து எழுந்து அவரை அமரச்சொல்கிறேன். பிடிவாதமாக மறுக்கிறார்.
பேருந்தில் நான் பார்க்கிற ஒவ்வொருவரிடமும், இவர் மதுரையின் தற்போதைய எம்.எல்.ஏ. என்று அவருக்கு கேட்டுவிடாத ரகசிய மொழியில் சொல்லிச் செல்கிறேன். எந்த பயணியின் முகத்திலேயும் துளி நம்பிக்கையில்லை. என் இருக்கையை காலியாக விட்டுவிட்டு அவருடனே பாண்டிச்சேரி வரை நின்றுகொண்டே பயணிக்கிறேன்.
எப்படி இந்த மனநிலையை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடிகிறது?

திண்டுக்கல் இடைத்தேர்தல் முடிந்ததும் மனதிலும், வீட்டிலும் ஏற்பட்ட வெறுமையைப் போக்க பத்துக்கும் மேற்பட்ட சிறுசிறு வேலைகள் பார்த்திருப்பார். அதில் மிக உயர்வானதாகவும் கௌரவமானதாகவும் கருதிய வேலை பஸ் கண்டக்டர் வேலைதான். அப்படியெனில் அவர் பார்த்த மற்ற பணிகளை நாமே கணக்கில் கொள்ளலாம்.

எனக்கும் அவருக்குமான பல மேடை அனுபவங்களை நான் இன்றளவும் அடைகாத்து வைத்திருக்கிறேன். தேனியில் நடந்த ஒரு இலக்கிய பரிசளிப்புக் கூட்டம். நான் பேசி முடித்தவுடன் அவர் ஆரம்பிக்கிறார்.
தோழர்களே,
“அமெரிக்காக்காரன் ஒரு பட்டனை அழுத்தினால் பத்து நிமிடங்களில் இப்பூமி பஸ்பமாகும். ரஷ்யாக்காரன் அதை பாதியிலேயே தடுத்து நிறுத்தும் வித்தையைக்கண்டு பிடித்து வைத்திருக்கிறான். இதன் இரண்டுக்கும் நடுவே ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் வாடகை எனக் காகித அட்டையில் எழுதி பழைய சைக்கிளை வாடகைக்கு விடுகிறார் நம்மூர் அண்ணாச்சி.”
எத்தனை பெரிய இரு வல்லரசுகளின் விவகாரத்தை தேனியில் உள்ள ஒரு சாமானிய மனிதனுக்குச் சொல்ல முடிகிறது இவரால்!

அவருக்கென பல பெருங்கனவுகள் உண்டு. அதை அடையும் யுக்திக்கு அவரிடம் எளிமையான வழிகளும் உண்டு. மண்பாதை போன்ற எளிமையான எந்த பூச்சுமற்ற பூமியோடு தொப்புள் கொடி உறவு வைத்து அது எப்போதும் ஈரம் காத்து நிற்கிறது.
இந்தியாவில் ஒரு வர்க்கப்புரட்சி வெடித்தெழுந்தால் அதை உலகமே வியந்துபார்க்கும். இந்த தேசத்தில் தான் அத்தனை அத்தனை தேசிய இனங்கள் உண்டு. எல்லா இனத்திலேயும் அடித்தட்டு மக்கள் இன்றும் சுரண்டப் படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் பொறுப்பார்கள்?
அவர்களின் பெருமூச்சுகளின் வெப்பத்தை காலம் தாங்காது என்பதை உறுதியாய் நம்பும் மார்க்சியர்களில் நன்மாறன் முதன்மையானவர்.
அவருக்குத் தாயுமானவரை, கணியன் பூங்குன்றனாரை. அருணகிரிநாதரை, பாரதியை, மார்க்சை என்று சகலரையும் பிடிக்கும் இரகசியம் இதுதான்.

இவர்கள் அனைவருமே தங்கள் பாடல்களை, தத்துவத்தை, உலகம், ஜெகம், பூமி, மானுடம் எனத் துவங்குகிறார்கள்.
என் குடும்பம், என் தெரு, என் ஜாதி, என் மதம், என் நாடு என சுருங்கும் எவனும் மகாகவி மட்டுமல்ல கவியே அல்ல என நன்மாறன் தன் உள் மனதால் மதிப்பிடுகிறார்.
என்றேனும் வெடித்தெழும், ஒரு இந்திய மக்கள் ஜனநாயக புரட்சியின் மனிதத் திரளில், வயதானாலும் நன்மாறன் முதல் வரிசையில் நிற்கக்கூடும்

எப்போதுமே காலம் ஈவிரக்கமற்றதுதானே!

வயோதிகத்தின் பொருட்டு, உடல் தளர்வின் பொருட்டு ஒரு வேளை முன் வரிசை அவரை அனுமதிக்காதெனில், அப்பா சோறூட்டிய அதே பிளாட்பாரத்தரையில் நின்று, வீரஞ்செறிந்த அப்பேரணிக்கு ஒரு பாடலையேனும் அவர் இசைக்கக்கூடும்.
‘எளியோரைத் தாழ்த்தி
வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் இப்போது மாறுமே’

-பவா. செல்லத்துரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.