மேடைக்கலைவாணர் தோழர் என். நன்மாறன் மதுரையில் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் தோழர் என்.நன்மாறன் (வயது 74) வியாழனன்று (28-10-2021) மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்.

தோழர் என்.நன்மாறனுக்கு புதனன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதனன்று இரவு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையின் போது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டவுடன் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி மற்றும் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர், மதுக்கூர் ராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் சென்று பார்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு காலமானார்.

தோழர் நன்மாறன் 1947 மே மாதம் 13 ஆம் தேதி மதுரையில் வே. நடராஜன் – குஞ்சரத்தம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். மதுரை அழகரடியில் உள்ள ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப் படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ., (தமிழ்) பட்டமும் பெற்றார்.

நன்மாறனின் தந்தையார் பஞ்சாலை தொழிலாளி, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் மீதான அடக்குமுறைக் காலத்தில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தவர். சோவியத் நாடு, தாமரை இதழ்களை வாசித்தவர். அதனால் இயல்பாகவே நன்மாறன் கம்யூனிஸ்ட்டுகள் மீதான அபிமானத்தை கொண்டிருந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்தவர். நூலகம் சென்று படிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே இருந்ததால் எழுத்தாளர்கள் மு.வரதராசன், அகிலன், கல்கி, பி.எஸ்.ராமையா, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன் போன்றவர்களின் படைப்புகளை வாசித்தார். அத்துடன் பள்ளியில் படிக்கும் போதே தமிழ் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறனுடன் விளங்கினார். அது அவரது பேச்சுத் திறமைக்கு ஆதாரமாய் அமைந்தது.

பள்ளியில் மாணவர் மன்ற செயலாளராகவும், மதுரை நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராகவும் செயல்பட்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், மபொ.சிவஞானம், என்.சங்கரய்யா, ஆர்.உமாநாத் ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பேசும் திறனை பெற்றதால் மேடைக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். பட்டிமன்றங்கள் சங்க இலக்கியம் பற்றி மட்டுமே நடந்து வந்த காலத்தில் திரைப்படங்கள் பற்றி முதன் முதலில் பேசுவதை துவக்கியவர் நன்மாறன். தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் பற்றிய பட்டிமன்றங்களையும் அவர் தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் அரங்கேற்றியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பிறகு முழு நேர ஊழியராக செயல்பட்டார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட போது,அதன் மாநிலச் செயலாளராக பணியாற்றினார். இளைஞர்களுக்கு வேலை கேட்டும், வேலையில்லாக் கால நிவாரணம் கேட்டும் மதுரையில் நன்மாறன் தலைமையில் 250 இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு,அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1978 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையிலிருந்து சென்னை நோக்கி நடைபெற்ற வாலிபர் சங்க சைக்கிள் பேரணிக்கு நன்மாறன் தலைமை தாங்கிச் சென்றார். இளைஞர்கள் திருவிழாவில் சோவியத் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் நடைபெற்ற போது நன்மாறன் கலந்து கொண்டார். இயல்பாகவே எழுத்தார்வம் கொண்ட நன்மாறன் மாணவப் பருவத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். பின்னாளில் தீக்கதிர் நாளேடு தயாரித்த உலகத் தமிழ் மாநாட்டு மலரில் கட்டுரை எழுதினார். ‘சின்னப்பாப்பாவுக்கு செல்லப்பாட்டு’ என்ற சிறுவர்களுக்கான பாடல் நூலை எழுதினார். கம்யூனிஸ்ட் இயக்க மாமேதைகள் கார்ல்மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். சில இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார். மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பயில்வது எவ்வாறு என்ற நூலையும் எழுதினார். பல்வேறு கட்டுரைகளையும், சிறு பிரசுரங்களையும் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான கூட்டத்திலும் நன்மாறன் பங்கேற்றார். தொடர்ந்து தமுஎகசவின் மாநில துணைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் செயல்பட்டார். மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளில் தலைவராகவும் செயல்பட்டார். அவருக்கு சண்முகவள்ளி என்கிற மனைவியும், குணசேகரன், ராஜசேகரன் என்கிற மகன்களும் உள்ளனர். தோழர் நன்மாறனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும். இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.