ராஜாவின் பெருமைகளைப் பேசித்தீர இந்த ஒரு ஜென்மம் போதாது என்பதுதான் நிஜம். விகடன் தீபாவளி மலருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இளைய இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ராஜா குறித்து சிலிர்ப்புடன் சிலாகித்திருக்கிறார்.
அவரது பேட்டியின் ஒரு பகுதி… இசைத்துறைக்கு எப்படி வந்தீங்க பிரதர்?
”ஆறு வயதிலிருந்தே இசை பிடிக்கத்தொடங்கிவிட்டது. அம்மா கேந்திரியா வித்தியாலயா ஸ்கூலில் ஆசிரியையாக இருந்ததால், எத்தனையோ ஊர்களுக்கு டிரான்ஃபர் ஆகிப்படிச்சிருக்கேன். பெங்காலி நல்லாத்தெரியும். அங்கே ஐயப்பன் பாடல் பாடும்போது சினிமாப்பாட்டை அப்படியே தமிழ் முலாம் பூசிப்பாடிடுவேன். 450 குறும்படங்களுக்கும் மேல் இசை அமைத்த அனுபவம் இருக்கு. விளம்பரப்படங்களுக்கும் இசை கோர்த்திருக்கேன். பாடல்களில் மெலடியை உயிராக நேசிப்பேன். அதற்கேற்ப கதை அமைந்தால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.
இன்னைக்கும் பாருங்க, ராத்திரி 11 மணிக்கு மேல இளையராஜாதான் நம்மைக் காப்பாற்றி, கரையேற்றுகிறார். பலரும் அவர் பாடல்களை பாடாந்திரம் முழுக்கத் தெரிஞ்சு கூட கேக்குறதில்ல. அனுபூதி நிலன்னு சொல்லுவாங்க. அந்த நிலக்குக் கூட்டிட்டுப் போகும். கண்ணில் நீர் திரளும்.பெருமூச்சு வரும். இளையராஜா தரும் இசையின்பம் பற்றித் தனியாவே பேசலாம். அடுத்து வந்தவர்கள் மெலடியைக் காணாமலாக்கி…….அதெல்லாம் பெரும் துயரம்.
கர்நாடக சங்கீதமெல்லாம் நான் முறையாகப் படிக்கவே இல்லை. இளையராஜா பாடல்களிலே 800 பாடல்களுக்கும் மேலே ராகங்கள் கொண்ட லிஸ்ட் வச்சிருக்கேன். அதை மீறியெல்லாம் இனிமே ஒண்ணுமே செய்ய முடியாது. அடுத்த வந்த நாங்கள்லாம் நல்லதா சிலவற்ரைக் கொண்டுவர முடியுமான்னு பாக்குறோம். ஆனால் ஊடாடிப் பார்த்தால் எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் இருக்கும்…’என்று மனம் திறந்திருக்கிறார் விஷால் சந்திரசேகர்.
இசைஞானி பற்றின இந்த ஞானத்துக்காகவே உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு பிரதர்.