எப்போதும் அட்வைஸ் செய்யும் ஒரு கதாபாத்திரமாக நான் தோன்ற விரும்பவில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உடன்பிறப்பே’. இது ஜோதிகா நடிப்பில் வெளியாகும் 50-வது படமாகும். அமேசான் ஓடிடி தளத்தில் நாளை (அக்டோபர் 14) வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜோதிகா இணையம் வழியே பேட்டிகள் அளித்துள்ளார். அதில் “தொடர்ச்சியாக சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரப் போராடும் கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள். மீண்டும் வேறுவகையான களங்களில் நடிப்பீர்களா? காதல் கதைகளில் எல்லாம்” என்ற கேள்வி ஜோதிகாவிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு ஜோதிகா அளித்த பதில்:”உண்மையில் நான் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். ஆனால், தற்போது ஒரு படத்தைத் தேர்வு செய்யும்போது எப்போதும் என் குழந்தைகளை மனதில் வைத்துக் கொள்கிறேன். அவர்களுக்குத்தான் என்னுடைய முன்னுரிமை. ஆனால், எப்போதும் அட்வைஸ் செய்யும் ஒரு கதாபாத்திரமாக நான் தோன்ற விரும்பவில்லை.
தமிழ்நாட்டுப் பெண்கள் மிகவும் கண்ணியமானவர்கள். ஆனால், 80 சதவீதத்துக்கும் அதிகமான படங்களில், அவர்களைச் சரியாகக் காட்சிப்படுத்துவதில்லை. நாங்கள் திரையில் காட்டப்படுவது போன்றவர்கள் அல்ல. அவை நாங்கள் அணியும் உடைகள் அல்ல. நாங்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. நிச்சயமாக நாங்கள் எந்நேரமும் ஆண்களைத் துரத்திக் கொண்டிருப்பவர்களும் அல்ல.
ஆண்கள் தங்களைத் திரையில் காணும்போது, அவர்கள் சக்திவாய்ந்த கதாபாத்திரங்களாக, காதல் முதல் ஆக்ஷன் வரை அனைத்தையும் வெல்லக்கூடிய கதாபாத்திரங்களாகக் காட்டப்படுகிறார்கள். ஆனால், ஒரு பெண்ணின் பார்வையில், அங்கு என்ன இருக்கிறது? என்று பலர் யோசிப்பதில்லை. பெரும்பாலும் நாங்கள் எப்போதும் ஒரு பலவீனமான, குறைந்த முக்கியத்துவம் கொண்ட ஒரு கதாபாத்திரமாகவே காட்டப்படுகிறோம்.
இதுதான் நான் செய்ய விரும்புவது:..ஒவ்வொரு முறையும் என்னுடைய படத்திலிருந்து ஒரு பெண் வெளியே செல்லும்போது, அவள் திரையில் தன்னைப் பார்த்து அத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு காமெடி திரைப்படமாக இருக்கலாம், ஆக்ஷன் டிராமாவாக இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத் திரைப்படமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணை எப்படிக் காட்டுகிறோம் என்பதுதான் முக்கியம்”.இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.