தனக்கென தனி ஸ்டைல் அமைத்துக் கொண்டு திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் பலருண்டு. அவர்களில் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அடையாளம் காணப்பட்டு, இயக்குநர் ஸ்ரீதரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் 12.10.2021 செவ்வாய்க்கிழமையன்று வயது முதிர்ச்சி காரணமாக காலமானார்.
ஈரோடு பக்கம் பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீகாந்த். இவரின் இயற்பெயர் வெங்கட்ராமன். அழகும் துடிப்புமிக்க இளைஞரான இவர், அரசுப்பணியில் நல்ல பொறுப்பில் வேலையில் இருந்தார். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகங்களின் பக்கம் இவரின் கவனம் செல்ல, அங்கே அறிமுகமானார் இயக்குநர் கே.பாலசந்தர்.
திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்தபடி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல், கவிஞர் வாலியுடனும் நாகேஷுடனும் நல்ல நட்பில் இருந்தார். எல்லோரும் ‘வாடாபோடா’ நண்பர்களாகத் திகழ்ந்தார்கள்.
‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’ என தொடர்ந்து தன் படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தார் பாலசந்தர். அதேபோல், இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டராக, மிகவும் ஸ்டைலாக, கெத்தாக நடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த்.
‘வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த்.
ஜெயலலிதாவின் முதல் ஹீரோ என்பது போல், ஸ்ரீகாந்தின் வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. ஜெகன் எனும் கேரக்டரில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். இவரின் நடை, உடை, பாவனைகளும் வசன உச்சரிப்புகளும் எவர் சாயலுமில்லாமல் புதுமாதிரியாக இருந்தது என்பதும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். மகனாக இதில் மிரட்டியிருப்பார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’யில் சிவாஜியின் தம்பியாக அசத்தியிருப்பார்.