1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த்.

ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்தவர் வெங்கி என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய மேஜர்காந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமான போது தனக்குச் சூட்டிக்கொண்டான்.

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும் நாகேஷும் துவக்க நாட்களிலே சாப்பாட்டுக்கு திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் க்ளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியவர்.

கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் சிலநேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தனின் கதை, ராஜநாகம் போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு மதனமாளிகை, சிட்டுக்குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெட்கமில்லை, நவக்கிரகம் என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்திலே 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். அன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஸ்ரீகாந்த், அவரது துணைவியார் லீலாவதி, மீரா அவர் கணவர் ஜாக் அலெக்‌ஸாண்டர் பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம் சினிமா என்று இரண்டு Coffee Table புத்தகங்களை கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தேன். இன்று அந்த அற்புத கலைஞர் அமரராகி விட்டார் அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

– நடிகர் சிவகுமார்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.