ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார்.
20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ பதிலளிக்கத் தயாராக உள்ளார்.
‘ஜெய் பீம்’ திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது, “24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லா தருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் தனது அனுபவம் பற்றி சூர்யா கூறுகையில், “இந்தத் திரைப்படம் மற்ற படங்களைப்போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை. இது எனக்கு சவாலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நிச்சயமாக இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்தில் நடித்துள்ளதே ஒரு பொறுப்பான செயல் தான். இனிவரும் காலங்களிலும் நான் எனது ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க விடும்புகிறேன்” என்றார்.
‘ஜெய் பீம்’ திரைப்படம் சிந்தனையைத் தூண்டும் கதைக்களம் கொண்டது. கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது. தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.