அண்ணாத்த படத்தின் ரிசர்வேஷன் நேற்றே துவங்கிவிட்ட நிலையில் அப்படத்தின் டிக்கெட் ப்ளாக்கில் 2 ஆயிரம் முதல் 3000 வரை விற்கப்படுவதாக செய்திகள் நடமாடுகின்றன. இந்த அநியாயம் ஒருபுறமிருக்க, தியேட்டர் கவுண்டரிலேயே கட்டணக் கொள்ளை நடத்த அனுமதிக்கப்படிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகவிருக்கிறது.தமிழகமெங்கும் 90 சதவிகித திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
பெரிய நடிகர்கள் படம் என்றால் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது வழக்கம். ரஜினிகாந்த் படம் அதுவும் பண்டிகை நாளில் வெளியாகவிருக்கிறது என்பதால் இந்தப்படத்துக்கும் அதிகாலைக்காட்சிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் நள்ளிரவு ஒரு மணிக்கே படம் திரையிடப்படும் என்று சொல்கிறார்கள்.
செய்தி இதுவல்ல…தமிழகமெங்கும் அதிகாலைக்காட்சி திரையிட விரும்பும் திரையரங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கும் வாய்மொழி உத்தரவு என்னவென்றால்? அதிகாலைக்காட்சிக்கு 500 ரூபாய் விலை வைத்து நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யுங்கள் அடுத்த காட்சிக்கு 300 ரூபாய் விலை வையுங்கள் என்று சொல்லியிருப்பதுதான் செய்தி. இதே நிலையை அடுத்த நாளுக்கும் நீட்டித்துக்கொள்ளை அடிக்கலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.
திரையரங்குக்காரர்கள் வெளிப்படையாக விற்காமல் மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்கும் காலம் இருந்தது. இப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்காரர்கள் ஆகிய மூவருமே ஒருங்கிணைந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடப் பலமடங்கு கட்டணம் உயர்த்துகிறார்கள்.
அநீதியான இந்தக் கட்டணக்கொள்ளையை ஆளும்கட்சியைச் சார்ந்த நிறுவனமே செய்யத்தூண்டுகிறது. திரைப்படங்களில் மிகப்பெரிய நியாயங்களைப் பேசும் ரஜினிகாந்த் அதற்கு ஒத்துழைத்து வேடிக்கை பார்க்கிறார் என்பதுதான் வேதனை எனப் புலம்புகின்றனர் மக்கள்.
இதுவரை பகல்கொள்ளையைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது நடக்கவிருப்பது நடுராத்திரிக்கொள்ளை.