தமிழ் சினிமாவில் பேய் சீசன் தலை விரித்தாடும் காலம் இது. தியேட்டர்களுக்கு மனிதர்களின் வருகை குறைந்துவிட்டதால் பேய்களாவது கொஞ்சம் உற்சாகமாகப் படம் பார்க்கட்டும் என்று ஏற்கனவே இருமுறை பார்த்துச் சலித்த அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தோடு, பேய்களை விடக் கொடூரமாகக் கொண்டு வந்திருக்கிறார் சுந்தர்.சீ.
இந்தப் படத்தின் கதை என்னவென்று தனியாகச் சொல்ல வேண்டாம். முதலிரண்டு படங்களில் இருந்த அதே கதை, அதே பேய், அதே வில்லன்கள், அதே ஆண்ட்ரியா,இன்னும் சில அதே அதே…
ஓர் அரண்மனை. அந்த அரண்மையில் இருக்கும் கர்ப்பிணிப்பெண் பெண் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட, தாயாக மாற வேண்டிய அந்தப் பெண் பேயாக மாறி சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்க துரத்துகிறார்.
சுந்தர். சி, சில அந்தர் பல்டிகள் அடித்து, பெரிய சாமி சிலையின் முன்பாக பூஜைசெய்து, நிறையப் பேருடன் பாட்டுப்பாடி எல்லோரையும் காப்பாற்றுகிறார்.
இப்படி மூன்றாம் பாகம் வரை எடுத்து பாதகம் செய்வார் என்று ரசிகர்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் முதல் பாகத்தையே அட்டர்ஃப்ளாப் ஆக்கியிருப்பார்கள். என் செய்வது விதி வலியது.
கடந்த படத்தில் வந்ததைப் போலவே முதலில் குழந்தையிடம் படம் வரைந்து, பந்து விளையாடி, பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கு முகம் காட்டி, இறுதியாக கதாநாயகனிடம் வந்து நிற்கிறது பேய். கால்ஷீட் பஞ்சாயத்துகளால் முந்தைய படங்களில் இருந்தவர்களில் ஆண்ட்ரியா, மனோபாலா, சுந்தர் சியைத் தவிர பிற நடிகர்கள் எல்லோரும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதாவது காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் கவனத்தைத் தக்கவைக்கும்படி எதுவுமே நடப்பதில்லை. அடுத்த ஒரு மணி நேரத்திலும் அதுவே பழகிப்பேய் ஸாரி பழகிப்போய் விடுகிறது. பாத்திரங்களின் அறிமுகம், பேய்க்கு ஓர் அறிமுகம், இரண்டு பாடல்கள் என்று நேரத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, பேய்க்கான காரணம் என எதிலுமே புதுமை இல்லாததால், பேயை கதாநாயகன் எப்படி ஒடுக்கப்போகிறார் என்பதையெல்லாம் முன்பே யூகித்துவிட முடிகிறது. இதனால், முழுப் படமுமே சலிப்பூட்டும் வகையில்தான் நகர்கிறது.
யோகிபாபு, மனோபாலா, விவேக், மைனா நந்தினி கூட்டணி படம் நெடுக வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள். பேய்த்தனமான காமெடி.
கியூட்டாக இருக்கும் ராஷி கண்ணு இனிமே இந்த மாதிரி படங்கள்ல நடிக்கணுமான்னு கொஞ்சம் யோசி கண்ணு.
அடடே…இந்தப் படத்தில் ஆர்யாவும் இருக்கிறார். திடீர் திடீரென தலைகாட்டி மறைவதோடு அவரது வேலை முடிந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகு ஆண்ட்ரியா தலைகாட்டி கொஞ்சம் அதகளம் செய்கிறார்.
ஒளிப்பதிவு,பின்னணி இசை,பாடல்கள் பற்றியெல்லாம் பேசிப்பிரயோஜனம் இல்லை.
இறுதியாக ஒரு எச்சரிக்கை…இந்த பேய்க்கதை இம்சைகளை சுந்தர்.சி.இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. பேய்கள் அவர் மீது பெருங்கோபத்திலிருக்கின்றன.