ஒரு யூடியூப் வலைதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘தளபதி’ படத்தில் இடம்பெற்ற …’யமுனை ஆற்றிலே’ பாட்டு சுமாரான பாட்டுதான். ஆனால் அதை மணிரத்னம் ஜீ தான் சிறப்பாக படமாக்கி பாட்டுக்கே உயிர்கொடுத்தார் என்று மாமி நடிகை ஷோபனா திருவாய் மலர்ந்தருள, தற்போது ராஜா ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு முதல் அடைமழையை விட சூடான மழை ஷோபனாவுக்கு ரசிகர்கள் பதிலடி தரும் பதிவுகள்….அவற்றில் ஒரு சாம்பிள் எழுத்தாளர் அதிஷாவுடையது…
…இவர்கள் இளையராஜாவை பாராட்டுவதற்கென்றே ஒரு ஸ்பூன் வைத்திருக்கிறார்கள். எப்போதும் அதில் அளந்துதான் அவரை பாராட்டுவார்கள். அல்லது பாராட்டாமல் தவிர்த்துவிட்டு செல்வார்கள். ஆனாலும் இளையராஜா ஏனோ அவர்களுடைய அங்கீகாரத்துக்கு எப்போதும் ஏங்குகிறவராகவே இருந்திருக்கிறார். அவர்களை திருப்திபடுத்த என்னென்னவோ சாகசங்களை செய்திருக்கிறார். பட்டையும் கொட்டையுமாக தேவாரம் பாடுவார் திருவாசகம் பாடுவார், சமஸ்கிருத மந்திரம் ஓதுவார். ஒரு ராஜா ரசிகனாக எனக்கு எப்போதுமே அது பிடித்ததில்லை. யோவ் நீ ஜீனியஸ்… எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம்… உனக்கெதுக்கு இந்த குட்டிகரணம் குதிரைசவாரிலாம் என்றுதான் நினைத்திருக்கிறேன்.
ஷோபனாவும் அந்த ஸ்பூனர்களில் ஒருவராகத்தான் அக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே காட்சிகளும் அதை இயக்கியவிதமும்தான் அப்பாடலை அழியாப்புகழ்பெற செய்தது என்கிறார்.
ஒரு சின்ன எக்ஸர்சைஸ்… அந்த யமுனை ஆற்றிலே பாடல் யூட்யூபில் இருக்கும் அதை போட்டுவிட்டு ம்யூட் போட்டு கேட்டுப்பாருங்க… அந்தப்பாடலின் ஜீவன் எங்கிருக்கிறது என்பதை உணரலாம். ஒட்டுமொத்த தளபதி படமுமே ராஜாவின் இசைக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்கும். ராஜாதான் படத்தையே தொடங்கி வைப்பார்.
அதே படத்தில் வந்த புத்தம் புது பூ பூத்ததோ… பாடலுக்கு காட்சியே இல்லை. ஆனாலும் இன்றும் அது கொண்டாடப்படுகிறது. புத்தம் புது காலை பாட்டுக்கு என்ன காட்சி இருந்தது. சங்கத்தில் பாடாத கவிதை, மெல்ல மெல்ல என்னை தொட்டு, சின்ன புறா ஒன்று என்ன கனாவினில், தேவதை இளம் தேவி..னு எத்தனை ஆயிரம் பாட்டுகள் உண்டு… காட்சிகளை தாண்டி இன்னமும் மக்களால் நினைவுகூரப்படுது.
அமைதிப்படையில் வந்த சொல்லிவிடு வெள்ளிநிலவேவுக்கு காட்சி கிடையாது. பலருக்கு அது அமைதிப்படை படத்தில் வருகிற பாட்டு என்றுகூட தெரியாது. ஆனாலும் காலம்தாண்டி அந்தப்பாடல் நிற்கிறது. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாட்டு இன்னமும் கொண்டாடப்பட காட்சிகளா காரணம். ராஜா பாடல்களின் காட்சிகளை தேடிப் பார்த்தால் கொலைவெறிதான் வரும்.
ஈரவிழிக்காவியங்கள் என்கிற படத்தின் பாடல்கள் சமீபத்தில் 2கே கிட்ஸ் மத்தியில் பயங்கர பாப்புலர் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்ன படம் யாரு ஹீரோ என்ன விசுவல் யாருக்குமே தெரியாது. அதுதான் ராஜா.
அதனால்தான் இன்றும் கூட எடிட் என்ற பேரில் ராஜாவின் பாடலை என்ன காட்சிக்கு தூக்கி போட்டாலும் அது கொண்டாடப்படுகிறது! ராஜா ஒரு படத்துக்கு போட்ட பாட்டெல்லாம் இன்னொரு படத்திற்கு உபயோகித்த கதைகள் உண்டு. ராஜாவுக்கு காட்சிகளே தேவையில்லை. காட்சிகளுக்குதான் ராஜா தேவை.