வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மாநாடு’. 

கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். மற்றும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர் 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். 

வரும் நவ-25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, 

“இந்தப்படம் பண்ணலாம் என சிம்புவிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவ்வளவு பெரிய படத்தை நம்மால் பண்ண முடியுமா என ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிம்பு, என்னிடம் ஒப்படைத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறேன் என்கிற திருப்தி கிடைத்தது. உக்கம்சந்த், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆதரவுடன் எந்தவித தடங்கலும் இல்லாமல் படத்தை முடித்து விட்டோம். 

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் இந்திப் படம் போல காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை படம் ஒரு கம்பேக் படமாக இருந்ததோ, அதேபோல யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த மாநாடு படம் இருக்கும். எஸ்ஜே.சூர்யா கூட, இது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட். ஹிந்தி ரீமேக் நல்லா போகும் என்றார். தெலுங்கிலும் கூட அவரே டப்பிங் பேசியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,

“சிம்புவைப் பற்றி எல்லோரும் பலவிதமாகச் சொல்வார்கள். ஆனால் அவரை பற்றி சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது எல்லாமே பொய். அவரிடம் சில சேஷ்டைகள் உண்டு. ஆனால் அவை எல்லாமே எனக்குப் பிடிக்கும். இந்த வயதில் அப்படி சேஷ்டைகளுடன் இருந்தால் தான் அவர் சிம்பு. நான் படமெடுத்த காலத்தையும் இப்போது வெங்கட் பிரபு படமெடுக்கும் விதத்தையும் பார்த்து பிரமித்துப் போய் நிற்கிறேன். அதேசமயம், வெங்கட்பிரபு நீதான் பெரியவனா..? உனக்கு போட்டியாக நானும் மீண்டும் படமெடுப்பேன்,” என ஜாலியாக சவால் விடுத்தார்.

நடிகர் ஒய்.’ஜி.மகேந்திரன் பேசும்போது, 

“இன்று திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இரண்டே இரண்டு பேர் தான் சினிமாவுக்காகவே பிறந்தவர்கள். ஒருவர் கமல், இன்னொருவர் சிம்பு. அந்த அளவு சினிமா பற்றியே நினைக்கக் கூடிய ஒருவர் தான் சிம்பு. இந்தப் படத்துல சிம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுறாரான்னு என்கிட்டே கேட்டாங்க. ஆமா பிரச்சனை பண்றார், சொன்ன டைமுக்கு சரியா வந்து கோ-ஆபரேட் பண்றாரு, அதான் பிரச்சனைன்னு சொன்னேன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சுமைதாங்கி அப்படின்னா, வெங்கட் பிரபு இயக்குனர்களில் எம்.எஸ்.தோனின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா பிரச்சனைகளையும் கூலாகக் கையாளுவார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரெக்கார்டு பிரேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது. எனக்கு இன்றைக்கே ரிலீஸ் தேதியாக இருக்க கூடாதா என ஏக்கமாக இருக்கிறது.

நடிகர் எஸ்.ஜே/சூர்யா பேசும்போது, 

“நான் அன்பே ஆருயிரே படத்தில் நடிச்சப்ப சில நேரம் சிம்புவை டைரக்ட் பண்ண சொல்லி நடிச்சிட்டு இருப்பேன். அந்த அளவு நாங்க திக் பிரண்ட்ஸ். எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும் ஒரு கனெக்சன் என்னன்னா அவர் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன். அவர் பிரச்சனைகள்ல சிக்கி கஷ்டப்பட்டா நானும் கஷ்டப்படுவேன். இப்ப அவர் நல்லா இருக்கார், நானும் நல்லா இருக்கேன். 

சில சில காரணங்களால இடையில கொஞ்சம் கேப் விட்டுட்டார். ராமனே பதினாலு வருஷம் காட்டுக்கு போய் வந்தாரு. சிம்புவுக்கும் அந்த மாதிரி தான் இது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்துக்கு எந்த கஷ்டமும் வந்துடக் கூடாதுன்னு எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டார். 

ஒரே நேரத்துல பத்து படம் பண்ணுனா எவ்வளவு கவனம் இருக்குமோ, அதை இந்த ஒரே படத்துல வெங்கட் பிரபு செஞ்சிருக்கார். அந்த அளவுக்கு பவர்புல்லான ஸ்கிரிப்ட் இது. இனி, அடுத்து அவர் படம் பண்ணுனா அது பான் இந்தியா படமா தான் டைரக்ட் பண்ணனும். 

இந்தப்படம் டப்பிங் பண்ணும்போது ஏகப்பட்ட மாடுலேஷன்ல பேசியே எனக்கு கழுத்து வலி, முதுகு வலி எல்லாம் வந்துச்சு. போதாக்குறைக்கு நானே தெலுங்குல டப்பிங் பேசுறேன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன். டப்பிங் முடிச்சுட்டு படத்தைப் பார்த்தப்ப தான் தோணுச்சு. தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர்ற அன்னைக்கு தான்டா தீபாவளி அப்படின்னு ட்வீட் போட்டேன்.

யுவனோட பின்னணி இசை பத்தி சொல்லனும்னா என்னோட பொம்மை படத்திற்கு அவர் மியூசிக் போட்டிருந்ததைப் பார்த்துட்டு கிங் ஆப் பேக்ரவுண்ட் ஸ்கோர்ன்னு அவருக்கு மெசேஜ் போட்டேன்.. வாசுகி பாஸ்கர் கூட ஒரு தடவ சொல்லும்போது, மங்காத்தா படத்துல யுவன் அற்புதமான தீம் மியூசிக் போட்டிருந்தாலும், அதையே பல இடங்கள்ல காபி பேஸ்ட் பண்ணிட்டார். ஆனா இந்த மாநாடு படத்துல ஒவ்வொரு இடத்துக்கும் தனித்தனி ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கார் அப்படின்னு சொன்னாங்க. அப்படி ஒரு கலைஞனா அவரை விதவிதமா பண்ற அளவுக்கு இந்தப்படம் ஈர்த்திருக்கு. 

யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,

“வெங்கட் பிரபு இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே இதற்கு எப்படி இசையமைக்கப் போகிறோம் என்கிற ஆர்வத்துடன் கொஞ்சம் புதிராகவும் இருந்தது. காரணம் டைம் லூப்பில் திரும்பத் திரும்ப பல காட்சிகள் ரிப்பீட் ஆகும். ஆனால் முழுப்படத்தையும் பார்த்தபோது ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்தது. இதில் நீங்க வழக்கமாக பார்க்கும் சிம்புவை பார்க்க முடியாது.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, 

“நான் சென்னை 28 படம் பண்ணின சமயத்துல மதுரை ரிலீஸ்ல சிக்கல் ஏற்பட்டபோது சிம்புதான் அதை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பல முறை பேசியும் மாநாடு படத்துல தான் அது நடந்துருக்கு. இந்தப்படத்தோட ஒன்லைன் மட்டும் தான் சிம்புகிட்ட சொன்னேன். ஆனால் அதுல வர்ற ஹீரோவோட அப்துல் காலிக் அப்படிங்கிற பேரு அவருக்கு ரொம்பவே புடிச்சு போச்சு. என் படத்துக்கு யுவன் ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவார்னு சொன்னாங்க. ஆனா சிம்பு படத்துக்கு தான் யுவன் ரொம்ப ஸ்பெஷலா மியூசிக் பண்ணுவாரு.

நாயகன் சிம்பு பேசும்போது, 

“என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு. வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம். என்கிட்ட அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு. ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம். 

இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்குப் புரியும். ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம். யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை தான் இருக்கு.

இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் பிச்சு உதறி இருக்காரு. நான் விரல்ல வித்தை பண்ணுவேன்னு சொல்வாங்க. ஆனால் என்னோட நடிச்ச ஒய்ஜி மகேந்திரன் சார் விரல்லயே நடிச்சிருக்கார். இந்தப் படம் முடியுற வரைக்கும் பிரேம்ஜிகிட்ட அப்பப்ப, பிரேம் ஓவரா நடிக்காதன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். இந்தப்படத்துல சண்டைக்காட்சிகள்ல நடிக்கிற அடிபட்டுச்சு,

என்றவர் திடீரென கண் கலங்கி, , ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன். என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம்  கேட்டுக் கொண்டார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.