தனது 67 வது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மதிப்புக்குரிய உத்தம வில்லன் கமல் குறித்து பல்லாயிரக்கணக்கான வாழ்த்துப் பதிவுகளை மக்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் தீவிரம் குறைத்து, பிக்பாஸில் சம்பாதிக்க ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சம் கால் நனைத்து என்று சகலபலா பல்டிகள் அடித்து வந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து சந்திக்கிறவர்களிடமெல்லாம் ஜாதகம் பார்க்கிறாராம் கமல்.
நேரில் பேசுகிறவர்கள் ‘அடுத்த வாட்டி நீங்கதான் முதல்வர்’ என்று முகஸ்துதிக்காக கூறி வந்தாலும் இப்போதைய உண்மை நிலை ஊராட்சி தேர்தல்களில் கூட டெபாஸிட் வாங்க முடியாத நிலைதான் என்கிற உண்மையை உணராதவரா அவர்?
இந்நிலையில் அவரது நெருங்கிய ஐந்தெழுத்து அய்யங்காராத்து நண்பர் ஒருவர் திருவண்ணாமலை சாமியார் ஒருவர் குறித்து உரைத்து, ‘உன் ஜாதகத்தோடு உடனே அவரைப்போய் பார்’என்று காதைக் கடித்தாராம்.
ஜாதகத்தில் நம்பிக்கை இல்லையென்றாலும் நாற்காலி ஆசைக்காக கொஞ்சம் இறங்கித்தானே போகவேண்டும் என்பதால் சில தினங்களுக்கு முன்பு அந்த சாமியாரைச் சந்தித்திருக்கிறார் கமல்.கமலின் ஜாதகத்தை பார்த்த அவர், ‘முதல்வர் பதவி ராசி நிச்சயம் உனக்கு இருக்கிறது. அதற்கு நீ இன்னும் 16 வருடங்கள் காத்திருக்கவேண்டும்’என்று நாக்கில் தேனைத்தடவி அனுப்பி வைத்தாராம்.
அதாவது அந்த சமயத்தில் பிக்பாஸ் சீஸன் 21 அல்லது 22 நடந்துகொண்டிருக்கும்.