பாரதி மணி இன்று மதியம் மறைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் அறிந்தேன். என் இனிய மூத்த நண்பரை இழந்த வருத்தம் கடுமையாக ஆட்கொள்கிறது.
அரங்கவியலாளர், திரைப்பட நடிகர் என்ற பரிமாணங்களில் சிறந்திருந்த அவரை ஒரு சிறந்த எழுத்தாளராக இனம் காட்டியதில் உயிர்மைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. பலவருடங்கள் முன்பு அவரை திருச்சியில் ஒரு இரவு விருந்தில் சந்தித்தேன். பலரும் குடித்துக்கொண்டிருந்த அந்த விருந்தில் ஒரு தாத்தா பைப் புகைத்தபடி விஸ்கி கிளாஸில் பச்சைத்தண்ணீரை பருகியபடி கையில் தடியை ஊன்றிக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரிடமிருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. ” நீங்க குடிக்கலையா?” என்றுகேட்டேன். ” இங்க யாருக்கும் குடிக்கத் தெரியல…அதுதான் சேர்ந்து குடிக்க கூச்சமா இருக்கு” என்றார்.
அதைத்தொடர்ந்து குடியின் பண்பாடு குறித்துப்பேச ஆரம்பித்தார். அந்தப்பேச்சு என்னை வெகுவாக வசீகரித்தது. டெல்லி வாழ்க்கை, அதிகாரவர்க்க ரகசியங்கள், எவருக்கும் தெரியாத உயர்மட்ட அந்தரங்க ரகசியங்கள் சினிமா, அரசியல், நாடகம் என அந்த உரையாடல் விரிந்தது. கா.நா.சுவின் மருமகனாக கா.நா.சு பற்றியும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். நான் அப்போதே ” உயிர்மையில் ஒரு பத்தி எழுதுங்களேன்” என்று கேட்டேன்.”” நான் தமிழில் எழுதியதில்லையே ” என்று தயங்கினார். வற்புறுத்தி எழுத வைத்தேன். பாரதிமணி அற்புதமாக எழுதினார். அந்தப்பத்தி பெரும் புகழ்பெற்றது. உயிர்மையில் நூலாகவும் வெளிவந்தது. பாரதிமணி கடைசியாக உயிர்மையில் எழுதியது கலைஞர் அஞ்சலி மலரில் எழுதிய கட்டுரை. பாரதி மணி மிகக்குறைவாகவே எழுதினார். அவர் உரையாடலில் சொன்ன பல ரகசியங்கள் பல பிம்பங்களை சிதறடிக்ககூடியவை. அந்த ரகசியங்களும் அவரது பரந்துபட்ட அனுபவங்களும் பெரும் பகுதி சொல்லபடாமலே அவருடன் மறைந்துபோயின. எப்போதும் குதூகலமும் அங்கத உணர்ச்சியும் நிரம்பிய அவரைபோன்றவர்கள் ஒரு தலைமுறையின் கடைசி சாட்சியங்கள்.
பாரதிமணி நான்கண்ட மிகவும் ஸ்டைலிஷான மனிதர்களில் ஒருவர். வாழ்வை கலாபூர்வமாக மிகவும் ரசித்து வாழ்ந்தவர்…மிஸ் யூ சார்…
முகநூலில் கவிஞர் மனுஷ்ய புத்திரன்
கேணி கூட்டத்திற்கு பேச வந்திருந்தார். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு இரண்டு மணி நேர அரட்டை. அதன் பின் கூட்டத்தில் ஒரு உற்சாகமான உரை. கலந்துரையாடல்,..கலந்துரையாடலின் போது ஞாநி ஒரு சிக்கலான கேள்வியை எழுப்பினார். பொதுவாக யாரையும் தர்மசங்கடப் படுத்தி விடக்கூடிய ஒரு கேள்வி அது. ஆனால் மிகவும் இயல்பாக, அதே உற்சாகத்துடனேயே அந்தக் கேள்வியையும் எதிர்கொண்டார்.. சிரிப்பும், மகிழ்ச்சியும் , உற்சாகமும் நிரம்பிய பொழுதாக அது இருந்தது….
அவருடன் அதன் பின்னர் சில மேடைகளிலும், புத்தகக் கண்காட்சியிலும் பேசி இருக்கிறேன். ஒரு முறை என்னை ‘ இங்க வா’ என்று அழைத்தார். அருகில் போய் ‘ என்னங்க சார்?’ என்று கேட்டதும், ‘என் மேல உனக்கு ஏதாச்சும் கோவமா” என்று கேட்க நான் பதறிப் போனேன். “எந்த விதத்திலும் அதற்கான வாய்ப்பு இல்லையே ஏன் அப்படி கேக்கறீங்க?’ என்றதும், “ இல்லை, நீ என் கிட்ட போதுமான அளவுக்குப் பேசறது இல்லைன்னு எனக்கு ஒரு எண்ணம்” என்று சொன்னார். “அதெல்லாம் இல்லை சார். நிறையப் பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை “என்றேன். தோளில் அடித்து உற்சாகமாக சிரித்தார்.
உற்சாகமாக இருப்பவர்கள் அவர்களிடமிருக்கும் மகிழ்ச்சியை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். பாட்டையா பாரதிமணி அதைத்தான் செய்து கொண்டேயிருந்தார். உற்சாகமும், சிரிப்பும், புன்னகையும் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை சல்லிப் பிரயோஜனம் இல்லாத ஒன்றுதான். உள்ளிருந்து உற்சாகத்துடன் சக மனிதர்களிடம் சிரித்துப் பேசி மகிழ்ச்சியைப் பரப்புபவர்கள்தான் நிஜமான கோடீஸ்வரர்கள்…..பாரதி மணியைப் போல்…
முகநூலில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி