கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஓ.டி.டி.யில் வெளியான தனது ‘எம்.ஜி.ஆர் மகன்’படம் படு மட்டமான விமர்சனங்களைப் பெற்றுவருவதால், பப்ளிசிட்டிக்காக இயக்குநர் மணிரத்னத்தை ‘பொய்யர்’என்று சொல்லி வம்பிழுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
தனது முதல் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை அடுத்து, ‘ரஜினி முருகன்’,’சீமராஜா’,’தற்போது ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்று மூன்று மசாலா சாணிகளை வரிசையாகப்போட்டிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
அதலும் தற்போது ரிலீஸாகியுள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’படு குப்பை என்று ரசிகர்களால் கிழித்து தொங்கவிடப்படுகிறது. அதிலும் ஒண்ணு வாங்குனா இன்னொன்னு ஃப்ரீ என்கிற ஸ்கீமில் கல்லா கட்டிவருகிற சசிக்குமார்-சமுத்திரக்கனி கூட்டணியை சமூக வலைதளங்களில் சந்திசிரிக்கவைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனது படத்துக்கு பப்ளிசிட்டி தேடுவதற்காக சில மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்துபோன பழைய பஞ்சாயத்து ஒன்றை தூசி தட்டி எடுத்திருக்கிறார் பொன்ராம்
அதாகப்பட்டது,…நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஆந்தாலஜி ‘நவரசா’. 9 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜியை 9 இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள். இந்த ஆந்தாலஜியை இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். 9 நவரசங்களைக் கொண்ட கதைகளை வைத்து 9 பேர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் காமெடி என்ற ரசத்தை வைத்து உருவாகும் கதையை பொன்ராம் இயக்கியிருந்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், திடீரென்று காமெடி என்ற ரசத்தின் கதையை ப்ரியதர்ஷன் இயக்கியிருந்தார். பொன்ராம் வைத்த காமெடி ரசத்தில் உப்பு,புளி,காரம் உட்பட எதுவுமே இல்லாமல் சப்பென்று இருந்ததால் மணி அம்முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
அம்முடிவு குறைத்து அச்சமயத்தில் எந்த ரசத்தையும் வெளிக்காட்டாத பொன்ராம் தற்போது,” ‘நவரசா’ ஆந்தாலஜியில் வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. உண்மையான காரணம் என்னவென்று தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும். படத்தின் ஆடியோவில் பிரச்சினை இருப்பதாக மணி சார் சொன்னார். ஆனால், அந்த விளக்கம் எனக்குத் திருப்திகரமாக இல்லை.எங்கள் படம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம்”. என்று புலம்பியிருக்கிறார்.
பொன்ராமின் புலம்பல் மணிரத்னத்தின் காதுக்குப்போனபோது தனது வழக்கமான ஸ்டைலில் ‘அப்டியா?’என்ற நீண்ட வசனத்தோடு முடித்துக்கொண்டாராம்.