அரதப்பழசான கதை என்று சொன்னால் அந்த அரதப்பழசே வெட்கப்படும் அளவுக்கு படு சொதப்பலான அண்ணன் தங்காச்சி செண்டிமெண்டல் கதைதான் இந்த அண்னாச்சீ..
தமிழகத்துக்கே முதல்வராக ஆசைப்பட்டு ஆஃப்டர் ஆல் சூரக்கோட்டை கிராமத்திற்கு எல்லாமுமாய் இருப்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் ‘அண்ணாத்த’ என்கிற காளையன். ஆனால், அவருக்கு எல்லாமே அவர் தங்கை தங்க மீனாட்சிதான். ஊரில் நடக்கும் பிரச்னைகளுக்கு ஒரு லோக்கல் வில்லன்; அதன் மூலம் ஒரு காதலி என கிராஃப் ஸ்லோவாக போக, தங்கைக்கு ஒரு கல்யாணம் என புதிய ரூபத்தில் பிரச்னை வருகிறது. தடால்புடாலென கல்யாண வேலைகள் நடக்க, அடுத்து என்ன நடக்கிறது, அடுத்து அடுத்து என்ன நடக்கிறது என நீள்கிறது கதை. சிம்பிளாக சொல்வதானால், சென்னை ரவுடிகளை வதம் செய்தால் திருப்பாச்சி; கல்கத்தா மாஃபியா கும்பலுக்குக் காப்பு கட்டினால் ‘அண்ணாத்த’.
‘அண்ணாத்த’வாக ரஜினி. மனிதரின் எனெர்ஜி லெவல் ஒவ்வொரு படத்துக்கும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்று எழுதாவிட்டால் அவரது ரசிகர்களுக்கு பி.பி. எகிறிவிடும் என்பதால் அடடே எழுபத்துச்சொச்ச வயசிலும் இவ்வளவு எனர்ஜியா என்று நாமும் எழுதித்தொலைப்போம். அடிதடி, காமெடி என ஜாலியாக நடித்துக்கொடுத்திருக்கிறார். ரொம்பவும் க்ளீஷேவான முதல் பாதியை கடத்த வைப்பதில் ரஜினியின் பங்கு, அதாவது இந்த வயசுலயும் என்ற கேள்வியோடு, மிக அதிகம். ‘அண்ணாத்த’வின் பாசமிகு தங்கையாக கீர்த்தி சுரேஷ். வயது, தோற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரஜினியின் தங்கை கீர்த்தி சுரேஷ் என நாம் நம்ப ஆரம்பிப்பதற்குள் பாதி படம் வந்துவிடுகிறது. பிற்பாதியில் அவருக்கு இன்னமும் சற்று கனமான வேடம். சூப்பர் ஸ்டாரின் காதலியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா. அப்படியே டைட்டில் கார்டிலும் போட்டிருப்பது சிறப்பு. நயன்தாரா வாங்கிய சம்பளத்துக்கு வஞ்சகமில்லாமல் வயசானவர் என்றாலும் ரஜினியை வெட்கத்தோடு காதலித்து வைக்கிறார்.
குஷ்பூ, மீனா போன்றவர்களை வைத்து நாஸ்டால்ஜியா ஃபீலைக் கொண்டு வர முயன்றிருக்கிறார்கள். ஆனால் நயனை லவ் பண்ணும் ரஜினி முன்ன ஒரு காலத்துல குஷ்புவை தியேட்டருக்கு அழைத்துப்போய் ஜல்சா பண்ணியதையும் , குஷ்புவை கரும்புக்காட்டுக்குள் கொண்டுபோய் கண்டம் பண்ணியதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை. முதல் பாதிக்கான கௌரவ வில்லனாக பிரகாஷ்ராஜ். பச்சைக்கிளி கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு லீ லீ என முடியும் காமெடி ஒன்லைனர்கள் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். இதுபோக சதீஷ், சத்யன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் எனப் பலரையும் வைத்து பேக் டு பேக் காமெடி கலவரங்கள் நடத்துகிறார்கள். படத்தில் வருகிற வில்லன்களை விட இவர்கள் இன்னும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள்.
படத்தின் பிரச்னை அரதப் பழைய கதையோ, க்ளீஷே காட்சிகளோ அல்ல. டிரெய்லரிலேயே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ஆறு வயது சிறுவன்கூட யூகிக்கக்கூடிய அதன் தன்மைதான். ஆனால், வசனங்களை அள்ளி இறைத்திருக்கிறார்கள். குடும்பம்ங்கறது, பொறந்த வீடுங்கறது, பாசம்ங்கறது, தங்கச்சிங்கறது என யார் பேச ஆரம்பித்தாலும், ‘சோடா வாங்கியாரவா’ எனக் கேட்கும் அளவுக்கு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதனாலேயே பெரிய திரையில் மெகா சீரியல் பார்க்கும் எபெக்ட்டை கொடுத்துவிடுகிறது ‘அண்ணாத்த’. அதிலும் ஏற்கெனவே தெரிந்த கதையில், முதல் பாதி மனிதர்கள் இன்டர்வெல்லுடன் குட்பை சொல்ல, இரண்டாம் பாதியில்தான் டோக்கன் போட்டுக்கொண்டு வில்லன்களே வருகிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் ரஜினிக்கு முன்பே அவர்களைப் போட்டுத்தள்ளிவிடலாமா என்கிற அளவுக்கு ஆத்திரம் பெருக்கெடுக்கிறது. அதிலும் ஒரு அரண்மனைக்குள் இருந்துகொண்டு பிச்சைக்காரக் கோலத்தில் இருக்கிறாரே ஜெகபதி பாபு….ங்கொய்யால வாட் அன் ஐடியா சிவா ஜி?
கதைதான் பாடாவதி என்றால் மேக்கிங்கும், இசையும் ஒளிப்பதிவும் ஒரு உப்புமா படத்துக்கு எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. மொத்தத்தில் அண்ணாத்த என்னாத்த?