மதம் மனிதனை பண்படுத்துவதாக இருந்தால், இந்நேரம்
இந்த உலகத்தில் கெட்டவர்களே இல்லாமல் போயிருப்பார்கள்.

நீதி போதனைகளுக்கு இங்கு எந்த பஞ்சமுமில்லை.
ஒழுக்கநெறிகள் மூவாயிரம் ஆண்டுகளாக
தொடர்ந்து போதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

இவை எதுவும் யுத்தங்களை நிறுத்தவில்லை.
கொடுங்கோன்மையை ஒழிக்கவில்லை.

வறுமையை,ஏற்ற தாழ்வுகளை,எந்த மதத்தாலும்
போக்க முடியவில்லை.

தனிமனிதனின் இரக்கத்தையும்,அன்பையும்
வலியுறுத்துவதை தாண்டி இம்மதங்களால்
ஒன்றும் செய்ய முடியவில்லை.

தனிமனித கடைத்தேற்றத்தை தவிர இம்மதங்களால்
வேறுதீர்வுகளை தரமுடியவில்லை.
அந்த கடைத்தேற்றம் இறப்புக்கு பிந்தைய சொர்க்கமாகவோ அல்லது பிறவாமையையோ
தீர்வாக சொல்லிற்று.

மனிதனது துன்பத்துக்கு காரணம் என்ன என்பதை
ஆசை,பாவம்,கெட்ட எண்ணம்,பேய்,பிசாசு,விதி
கடவுள் நம்பிக்கையின்மை போன்றவைகளை
காரணமாக சொல்லியது.

மனித துன்பத்துக்கான உண்மையான காரணத்தை
கண்டு அதற்கு தீர்வு கண்டுபிடிப்பதில் மதங்கள்
முழு தோல்வியை சந்தித்தன.

மனித உணர்வுகளில் மேன்மையான குணங்களை நன்மைகளுக்கும்
கெட்ட குணங்களை தீமைகளுக்கும் காரணமாக
சொல்ல முடிந்த மதங்களால் இந்த நல்ல, கெட்ட குணங்கள் எப்படி தோன்றுகின்றன என்று
சொல்வதற்கு கடவுளையோ பிசாசையோ
ஆசையையோ காரணமாக்கின.

ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் இருக்கும் கெட்ட குணங்களை ஒழித்து நல்ல குணங்களை
வளர்த்துக்கொள்ள தன்னைத்தானே எதிர்த்து
வாழ்நாள் முழுமையும் மல்லுக்கட்டுவதை தீர்வாக முன்வைத்தன.

தனக்குத்தானே தீர்த்துக்கொள்ள வேண்டியதை தவிர உலகத்தில் சமூகத்தில் எந்த குறையையும்
மதங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடிமைத்தனத்தையும், நிலவுடமை கொடுங்கோன்மையையும், முதலாளித்துவ சுரண்டலயும்
இயற்கையானதாகவும் மாற்ற முடியாத விதியாகவும் போதித்தன.

சமூக தீங்குகளை ஒழிப்பது அல்லது சமூக தீமைகளை எதிர்ப்பது ,அரசை எதிர்ப்பது
பஞ்சமாபாதகமாக போதித்தது.

மனிதகுலத்தின் விடுதலை கருத்தியலானதாக
மட்டுமே இருந்திருந்தால் மதங்களால் வெற்றிபெற்றிருக்க முடியும்.
ஆனால் மனிதகுலம் வெறும் கருத்தியலான உயிரினம் மட்டுமல்ல.

மனிதகுலம் பசிக்கு உண்ணவும்,மானத்தை மறைக்க உடுக்கவும்,தனக்கென்று ஒரு இருப்பிடமும் உயிர்வாழ அடிப்படைத்தேவை.
இந்த அன்றாட தேவைகளை நிறைவேற்ற மனிதர்கள் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கவேண்டியதிருக்கிறது.

இந்த உழைப்பை அவர்களால் சுதந்திரமாக வேட்டையாடுவதை போல செய்ய முடியாது.
அவர்கள் பிறக்கும்போதே குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வர்க்கத்தில் ஒரு திட்டவட்டமான வாழ்நிலையில் பிறக்கிறார்கள்.
அந்த திட்டவட்டமான வாழ்நிலையே அவர்களது உணர்வை தீர்மானிக்கிறது.

இந்த திட்டவட்டமான வாழ்நிலைமையே அவர்கள் என்ன உற்பத்தி செய்ய வேண்டும்.
எப்படி உற்பத்தி செய்ய வேண்டும். என்பதையும்,
அந்த உற்பத்தி பொருளை எப்படி தங்களுக்குள்
பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கிறது.

இந்த சமூக வாழ்நிலைமை பற்றி மதங்களுக்கு எந்த காலத்திலும் எவ்வித கருத்துக்களோ
சிந்தனையோ இருந்ததில்லை.

மதங்களை பொறுத்தவரை இவையெல்லாம் மக்கள் அன்றாடம் செய்கிற சாதாரண வேலைகள்
இந்த வேலைகளைப்பற்றி சிந்திப்பதை அவை கீழான சிந்தனையாக கருதின.

எனவே மதங்களுக்கு கருத்தியலான சிந்தனையை தவிர உழைக்கிற , வாழ்கிற உலகைப்பற்றி தெரியாது.
மதங்களுக்கு மனிதகுல ஆன்மீக சிந்தனை உலகைத்தவிர வேறு உலகங்களை அதற்கு தெரியாது.

மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்கு சமூகத்தில் என்ன அன்றாடம் செய்துகொண்டு பழகி வருகிறார்களோ
அந்த உழைப்பு முறையினாலேயே துன்பங்களை அநுபவிக்கிறார்கள் என்பதையும்
அந்த உழைப்பு முறையை மாற்றாமல் அவர்களால் துன்பங்களில் இருந்து விடுதலை பெறமுடியாது என்பதை
மதங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவேதான் பல ஆயிரம் ஆண்டுகளாக மதங்களால்
மனிதர்களின் உண்மையான துன்பங்களில் இருந்து
உண்மையான விடுதலையை பெறமுடியவில்லை.

மதங்களின் இந்த தோல்வியிலிருந்துதான் மனித விடுதலையை இந்த உலகிலேயே அடைய முடியும்
என்பதை கண்டுபிடிக்க
இம்மதங்களோடு முவ்வாயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டுவந்த பொருள்முதல்வாதமும்
இந்த தனிமனிதனை மட்டும் நெறிப்படுத்தும் சிந்தனை உலகைவிட்டு வெளியேற வேண்டியதிருந்தது.

காரல்மார்க்சால் இந்த ஆன்மீக, சுயத்தை மட்டுமே பற்றிய சிந்தனையின் சிறையை உடைத்து
நடைமுறை உலகம் பற்றிய தத்துவமாக பொருள்முதல்வாதத்தை வெற்றிகரமாக கையாளமுடிந்தது.

அது மனிதர்களின் கூட்டு உழைப்பால் உருவாக்கப்படும் பொருட்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும்,
பெரிய அளவில் சிலருக்கும் , சிறிய அளவுகளில் பலருக்கும் கிடைக்கவைக்கும்,
சமத்துவமற்ற சமூகப் பங்கீட்டு முறையே
இத்தகைய சமூகத் துன்பங்களின் மூல காரணம் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டியது.

மனிதகுலத்தின் விடுதலை என்பது மானசீகமானது மட்டுமல்ல
வரலாற்று வழிப்பட்ட பொருள்வயமானதுமாகும்.

— முகநூலில் Umayan Natarajan …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.