என் வாழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட வருடங்கள், சென்னையில் தமிழனாக வசித்தேன். அதனால் என் படம் என்றாவது ஒரு நாள் தமிழில் வெற்றிபெற்றால் பெருமகிழ்ச்சி அடைவேன்’ என்று கூறுகிறார் ‘புஷ்பா’பட நாயகன் அல்லு அர்ஜூன்.
தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகராக வலம்வருபவர் அல்லு அர்ஜூன். இவரின் ஒவ்வொரு படமுமே தெலுங்கில் சொல்லி அடிப்பதுபோல் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாகும்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது ’புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படம். அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களோடு, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு மட்டுமின்றி, நேரடியாக தமிழிலும் வெளியாகிறது. தமிழில், படத்துக்கான வசனங்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். ஸ்ரீதேவி பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்துக்கான சில முக்கிய காட்சிகள் தமிழகத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படமானது தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, பிறமொழி நடிகர்களுக்கு தமிழகத்தில் இப்படியான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காது. அதனால், அல்லு அர்ஜூன் படத்துக்கு அதிக திரைகள் கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுகிறது. அதோடு, படத்திலிருந்து வெளியான ‘சாமி’ பாடலானது தெலுங்கை விடவும் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கைப் போலவே, தமிழிலும் மாஸ் ஹீரோவாகிவிட வேண்டுமென்று நீண்ட நாட்களாக விரும்பிவருகிறார் அல்லுஅர்ஜூன். அதனால், அவரின் படங்கள் தெலுங்கில் வெளியாவதோடு தமிழிலும் டப்பாகி வெளியாகும். Duvvada Jagannadham, Naa Peru Surya, Naa Illu India ஆகிய படங்கள் தமிழில் பெரிதாக ஹிட்டாகவில்லை. ஆனால், 2020ல் வெளியான ‘அல வைகுண்டப்புரமுலோ’ படம் செம ஹிட். ஆனால், நெட்ஃப்ளிக்ஸில் தான் தமிழ் டப்பிங் வெளியானது. தற்பொழுது, நேரடியாக திரையரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் வெளியாகிறது. நீண்ட நாளாக தமிழில் மிகப்பெரிய ஓபனிங்கை எதிர்பார்த்துக் காத்திருந்த அல்லுஅர்ஜூனின் ஆசை இதன் மூலமாக நிறைவேறியுள்ளது.
இப்படம் செம்மரக் கடத்தலை கதைகளமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.