பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று (டிசம்பர் 26) இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.
இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாடகர் மாணிக்க விநாயகத்திற்கு (73) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக அவர் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். அதேபோல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமது இரங்கல் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாணிக்க விநாயகம் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையாவின் இளைய மகன்.
தனுஷ் நாயாகனாக நடித்த திருடா திருடி, விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்கள் இவர் நடித்த படங்களில் சில.
2013இல் இலங்கை வவுனியாவில் கட்டப்பட்ட ஒரு கோயில் விழாவில் பாடுவதற்காக மாணிக்க விநாயகம் உள்ளிட்டவர்கள் இலங்கை பயணிக்க இருந்தனர்.
இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்து சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் இசைக் கலைஞர்கள் இலங்கை செல்ல வேண்டாம் என்று தமிழ்நாட்டில் சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதன் பின்னர், தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தாம் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அப்போது மாணிக்க விநாயகம் அறிவித்தார்.
அப்போது இவருடன் இலங்கை செல்லவிருந்த பிற இசைக் கலைஞர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான மாணிக்க விநாயகம் சினிமா மட்டுமல்லாது பக்தி பாடல்கள் பாடியுள்ளதோடு பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார். மாணிக்க விநாயகத்தின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.