தனது தெனாவெட்டான பேச்சு மொழியில், ரிலீஸாகும் 99.9 சதவிகித படங்களைக் கிழித்துத் தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இனி படங்கள் இயக்கமுடியாது என்று தெரிகிறது. இவர் தொடர்பாக இயக்குநர் சங்கம் மிகக் கறாரான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
தமிழ் டாக்கீஸ் மாறன் என்கிற ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் சமீபத்தில் ’ஆன்டி இண்டியன்’என்றொரு படம் ரிலீஸாகி, வசூலில் படுதோல்வி கண்டு தயாரிப்பாளரை போண்டி ஆக்கியது. படம் ரிலீஸான முதல் நாளிலிருந்தே தியேட்டர்களில் 7 பேர் 8 பேர் என சிங்கிள் டிஜிட்டலில் ஜனங்கள் வந்ததால் மூன்றாவது நாளே அன்று அப்படம் கடைசி என அறிவிக்கப்பட்டது. அப்படத்தின் தோல்விக்காக மும்மத பிரார்த்தனைகள் நடத்திய சினிமாத் துறையினர் பலர் வெடிவெடித்து நண்பர்களுக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து கொண்டாடினார்கள்.
இந்நிலையில் அடுத்த பேரிடியாக, நேற்று திங்களன்று கமலா திரையரங்கில் நடந்த இயக்குநர் சங்க பொதுக்குழுவில், பல தீர்மானங்களுக்கு ப்ளூ சட்டை மாறனுக்காக ஸ்பெஷல் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒன்று அவர் தமிழ் டாக்கீஸ் சானலுக்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி மூடவேண்டும். அல்லது உடனடியாக இயக்குநர் சங்க உறுப்பினர் பதவியை விட்டு வெளியேற வேண்டும்.
அத்தீர்மானம் வாசிக்கப்பட்டபோது அரங்கத்தில் இருந்த ஆயிரத்து இருநூத்துச் சொச்ச பேரில், ஒரே ஒருவரைத் தவிர அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அந்த ஒருவர் யாரென்று யூகிப்பது சுலபம்.
சங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா என்றால் ப்ளூ சட்டை மாறன் சோத்துக்குத்தானே முன்னுரிமை கொடுப்பார். ஆக சங்கத்தை விட்டு அவர் சங்கைப்பிடித்து வெளியேற்றும் நாள் வந்துவிட்டது.