வருடத்தின் இறுதியில் கடைசி ரயிலைப் பிடிக்க பறக்கும் மனிதர்கள் போல வாரத்துக்கு ஏழெட்டுப் படங்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு ரிலீஸாகின்றன. அந்தக் கூட்டத்தில் சில நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகின்றன என்பது அவ்வப்போது நிகழக்கூடிய சோகம். அவ்வகையான ஒரு படம் தான் இந்த ‘இறுதிப்பக்கம்’.
தனிமையில் வசிக்கும் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ பிரச்சனை இருப்பது முதல் காட்சியில் சொல்லப்பட, அதன் தொடர்ச்சியாக வரும் காட்சியில் அவர் கொல்லப்படுகிறார். அந்த கொலையை துப்பறிய இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு இந்த பணியில் உதவியாக பெண் போலீஸ் அதிகாரியான கிரிஜா ஹரி நியமிக்கப்பட எப்படி அந்த கொலையை துப்பறிந்தார்கள் என்பதுதான் கதை.
பார்த்தவுடன் வசீகரிக்க கூடிய அழகில் அம்ருதா ஸ்ரீனிவாசன் இருக்க அவரைப் பற்றி துப்பறியும் போது பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகின்றன ராஜேஷ் பாலச்சந்திரனுக்கு. முதலில் அம்ருதாவின் உடலை பிணமாக பார்த்த அவரது நண்பர் ஸ்ரீ ராஜ் சொல்லும் தகவலில் இருந்து திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன. அம்ருதாவும் ஸ்ரீ ராஜும் லிவ் இன் அடிப்படையில் இரவில் மட்டுமே ஒன்றாக இருந்ததாகத் தெரியவர, அடுத்த கட்ட விசாரணையில் அம்ருதாவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவருகிறது.
அந்தக் காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் சொல்லும் அமிர்தாவை பற்றிய உண்மைகள் இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றன. அது பல ஆண்களுடன் மட்டுமல்லாமல் ஒரு பெண்ணுடனும் அம்ருதாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றியவை. சந்தேகம் ஒவ்வொருவர் மீதாக திரும்பிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியான கிரிஜா ஹரியின் மீது சந்தேகம் விழுவது எதிர்பாராத திருப்பம்.
எழுத்தாளராக இருக்கும் அம்ருதா அசப்பில் ஹிந்தி நடிகை வித்யா பாலனை போல் இருக்கிறார். அழகில் கவர்வதைப் போலவே அலட்டிக்கொள்ளாமல் நடித்தும் இருக்கிறார். அறிமுகப் படத்திலேயே இவ்வளவு அதிர்ச்சியான ஒரு பாத்திரத்தில் நடித்த அவரது தைரியத்தைப் பாராட்டி ஆக வேண்டும். அவருடன் லிவ் இன் பார்ட்னராக வந்த ஸ்ரீ ராஜும், காதலனாக வரும் விக்னேஷ் சண்முகமும் அம்ருதாவின் அழகுக்கு ஈடு செய்யவில்லை என்றாலும் அவரவர்கள் பாத்திரத்துக்கேற்ற தோற்றத்தில் இருக்கிறார்கள்.
தன் வாழ்க்கையை தன் விருப்பம்போல் வாழும் அம்ருதா சொல்லும் காரணங்கள் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஷாக் அடிக்கும். ஆனாலும் பெண்ணியம் சார்ந்து சிந்திக்கும் போதும் அவர் ஒரு எழுத்தாளர் என்ற பார்வையில் பார்க்கும்போதும் அவரது செய்கைகள் நியாயப்படுத்தப்படலாம்.
கடைசியில் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்கப்படும்போதும் அதைத் தொடர்ந்து நிகழும் ஒரு சிறு சம்பவமும் நிச்சயம் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தும். கதைநாயகன் ராஜேஷ் பாலச்சந்திரன் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக வெளிப்பட்டிருக்கிறார். நாயகி அம்ருதாவும் அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார்.
படத்தின் பட்ஜெட் பல இடங்களில் வீக்காக வெளிப்படுகிறது. டெக்னிக்கல ரிச்னஸ் இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு சிறப்பு. ஒரு திரில்லருக்குரிய பின்னணி இசையை தந்திருக்கும் ஜோன்ஸ் ரூபர்ட்டின் எளிய இசையும் கூட ஓ.கே.ரகம்தான்.
முற்றிலும் வித்தியாசமான, துணிச்சலான கதையைக் கையில் எடுத்திருக்கும் இயக்குனர் மனோ வெ. கண்ணதாசன் வரவேற்கப்படவேண்டிய இளைஞர். இறுதிப்பக்கம் மனதுக்கு நெருக்கம்.