பிரபல கானா இசைப்பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
 
பிரபல கானா பாடகியாக  இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமாகிவிட்டார். ஆண்கள் மட்டுமே கானா பாடலில் கோலோச்சிக் கொண்டிந்த நிலையில், பெண்களாலும் கானா பாடல் பாட முடியும் என்பதை நிரூபித்த இசைவாணி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் வானம் விடிஞ்சிடுச்சி என்ற பாடலில் இவர் பாடிய கானா பகுதி பலரையும் ஈர்த்தது.
 
இதைத் தொடர்ந்து விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சில வாரங்கள் கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.
 
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசைவாணி திருமணம் ஆன சில ஆண்டுகளில்  கணவரை விட்டு பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி. விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
 
இதனால் தனக்கும் தன் கலை பயணத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்ற நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை மணந்துக் கொண்டு, தன்னை மனைவி எனக் குறிப்பிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறேன் எனக் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணத்தைக் கொடுத்தவர்கள் தற்போது தன்னிடம் வந்து கேட்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் இசைவாணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.