ரசிகர்கள் மீது கொஞ்சமும் அன்பில்லாத, கதை,திரைக்கதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் தான் இந்த அன்பறிவு.
அன்பு அறிவு ஆகிய இருவரும் இரட்டையர்கள். அன்பு மதுரையில் அம்மா மற்றும் தாத்தா அரவணைப்பில் மாவீரராக வலம் வருகிறார். அறிவு கனடாவில் அப்பா மற்றும் அத்தையின் அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறார். இரட்டையர்கள் பிரிந்தது ஏன்? இறுதியில் என்ன நடந்தது? என்பதைச் சொல்லும் அரதப்பழசான படம்தான் இது.
ஒற்றை வேடத்தில் வரும்போதே தலைவலி உண்டாகும் அளவுக்கு ஒரு கிறுக்குத்தனமான சிரிப்பை உதிர்ப்பது மட்டுமே நடிப்பு என்று நம்பும் ஹிப்ஹாப் இரட்டை வேடத்தில் நடித்தால் என்னாவது? வேறென்ன ரெட்டைத்தலைவலிதான். அன்பாகவும் அறிவாகவும் வரும் ஆதி, இரண்டு பாத்திரங்களுக்கும் வசன உச்சரிப்பு உடல்மொழி ஆகியனவற்றில் எந்த வேறுபாடும் காட்டாமல் அதே கிறுக்குப்பயல் சிரிப்போடு ரசிகர்களை சாகடிக்கிறார்.
இரண்டு நாயகர்கள் இருந்தால் இரண்டு நாயகிகளும் இருக்கவேண்டுமே? காஷ்மீரா, ஷிவானி ஆகியோர் இருக்கிறார்கள். இருவருமே பட்டைச்சாராயத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல் பயன்’படுத்தப்’பட்டிருக்கிறார்கள்.
கதையின் மையமாக இருக்கும் முக்கிய வேடம் நெப்போலியனுக்கு, அதற்கேற்ற கம்பீரத்துடன் நடித்து சின்ன ஆறுதல் அளிக்கிறார். சாய்குமார், ஆஷாசரத் ஆகிய 50க்கும் மேற்பட்ட முதியவர்களை மணக்கோலத்தில் காட்டும் காட்சிகளை வைத்த டைரக்டருக்கு மனத்துணிச்சல் ஜாஸ்திதான்,
விதார்த்துக்கு வில்லன் வேடம்.கபடச் சிரிப்பும் கள்ளப்பார்வையும் கொண்டு அவ்வேடத்துக்குப் பொருத்தம் காட்ட முனைந்திருக்கிறார். தீனா,ஆடுகளம் நரேன், அர்ஜெய், மாரிமுத்து,ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் கிராமங்களின் அழகு கூடியிருக்கிறது.
இரட்டை வேடம் ஏற்றிருக்கும் ஆதி இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்து வழக்கம்போல் இம்சித்திருக்கிறார். பாடல் வரிகளும் சகிக்க முடியாதவை.
வசனங்களை எழுதியிருக்கும் பொன்.பார்த்திபன் வரிகளைக் குறைத்திருக்கவேண்டும். படத்தொகுப்பு செய்திருக்கும் பிரதீப் ராகவ் அட்லீஸ்ட் இன்னும் ஒரு அரைமணி நேரப்படத்தை வெட்டி வீசியிருக்கவேண்டும்.
கொரோனாவின் மூன்றாவது அலை பரவத் துவங்கியிருக்கும் சூழலில் புது இயக்குநர் அஸ்வின்ராம் மூலம் பரப்பப்பட்டிருக்கும் புது வகை கொரோனாதான் இந்த அன்பறிவு.