“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள் மனதை ஒளிர்விக்கும். ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும், நமக்கு தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு”.
“இதுபோன்ற சக்தியைக் கொண்ட திரைப்படங்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. அவை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவையாக இருந்தாலும், அவற்றுக்கு பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. பாடலின் மெட்டு போன்ற ஒரு பொதுவான தன்மை”.
மேற்கூறிய வரிகள் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோவின்( Francois Truffaut) படங்களை குறித்து ழான் கோலே(Jean Collet)எழுதியது.
அவரால் அப்படி எழுத முடியும்.நான் ஒரு எழுத்தாளரோ, விமர்சகரோ கூட அல்ல. நல்ல சினிமாவை ரசித்து கற்றபடியே இருக்கும் வெறும் மாணவன் மட்டுமே..ஏனோ எனக்கு நல்ல படங்களை பார்க்க நேர்ந்தது என்றால் சொல் அடங்கிப் போய்விடுகிறது.என் அறிவைக் கொண்டு அவற்றை கூறுபோடுவது என் வழக்கமில்லை.ஆகையால் எங்கோ கிடக்கட்டும் என கிரகித்துக் கொள்ள மட்டுமே செய்வேன்.
நேற்று மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ பார்த்து முடித்ததும் Mani Mkmani அவர்கள் படம் குறித்தும் இயக்குனர் குறித்தும் சிலாகித்து பிரமாதமாக என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். எத்தனை அழகாக ஒரு படத்தின் அழகான முக்கிய தருணங்களை இவரால் நமக்கு சொல்ல முடிகிறது என அவற்றைக் கேட்ட படி மேலும் சொற்கள் அடங்கி நின்றிருந்தேன்..
கிளம்பும் போது மணிகண்டனை பார்த்த நேரத்தில் வண்டியை விட்டு இறங்கி நேராக சென்று கைக்குலுக்கி இறுக பற்றி தோள் தழுவிக் கொண்டேன்.. என்னால் செய்யக்கூடுவது அது ஒன்று தான் என உணர்ந்தேன்.அந்தச் சிறு கணத்தில் எம் நிலத்திற்காக, எம் மக்களுக்காக,பகிர்ந்து பல்லுயிர் ஓம்பும் எம் வாழ்கை முறைகளுக்காக ஒரு படம் தந்ததற்கு மனதில் நன்றி சொல்லிக் கொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன்.
ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு ஏதுமற்ற, வறண்ட பூமியில் வாழுகின்ற எண்பது வயது விவசாயியின் வாழ்வியலை சொல்லி செல்லும் அதே நேரத்தில் தற்போதைய இயற்கை சீரழிவு மற்றும் நீதித்துறை, காவல்துறை செயல்பாடுகளை வசனம் மூலம் மட்டுமல்லாமல் காட்சிப்படுத்தி சொல்லியிருக்கும் அந்த அற்புத முயற்சிக்கும் இயக்குனர் மணிகண்டனை வெகுவாக பாராட்டலாம். தயாரிப்பாளர் மணிகண்டனை நினைத்துதான், ஓரளவு விநியோகஸ்தர்களின் வியாபார முறை தெரிந்தவன் என்கிற முறையில் நான் அச்சம் கொள்கிறேன். ஆனால் அந்த அச்சத்தை தமிழ் நல்லுலகம், குறிப்பாக இளைஞர் படை உடைத்தெறியும். ஒரு மாபெரும் வெற்றி மகுடத்தை இந்தக் கடைசி விவசாயிக்கு வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் யாரும் இங்கு கடைசி விவசாயி அல்ல என்பதை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் நிரூபிக்கும் என்ற நம்பிக்கையுடன்…
எல்லா உயிர்களையும் நேசிப்பதைப் பற்றி பாடம் எடுக்கும்படி இல்லாமல் வாழ்க்கையை புரிய வைக்கிறது.
உயிர் என்றால் அது பயிரும் ஒன்னுதான்
பழகும் மனுசனும் ஒன்னுதான் தன் ரத்தமும் ஒன்னுதான் என்று சொல்லி கொடுக்கிறது…
அன்புசெய்.
வாழ்க்கையில் நமக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றை பிடித்து நாம் தொங்குவதும் அது நம்மை விட்டு விலகிய பின்னரும் அந்த பிடிப்பை விலக்காமல் அதைப் பிடித்து தொங்குவதும்தான்…
அப்பெரியவருக்கு நாயும் ஒன்னுதான் மயிலும் ஒன்னுதான் அவர் மகனும் ஒன்னுதான்…
அருகில் இருக்கும்போது அன்பை பொழிகிறார்… விலகி போனதும் அவரும் விலகி அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்…
நாயும் மயிலும் செத்து கெடந்தா குழி தோண்டி புதைச்சி மண்ணை அள்ளிப்போட்டுட்டு அடுத்த உயிரை உருவாக்கும் வேலைக்கு போகிறார் என்பது …
ஆயிரம் யானை கட்டி போர் அடிச்ச விவசாய மண்ணில் விவசாய நிலத்தை விற்று ஒரு யானையை வாங்கி வியாபாரம் பன்னும் நிலை ஏற்பட்டாலும்…
ஒரு கடைசி விவசாயியுடைய அனுபவத்தை பெற்று சிறைக்கைதி கூட விடுதலை ஆனதும் தன் ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் பன்னி பொழைத்துக் கொள்வேன் என்கிற இந்த பாசிட்டாவான விடயம் தான் மக்களுக்கு கடத்த வேண்டி உள்ளது…
அதை அனைத்து கதாபாத்திரங்களும் கடத்தி இருப்பதில் இயக்குனர் மணிகண்டன் வெற்றி பெற்றுள்ளார்…
வழக்கம்போல சேது நடிக்காமல் அந்த கேரக்டராக மனதில் நிற்கிறார்…
முந்தைய பதிவில் கூறியது போல் சொற்கள் தகராறு செய்கின்றன…
மிகச்சிறந்த கலைப்படைப்பு இவ்வேலையை திறம்படச் செய்யும்…
நேற்று, ‘கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்தேன். விவசாயமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் எப்படி மோதிக் கொள்கின்றன என்பதுதான் பல விவசாய கதைகளின் களமாக இருக்கிறது. சில சமயங்களில் அதை கார்ப்பரேட் நிறுவனங்களே படமாக்குகின்றன.
இந்தப் படத்தில் அந்த இரண்டு குறைகள் இல்லை. இதில் கார்ப்பரேட் நிறுவன பழி சுமத்தல்கள் இல்லை.
உண்மைக்கு நெருக்கமாக யார் மீதாவது பழியைப் போட்டு விடும் அவசரமில்லாமல் உண்மையான ஊரில் உண்மையான மனிதர்களை வைத்து படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். போலீஸ்காரர், நீதிபதி, அக்கம்பக்கத்து ஆசாமிகள் யாரும் மனதறிந்து குற்றம் இழைக்கவில்லை. ஒருவரை படுபாதக செயல் செய்பவராகவும் இன்னொருவரை உத்தமராகவும் காட்டு வேண்டிய துருவ வித்தியாசங்கள் இல்லை.
விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் மட்டும் இந்தப்படத்தில் இல்லையென்றால் நாம் ஒரு கிராமத்தில் வசித்து விட்டு வந்த உணர்வை நிச்சயம் பெற முடியும். மற்ற அத்தனை பேரும் அச்சு அசலான கிராமத்து மனிதர்கள். அதிலும் கதாநாயகனாக நடித்திருக்கும் 80 வயது பெரியவர் மாயாண்டி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உருக வைக்கும் உண்மைகள். (டைட்டில் கார்டு போடும்போது அவர் பெயரை தெய்வத்திரு என்று போட்டிருக்கிறார்கள். படத்தில் அவர் இறந்து விடுவதாக ஓரிடத்தில் ஒரு நிமிடம் காட்டுவார்கள். அதற்கு அழுதுவிட்டேன். டைட்டில் கார்டு பார்த்தபோது மீண்டும். )
யாருமே நடிக்கவில்லை. அவரவர் செய்யும் அன்றாட வேலைகளை செய்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் கேமரா அதைப் படம் பிடித்திருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.