27-02-2008, புதன்கிழமை, அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, “எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார்.

அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட்டைப் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன்.

வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோரியல் அலுவலகம் அப்போது அப்போலோ மருத்துவமனை இருந்த அதே தெருவில் இருந்தது. 

பொடிநடை தூரத்தில் அப்போலோ.

ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத்தில் முதல் மாடி, 48-ம் எண்ணுள்ள ஐ.சி.யு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனதும், ஒரு நர்ஸ் மறித்து, “வெயிட்டிங் ஹாலில் டோக்கன் வாங்கிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் அனுமதிக்க முடியும்” என்றார். அதே பில்டிங்கில் சுற்றிச் சுற்றித் தேடியும் வெயிட்டிங் ஹால் கிடைக்காமல், மீண்டும் ஓர் ஊழியரிடம் கேட்க, அவர் திரும்பவும் என்னை மெயின் பில்டிங்குக்குப் போகச் சொன்னார். அங்கே போய் விசாரிக்க, “நேரா போய் லெஃப்ட்டு!” நேரா போய் லெஃப்டை அடைந்து விசாரிக்க, “உள்ளே போய் ஃபர்ஸ்ட் ரைட்டு!” என அங்கங்கே என்னை மடைமாற்றி, குறிப்பிட்ட வெயிட்டிங் ஹாலுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.

அங்குள்ள வரவேற்பாளரிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, விஷயம் சொல்லி டோக்கன் கேட்டேன். “சார், டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்துட்டிருக்காங்க. அவங்க கீழே இறங்கினப்புறம் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!” என்றார். டீலக்ஸ் பஸ்ஸின் சொகுசு நாற்காலிகள் போல் போடப்பட்டிருந்த அந்த ஹாலில், ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, மூலையாக வைக்கப்பட்டு இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டு இருந்த ‘சூர்யவம்சம்’ தொடரைப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பெயர் அழைக்கப்படுமா என என் காதுகள் காத்திருந்தன.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அழைக்கப்பட்டேன். வரவேற்பாளர் இன்டர்காமில், “தேவகி! ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன். அவரை ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 48-ம் ரூமுக்கு அனுப்புங்க” என்றுவிட்டு, “போங்க சார்!” என்றார்.
“டோக்கன் சார்?”
“தேவையில்லை. அதான், போன்ல சொல்லிட்டேனே!”

போனேன். மறுபடி டோக்கன் கேட்டார் அந்த நர்ஸ். “நீங்கதானே தேவகி?” என்றதும், சிரித்துக்கொண்டே, “நீங்களா? போங்க” என்று அனுமதித்தார். (மரியாதைக்காக ஔவையார் மாதிரி ‘ர்’ விகுதி போட்டு எழுதினாலும், நர்ஸ் சிறு பெண்.)

ஒரே மாடிக்கு லிப்டில் சென்றிருக்க வேண்டியதில்லைதான். அப்போது இருந்த குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. காத்திருந்து, லிப்ட் வந்ததும் ஏறிச் சென்றேன். முதல் மாடியில் வெளிப்பட்டு, தேடித் தேடி, ஐ.சி.யு-வை அடைந்து, 28, 36, 42, 34, 17 என மாறி மாறி இருந்த அறைகளில் குழம்பி, அங்கிருந்த ஒருவரை விசாரிக்க, “இதோ!”

உள்ளே நுழைந்தேன். இருவர் அட்மிட் ஆகும் அறை. முதல் பிளாக் காலியாக இருந்தது. கடந்து உள்ளே போனேன்.

ஹா… சுஜாதா!

சின்ன வயதில் என்னைத் தன் எழுத்தால் அசர வைத்த சுஜாதா.
“இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு!” என்று சாவி அவர்களால் நான் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட சுஜாதா.
“எப்படிக் கூட்டினாலும் விடை ஒரே மதிப்பில் வர்றதுக்கு இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா? கிரேட்!” என்று வியந்து, தனது ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய சுஜாதா.

சலனமற்றுத் தலைசாய்த்துப் படுத்திருந்தார்.

தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. உடம்பு எங்கே இருக்கிறது என்று புரியாமல் மேலே துணிகளும் போர்வையும் மூடியிருந்தன. லாலி லாலியாகத் தொங்கும் வயர்களின் நடுவே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகில் இருந்த இரண்டு நர்ஸ்களிடம், அவரது நிலை பற்றிக் கேட்டேன். “ப்ச்… நோ ஹோப்! டயலிசிஸ் நடந்துட்டிருக்கு. ஹார்ட் பீட் டவுன் ஆயிருச்சு. வென்டிலேட்டர் வெச்சிருக்கு. தெரியலே… இன்னிக்கோ நாளைக்கோ, ஒரு வாரமோ!'” என்றார்கள்.

“சார் யாரு தெரியுமில்லே… வேர்ல்ட் ஃபேமஸ் ரைட்டர்!” என்றேன்.

“தெரியும். நாங்களும் இவரோட ஃபேன்ஸ்தான்!” – இருவரின் முகங்களிலும் ஒரு விரக்திப் புன்னகை.

இதே கோலத்தில், இதே அப்போலோவில் என் குரு சாவி அவர்களைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.

நர்ஸிடம் சுஜாதாவின் மனைவி தங்கியிருக்கும் அறை எண்ணைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தேன். கண்டுபிடித்து, உள்ளே போனேன். ஐந்தாறு பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். கூடவே, உயரமாக ஒரே ஒரு ஆண். அவர் சுஜாதாவின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.

சுஜாதாவுக்காக வாங்கி, அவரிடமே கொடுத்து, உடல்நிலை விசாரிக்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, சுஜாதாவின் மனைவி சுஜாதாவிடம் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “தெரியுமே! ரெண்டு மூணு தரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களே!” என்றார். அதன்பின் சம்பிரதாய விசாரிப்புகள்.

போன வியாழக்கிழமையே, நிமோனியா என அப்போலோவில் கொண்டு வந்து சேர்த்தார்களாம். இரண்டு மூன்று நாளில் குணமாகி, வீட்டுக்குப் போய்விடலாம் என்றிருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகி, டயலிசிஸ் செய்யவேண்டி வந்து, நேற்று (செவ்வாய்) மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் வைத்து, உசிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றார்.

“யாருக்குமே இன்னும் சொல்லலை. சங்கருக்குக்கூடத் தெரியாது. (டைரக்டர் ஷங்கரைச் சொல்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது.) யாருக்கும் சொல்லவேண்டாம்னுட்டார். ‘உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்துடுவேன். நான் அப்போலோல சேர்றதும், வீடு திரும்பறதும் என்ன புதுசா? வீணா பிரஸ்ஸுக்கெல்லாம் சொல்லி காப்ரா பண்ணவேண்டாம்’னார். அதான் சொல்லலை. நாங்களே அதான் நினைச்சுண்டிருந்தோம்.

திடும்னு நேத்துலேர்ந்து இப்படி ஆயிடுத்து. ரொம்ப நெருங்கிய சொந்தக்காராளுக்கு மட்டும் சொன்னேன். இனிமேதான் ஒவ்வொருத்தருக்கா சொல்லணும்” என்றார். மாமிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆறுதல் சொல்லவேண்டியது மாமிக்கு மட்டும்தானா? என்னைப் போன்ற லட்சக்கணக்கான சுஜாதாவின் வாசகர்களுக்கும் அல்லவா?

பின்பு, சுஜாதாவின் மகனிடம் கைகுலுக்கிப் பேசினேன். இவரிடம் போனில் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். அப்படியே சுஜாதாவின் குரல். சுஜாதாவிடமே இந்தக் குரல் ஒற்றுமை பற்றி வியந்து பேசியிருக்கிறேன்.

பின் அனைவரிடமும் விடைபெற்று, வெளியே வந்து, சுஜாதாவின் நிலைமை சீரியஸாக இருப்பது பற்றி அசோகனுக்குப் போன் மூலம் தெரிவித்துவிட்டு, வெளியேற வழி தெரியாமல் தடுமாறி, படிகளில் இறங்கி, அலுவலகம் வந்தேன். எம்.டி-யின் நம்பர் கொடுத்து, அவரிடம் பேசி விஷயத்தைச் சொல்லுங்கள் என்றார் அசோகன்.

பேசினேன். சுஜாதா கிடந்த இருப்பைச் சொன்னேன். போனிலேயே விசும்பி, விசும்பி அழத் தொடங்கிவிட்டார் எங்கள் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன். “நானும் அவரும் ஒரே வயசு. என்னை விட சில மாசங்கள்தான் மூத்தவராக இருப்பார். நாற்பது வருஷத்துக்கும் மேலான நட்பு” என்று மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார். பின்பு, “என் உடம்பு இருக்கிற இருப்புல எங்கேயும் போக முடியலியே! எனக்காக நாளைக்கு மறுபடியும் ஒரு தரம் போய், மாமி கிட்டே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்கோ!” என்றார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் எதிர்முனையில் அடக்கமாட்டாத அழுகை.

அன்று இரவு, பத்து மணிக்கு அசோகனிடமிருந்து போன்…

“சுஜாதா எக்ஸ்பயர்ட்!”

எழுத்துலக சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது!

ரவி பிரகாஷ்.. 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds