இசைப்பயணத்தில் 25வது வருடத்திற்குள் நுழைகிறார் யுவன் ஷங்கர் ராஜா. தமிழ் சினிமாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை தவிர்க்கவே முடியாது எனும் அளவிற்கு அவரின் இசையை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
‘அரவிந்தன்’ படம் மூலம் அறிமுகமானவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘துள்ளுவதோ இளமை’, ‘பருத்தி வீரன்’, ‘கற்றது தமிழ்’ என இவரது நீண்ட இசைப்பயணம் தொடர்கிறது. சினிமாவில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை மாலை யுவன் வெளியிட்டார்.
இதையொட்டி செய்தியாளர்களையும் யுவன் சங்கர் சென்னையில் சந்தித்தார். அப்போது அவர், “என்னுடன் பயணம் செய்த இயக்குநர்கள், நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. நிறைய தனியிசை, பட புரொடக்ஷன் எல்லா வேலைகளும்.நடக்கிறது” என்றவர் தனது குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி,” என கூறினார். திரை இசை உலகில் 25 வருடங்கள் கடந்தது பெரிய விஷயம் என்ற யுவன்சங்கர் ராஜா, மறைந்த நா. முத்துக்குமாரின் இழப்பையும், அவர் வகித்த இடத்தையும் யாரும் இன்னும் நிரப்பவில்லை என்று புகழாரம் சூட்டி அவரை நினைவுகூர்ந்தார். சிநேகன், பா.விஜய் ஆரம்பித்து தற்போது பாடலாசிரியர் விவேக்குடன் பயணம் செய்வது பற்றியும் யுவன் பேசினார்.
நடிப்புத்துறைக்குள் வருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, இசை ஆல்பத்தில் நடிக்க மட்டும் கவனம் செலுத்துவேன் என பதிலளித்த அவர், தனியாக படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு யுவன் பதிலளித்தார்.
25 வருடங்கள் வந்தது குறித்து உங்களுடைய தந்தை இளையராஜாவிடம் சொன்னீர்களா என கேட்டதற்கு, ‘அத்தனை வருடங்கள் ஆகி விட்டனவா’ என இளையராஜா ஆச்சரியபட்டதாக கூறினார். தன் அம்மாவின் இழப்பையும் அந்த இடத்தையும் தன்னுடைய மனைவியும் மகளும் நிரப்பியதாக கூறினார் யுவன்.
லதா மங்கேஷ்கர், பாலசுப்ரமணியம் ஆகியோரை தனது இசையில் பாட வைக்காதது குறித்து வருத்தம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘யுவனிசம்’ குறித்து கேள்வி எழுந்த போது, ‘நடிகர் விஜய்யுடைய மேனேஜர் ஜெகதீஷ் விஜய்யுடைய மகன் சஞ்சய் யுவனிசம் என டீ-ஷர்ட் போட்டு எனக்கு பிக்சர் அனுப்பினார். அதை இன்னும் நான் எங்கும் பகிரவில்லை. விஜய்தான் எனக்கு அனுப்பி வைக்கச் சொல்லி இருக்கிறார். மகிழ்ச்சியான தருணம் அது’ என்றார் யுவன்.
கேள்வி: இந்தி தெரியாது என போட்ட டீ ஷர்ட் வைரல் ஆனதே?
“நிஜமாகவே எனக்கு இந்தி தெரியாது. மற்றபடி அவர்களை காயப்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை”.
ஆன்மிகத்தில் நீங்கள் அதிக நாட்டம்… காரணம்?
” எல்லா கம்போசர்களுக்கும் ஒரு கட்டத்தில் அந்த எண்ணம் தோன்றும் என்றே நினைக்கிறேன். என் அம்மாவுடைய இழப்புதான் எனக்கு அந்த தேடல் தொடங்கியது”.
சிம்பு- யுவன் பயணம் இனி?
சிம்புவுடன் தனி இசை ஆல்பம் ஒன்று அமைக்க திட்டம் வைத்துள்ளோம்”.
எதிர்கால திட்டம் என்ன?
“தயாரிப்பாளராக ஒரு கதை எழுதி இருக்கிறேன். பெண்களை மையப்படுத்திய கதை இது. ஜியோவுடன் சேர்ந்து இந்த படம் இயக்கவும் உள்ளேன். விரைவில் அது குறித்து பேசுவேன்”.