“என் நினைவில் சே” எனும் புத்தகம் இந்த பூமிப்பந்தையே நேசித்த சர்வதேசப் புரட்சியாளன் சேகுவேரா பற்றி அவரது காதல் துணைவி அலெய்டா வரைந்த காதல் ஓவியம்.

சேகுவேரா என்றாலே புரட்சி…. யுத்தம்…. தாக்குதல்… வீரமரணம்… என்று நாம் அறிந்தவற்றுக்கு ஊடாக அவ்வீரனுக்குள்ளும் பூத்த சின்னச் சின்ன உணர்வுகள்… கனிவு… காதல்… கருணை… காமம்… என எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறார் அவரது காதல் நாயகி அலெய்டா மார்ச். இதில் நம்மை வெட்கமுற வைக்கும் அந்தரங்கப் பகிர்தல்களும் உண்டு. துயர் கொள்ள வைக்கும் பிரிவின் பக்கங்களும் உண்டு.

இது ஏதோ காதல் கணவனைப் பற்றிய ஒரு துணைவியின் நினைவுகள் என்று புறந்தள்ளிவிட முடியாது. வீட்டு வாயிற்படியில் நின்று போராட்டக் களத்திற்குப் போகும் கணவனுக்கு வெற்றித் திலகமிட்டு வழியனுப்பிய பெண்ணல்ல அலெய்டா. மாறாக அவரும் துப்பாக்கி ஏந்திய வீராங்கணையாக போர்க்களத்தில் வலம் வந்தவர்தான். அம்மாவீரனின் நினைவுகளுக்கு ஊடாக இவர் எப்படி போராட்டக்களத்தில் கால் பதித்தார் என்கிற சுவாரசியமான தகவல்களையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது இப்புத்தகம். இதனை வெகு சுவாரசியமாக்குகிறது மொழிபெயர்ப்பாளர் அ. மங்கையின் எழுத்து நடை.

கிராமத்து விவசாயி ஒருவரது மகளாக கியூபா நாட்டில் பிறந்தவர்தான் அலெய்டா மார்ச். பெற்றோர்களது நான்கு குழந்தைகளில் கடைக்குட்டிதான் அலெய்டா. ஆரம்ப காலக் கல்வி கிராமப்புறத்தில் என்றாலும் பிற்பாடு அவரது குடும்ப சூழல் கல்விக்காக நகரத்தை நோக்கித் துரத்துகிறது. அக்கா வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.

அப்போதைய கியூபாவில் பணம் உள்ளவர்களுக்கே நீட்டக்கூடிய சீட்டாக மருத்துவம் இருந்திருக்கிறது. எனவே மருத்துவம் படிக்க ஆசை கொண்டாலும் பணப் போதாமை ஆசிரியக் கல்வி நோக்கி நகர வைக்கிறது அலெய்டாவை. காதல் கதைகள்… நாவல்கள் வாசிப்பது…. திரைப்படம் பார்ப்பது…. எப்போதாகிலும் பூங்காக்களுக்குப் போவது என இருந்ததுதான் அவரது இளமைப் பருவம்.
அரசியலில் அவரது முதல் தாக்கம் என்று சொன்னால் 1952 இல் இராணுவ ஜெனரல் பாடிஸ்டா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பும் அதையொட்டிய அதிகாரக் கைப்பற்றலும் கண்டு அனைவரும் அதிர்ந்து போன நிகழ்வுதான்.

ஆனால் அவரது அரசியல் விழிப்புணர்வுக்கு அடித்தளமிட்டது ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் 1953 இல் நடந்த மோன்காடா இராணுவ முகாம் மீதான தாக்குதலும் அதையொட்டி எண்ணற்ற இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட துயரச் சம்பவமும்தான். அப்போது பல்கலைக் கழக மாணவி அலெய்டா.

அப்போதுதான் யார் இந்த ஃபிடல்…? எதற்காகப் போராடுகிறார்கள் இவர்கள்…? என்று அறிந்து கொள்ள ஆர்வம் மேலிடுகிறது. அப்படி அவர் ஆர்வம் கொள்ளக் காரணம் கியூபாவில் நிலவி வந்த ஜல்லியடிக்கும் அரசியலும் வெற்று வாக்குறுதித் தலைவர்களும்தான்.

அதைவிடவும் ”ஏன் தாக்கினோம் ராணுவ முகாமை?” என கியூப நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ நிகழ்த்திய உரை “வரலாறு என்னை விடுதலை செய்யும்” எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமாக மக்களை கிளர்ந்தெழ வைக்கிறது. அதில் அலெய்டாவும் ஒருவர். இதுதான் அவர் பிற்பாடு புரட்சிக்காரியாக உருப்பெற்ற வரலாற்றின் முன்கதைச் சுருக்கம்.

இனிதான் வருகிறது….
”சே” எனும் காதல் நாயகனுடனான சந்திப்புச் சரித்திரம்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர இயக்கத்தில் தலைமறைவுப் போராளியாக இணைந்து கொண்ட அலெய்டாவுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

அது : கொரில்லா போராட்டத்துக்கான நிதியினை மலைகளில் இருந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான். அம்மலைகளில் இருந்து கொண்டுதான் சேகுவேரா மத்திய கியூபாவைக் கைப்பற்றுவதற்கான பயிற்சிகளை போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தார்.

சேகுவேராவின் தீரம்மிக்க போராட்டங்களையும்…. புரட்சியாளர்களது வானொலிகளில் அவரைப் பற்றிய சாகசக் கதைகளையும்… கியூபா நகரங்களின் தெருக்களில் அவரது படத்தோடு ஒட்டப்பட்ட “தேடப்படுவோர்” சுவரொட்டிகளையும்… கண்டும் கேட்டும் அறிந்தும் இருந்தவர்தான் அலெய்டா.
ஆனால் அவரை நேரில் காண்பது அதுவே முதல் முறை. ஆண்டு 1958.

இடுப்புப் பட்டியில் ஒட்டி கொண்டு சென்ற கியூபப் பணத்தை மலையில் இருந்த போராளிகளிடம் சேர்த்த பிற்பாடு அங்குள்ளவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார் அலெய்டா. அப்படியே சே வுக்கும்.
அந்த முதல் சந்திப்பில் வயதானவராக அலெய்டாவின் கண்ணுக்குத் தென்பட்டாலும் சேவின் கூரிய பார்வை மருள வைத்திருக்கிறது. பிற்பாடு ஒரு நாள் மாலை அவரைச் சந்தித்தபோது தலைமறைவுப் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொரில்லா பிரிவில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்க மறுத்து விடுகிறார் சே.

புரட்சிகர இயக்கம் என்றாலும் அதிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அப்படி அதிலும் சில வலதுசாரிகள் இருக்க… ஒருவேளை அவர்களால் தன்னை வேவுபார்க்க அனுப்பி வைக்கப்பட்டவர்தானோ இந்தப் பெண்? என சந்தேகப்பட்டிருக்கிறார்.

விவசாயிகளிடம் சில உதவிகளைப் பெற்று வரும்படி வேறு ஒரு நகருக்கு செல்ல உத்தரவிடுகிறார் சேகுவேரா. வழியின்றிச் செல்கிறார் அலெய்டாவும்.

கொஞ்சநாள் பிற்பாடு மலைக்குத் திரும்பிய அலெய்டாவிடம் துப்பாக்கி ஒன்று அளிக்கப்படுகிறது. அவரது வீட்டிலிருந்து அத்தியாவசிய பொருள்களையும், உடைகளையும் எடுத்து வர ஆள் அனுப்பப்படுகிறது. அங்குள்ள தளபதிகளிடம் தான் முகாமிலேயே தங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்க அவர்களும் அதை ஏற்க…. வழக்கம்போல் அதை மறுக்கிறார் சே. இவரை வேறொரு நகரத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு ஆணையிடுகிறார் சேகுவேரா.

கொரில்லா படையில் போராளியாக சேர தனக்கு அத்தனை உரிமை இருந்தும் மறுக்கிறாரே இவர் என ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார் அலெய்டா. அவரை மருத்துவப் பிரிவு செவிலியர் ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார். மனம் அமைதியின்றி தூக்கத்தைத் தொலைக்கிறார் பல இரவுகள்.

ஒரு அதிகாலை நேரம் பெட்ரெரோ என அழைக்கப்படும் அந்த நகரின் ஒரு சாலையில் பயணப் பையை முழங்காலில் கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்த அலெய்டாவை ஒரு ஜீப் கடந்து செல்கிறது. அது மீண்டும் பின்னோக்கி வந்து நெருங்கி நிற்கிறது….

அதற்குள்ளிருந்து “நீயும் வாயேன் சில ரவுண்டுகள் சுட்டுவிட்டு வரலாம்” என ஒரு குரல் அழைக்க நிமிர்ந்து பார்க்கிறார் அலெய்டா. அங்கே சேகுவேரா ஜீப்பில் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார்.

“எந்தத் தயக்கமும் இன்றி நான் ஜீப்பிற்குள் ஏறினேன். அவ்வளவுதான். சொல்லப்போனால், நான் அந்த ஜீப்பிலிருந்து அதற்குப்பின் ஒருபோதும் இறங்கவே இல்லை.” என்று எழுதுகிறார் துள்ளலின் உச்சத்தில்.

”நாள்கள் செல்லச் செல்ல, சேவின் புகழ் குறித்து அச்சம் கலந்த வியப்பு குறையத் தொடங்கியது. அவரைப் பற்றி மிகுந்த மரியாதையும் மதிப்பும் என்னிடம் கூடின. அவர் மிகுந்த புத்திசாலி. பிறரை வழிநடத்தும் திறமைமிக்கவர். அவரிடத்தில் நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் வெளிப்பட்டன. எனவே அவருடைய படையினர் எந்த நேரமும் கடுமையான சூழலிலும் போதிய ஆதரவையும் அரவணைப்பையும் பெற்றிருந்ததை உணர்ந்தேன்.

சே மீதான எனது மதிப்பு, அவர்மீது என்னுள் எழத் தொடங்கியிருந்த காதல் உறவைவிட மேம்பட்டதாக இருந்தது.”

இதற்கு மேல் வேறென்ன வேண்டும் தான் நேசித்த அந்த மனிதநேயன் குறித்துச் சொல்வதற்கு?

ஆனாலும் நாமறிந்த புரட்சியாளன் வேறு. அலெய்டா அறிந்த ரொமான்ஸ் நாயகன் வேறாயிற்றே….?

அவர் சொல்லியதை நாம் வாசித்திருக்கிறோம். ஆனால் ஜொள்ளியதை….?

”சேவின் பாதுகாவலர்கள் அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தனர். அவர் பணிக்குச் செல்லும்போதும்…. நானும் அவரும் காலாற நடக்கும்போதும்… எப்போதும் அவர்கள் உடனிருந்தனர். நாங்கள் காதல் வயப்பட்ட சாதாரண மனிதர்கள். எங்களுடைய உணர்வுகளால் ஆளப்பட்டோம்.
சிலசமயம், அவர் காரை ஓட்டும்போது தம்முடைய சட்டைக் காலரைச் சரிசெய்யும்படிக் கேட்பார்; அல்லது அவர் கை இன்னும் வலிப்பதால் முடியைச் சீர்செய்யுமாறு சொல்வார். எங்களுக்குத் திருமணம் ஆவதற்கு முன், பொது இடங்களில் நான் அவரைக் கொஞ்ச வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட தந்திரமான சில வழிகள் அவை.” இது அலெய்டா சொல்லிய வரலாற்று நாயகனது காதல் வாழ்வின் சில துளிகள்.

பிற்பாடு ஃபிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் தோழர்கள் துணையோடு நடத்திய புரட்சி வெற்றி பெற்றதும் சர்வாதிகாரி பாடிஸ்டா விரட்டி அடிக்கப்பட்டதும் சே கியூபாவினது பல்வேறு உயர் பொறுப்புகளில் அங்கம் வகித்ததும் வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டிருக்கிற அழியாச் சித்திரங்கள்.
ஆனால் அலெய்டா – சேகுவேரா இருவரது இல்லற வாழ்வுக்குள் புதைந்து கிடக்கிற ஏக்கங்கள்… காதல் பொங்கும் கணங்கள்… ஆதங்கங்கள்… அன்பின்…. அரவணைப்பின்… தனிமையின் வழித்தடங்கள் என எண்ணற்றவற்றை உணர்வுகளின் போராட்டத்தோடே சொல்கிறார் அலெய்டா.

கியூபத் தலைநகரில் நடந்த அவர்களது எளிமையான திருமணத்திற்குப் பிற்பாடு சேகுவேராவிற்குக் காங்கோவில் அல்லல்படும் மக்களையும்… அல்ஜீரியாவில் அவதிப்படும் மக்களையும் கண்ணில் பட்டதே தவிர தம் இனிமையான காதல் வாழ்வை வாழ்வோம் என்று தோன்றவில்லை.

தென் அமெரிக்க நாடுகள் பலவற்றுக்குப் பயணம் மேற்கொள்கிறார் சே. அப்பயணங்களில் அலெய்டாவும் கூட வருவதற்கு சே ஒப்புக்கொள்வதில்லை. “நீண்டகால இடைவெளி என்பதால் நான் சேவின் செயலராக உடன் வருவதாகக் கூறினேன். சே கடுமையாக மறுத்துவிட்டார். செயலராக மட்டும் இல்லாது, மனைவியாகவும் இருப்பதால், அவரோடு பயணம் செய்வது எனக்குக் கிடைக்கும் தனிச் சலுகையாகும் என வாதிட்டார். பிறர் மனைவியருக்கும் காதலியருக்கும் கிடைக்காத வாய்ப்பை நான் மட்டும் கோருவது சரியல்ல என்றார். எனக்கு இது ஒரு படிப்பினையாயிற்று. கிளம்புவதற்கு முன் சே, ஃபிடெலைச் சந்திக்கச் சென்றார். அவரும் என்னை உடன் அழைத்துச் செல்லும்படி சேவிடம் கூறினார். சே கொஞ்சம்கூடத் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. நான் அழத் தொடங்கினேன்.”

(இதைப் படிக்கப் படிக்க… ச்சே…. இப்படி ஒரு துப்புக் கெட்ட ஒரு மனிதன் உலகத்தில் இருப்பானா என்றுதான் நமக்குத் தோன்றும். ஏனென்றால் மக்கள் வரிப்பணத்தில் எட்டாயிரம் கோடிக்கு ஏரோப்பிளேன் வாங்கிய தலைவர்களைக் கண்ட நமக்கு).

இப்படி எண்ணற்ற சிறு சிறு ஊடல்கள்…. கூடல்கள்…. அதிர்ச்சிகள்…. ஆச்சர்யங்கள்…. நிறைந்த நூல்தான் :
“என் நினைவில் சே” – சே குவேராவுடன் என் வாழ்க்கை.

திருமணத்திற்குப் பின் காங்கோ போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கச் சென்றது…. அது பலனின்றிப் போய் பின்வாங்கியது…. பிற்பாடு மெக்ஸிகோ பயணப்பட்டது… கியூப மக்களது பாதுகாப்பிற்காக சோவியத்தை நாடியது…. சீனாவிடம் கோரியது… தான்சானியா நாட்டுக்கு அழைத்து வரச் சொல்லி, பெற்ற குழந்தைகளைக் கூட அவர்கள் அறியாமல் மாறுவேடத்தில் கொஞ்சியது…. எங்கிருந்தாலும் காதல் மனைவிக்குக் காதல் ரசம் சொட்டும் கவிதைகளையும் கடிதங்களையும் அனுப்பியது…. கடைசியாக மீண்டும் சந்திப்போம் எனும் நம்பிக்கையில் பொலிவியாவில் புரட்சி நடத்தப் பயணப்பட்டது… அங்கு அமெரிக்காவின் ஏவல் நாய்களாய் இருந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டது… என ஏராளம் உண்டு அம்மாமனிதனின் வாழ்வில்.

அதில் தலைமறைவுப் போராளியாகத் தொடங்கி…. கொரில்லா போராளியாகப் பரிணமித்து…. புரட்சிகரப் போரில் பங்கேற்று… அற்புத மானுடன் சேவோடு தன் வாழ்வைப் பகிர்ந்த உன்னத உணர்வுகளை…. உள்ளதை உள்ளபடி உயிரோட்டமாகச் சொல்கிறார் நம் அலெய்டா.

சே குவேரா குறித்து கொஞ்சம் நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்திருந்தாலும்….
அவர் குறித்து கொஞ்சம் திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் பார்த்திருந்தாலும்….
அப்புரட்சியாளனுக்குள் இருந்த கவிதைகள் மீதான காதல்… ஓவியங்கள் மீதான மோகம்…. இசையின் மீதான தாகம்… என இழையோடும் மெல்லிய உணர்வுகளை தீட்டிச் செல்கிறது இந்தப் புத்தகம்.
போர்க் கைதியே ஆயினும் யுத்த தர்மங்களை மீறாது அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்திய அறம்….
தவறுதலாக வெடித்த துப்பாக்கியால் பலியான வீரனுக்காக நண்பனையே தண்டனைக்கு உள்ளாக்கிய நேர்மை…

சொந்த நாட்டு நிறுவனங்களையே அந்நிய நாட்டுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில்…. அமெரிக்க நாட்டு நிறுவனங்களையே அரசுடைமை ஆக்கிய துணிவு….
என ஓராயிரம் செய்திகள் விரவிக் கிடக்கிறது இந்தப் புத்தகத்தில்.

கட்டுரை: அரண்செய்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds