காமராஜர் ஒரு மாபெரும் மக்கள் தலைவர். சந்தேகமேயில்லை.
ஏழை எளிய மக்கள் வாழ்வில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற எண்ணற்ற பல விஷயங்கள் செய்தவர் காமராஜர்.
சத்துணவு திட்டமெல்லாம் ஏழைக் குழந்தைகள் ஒருவேளை உணவு இல்லாவிட்டால் , பசியால் எப்படிப் படிப்பார்கள் என்று கவலைப்பட்டால் மட்டுமே ஒருவரால் கொண்டு வர முடியும். உணவுக்காகவே பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏராளம்.
இவையெல்லாம் வேறு.
ஆனால் சமீபத்தில் சங்கிகளும், நாதகவினரும் காமராஜரின் சாதனைகளைப் பட்டியலிட்டு இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதரை தோற்கடித்த தமிழன் ஒரு முட்டாள். திராவிடத்தின் நரித்தனத்தனத்தால் மயங்கிய மூடன் என்று தமிழர்களை திட்டும் பரப்புரைகளை இணையத்தில் செய்து வருகின்றன. காமராஜரை புகழும் சாக்கில் திராவிட இயக்கங்களை இழிவாகக் காட்டுவதே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது.
அப்படி வாட்ஸப்பில் வந்த ஒரு பதிவு தான் பின்வருவது…
இன்று முக்கியமான நாள்…!!!
தமிழக வரலாற்றில் வரலாற்று பிழை நிகழ்ந்த நாள்….
மாமனிதர் காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..
ஏன் காமராஜர் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் என்ன கொடுமைகள் அவரது ஆட்சியில் நடந்தது
1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% கொடுமை நெம்பர் 1 !
2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் .. கொடுமை நெம்பர் 2 !
3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன… கொடுமை நெம்பர் 3 !
4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி “கொடுமைகளும்” நடந்தேறின! கொடுமைகள் நெம்பர் 4)
இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் – கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல “வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே” என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை…
இப்படிப் பல உப “கொடுமைகளும்” செய்த “கொடிய எதேச்சாதிகார ” காமராஜா் ஆட்சி “தோற்கடிக்கப்பட்ட” பொன் நாள்” இந்த நன்னாள்!
ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து “வரலாற்று சாதனை” என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்..
இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் “காசு பார்ப்பதாக” குற்றச் சாட்டுகள் எழுந்த “பொற்காலத்தின்” ஆரம்ப விதை போடப்பட்ட நாள்!
“தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன” – என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்!
அந்த மாபெரும் எளிய மனிதன்
காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்! ஆம்! 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள்!
அன்று “தமிழ் அன்னை” பொங்கி எழுந்தாள் ! ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை இன்று “டாஸ்மாக்” வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்!
தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 51வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை…….
இத்தகைய பொய்யான பரப்புரைகளுக்கு பதில் தரும் நோக்கில் காமராஜர் தோல்வியுற்றதன் காரணங்களை அலசும், பெருமாள் தேவனின் கட்டுரை இங்கே தரப்படுகிறது.
——————————————————
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஒரு பெருந்தலைவராக, மைல் கல்லாக
கருதப்பட்டு வருகிறார். அவர் நல்லாட்சியை வழங்கினார் என்று அனைத்துத்
தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அவரது ஆட்சியை மீண்டும் அமைக்க
வேண்டும் என்றும் பல தரப்பினராலும் பேசப்படுகிறது. காமராஜரின் பணிகள்
அளப்பரியவை. அவர் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணியும் அவர்
கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமும் ஈடிணையில்லாதது. அவர் காலத்தில்
கட்டப்பட்ட அணைகளும் அவரது ஆட்சி சிறப்பை பறை சாற்றுகின்றன.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவர் ஒரு 18 வயது இளைஞனால்
தோற்கடிக்கப்பட்டார். அதன் பின் அவர் சார்ந்த கட்சியும் தமிழகத்தில்
வீழ்ச்சி பெற்று இன்று வரை ஒரு பெயரளவுக் கட்சியாக இருந்து வருகிறது.
காமராஜரின் ஆட்சி மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலமுமே
நடுநிலையுடன் ஆய்வு செய்யப்படவில்லை, அதேபோல காமராஜரின் தோல்விக்கான
காரணமும் நடுநிலையுடன் ஆய்வு செய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்.
எப்படி ராஜாஜியின் வீழ்ச்சிக்குப் பிறகு காமராஜர் அதிகாரத்திற்கு
வருகிறாரோ அதேபோல தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காந்தி,
நேரு, ராஜாஜி, காமராஜர் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் நடத்தைகள்
காரணமாக அமைந்தன. காமராஜரின் தோல்வி என்பது காங்கிரஸ் கட்சியின் தோல்வி
ஆகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பணி
அளப்பரியது. அதேவேளையில் முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இருந்த
காங்கிரஸ் கட்சிக்கும் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இருந்த
காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது.
அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த காந்தி
அந்தக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் பல நேரங்களில் ஆங்கிலேயருடன்
இணக்கமாக பயணிக்க வேண்டியதாயிற்று. அது காங்கிரஸ் கட்சிக்கு பல
பின்னடைவுகளை ஏற்படுத்தியது. பல ஜனநாயக மரபுகளை கொலை செய்தது. பிராந்திய
உணர்வுகளை அலட்சியப்படுத்தியது. இவற்றையெல்லாம் அமைதியாக கவனித்து வந்த
மக்கள் இறுதியில் வாக்கு மூலமாகவே காங்கிரஸ் கட்சிக்குப் பாடம்
புகட்டினர். குறிப்பாக அகிம்சை பற்றி பேசி வந்த காங்கிரஸ் சுதந்திரம்
அடைந்த பிறகு துப்பாக்கியை கையிலேந்தி தாண்டவமாடியது. இது மக்கள் மனதில்
தீரா வெறுப்பை ஏற்படுத்தியது. அதுவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு
தோல்வியை ஏற்படுத்தியது. காமராஜர் காங்கிரஸ் கட்சியின் இறுதி
அத்தியாயத்தை எழுதினார்.
காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு காமராஜரின் ஆட்சி பற்றி மட்டும்
சிலாகித்துப் பேசுவோர் காமராஜரின் தோல்வி குறித்து நடுநிலையுடன்
பேசுவதில்லை. காமராஜரின் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்வதே இந்தக்
கட்டுறையின் நோக்கமாகும்.
……..
……..
……..
22. மொழிவாரி மாகாணப் பிரிவினையின்போது காமராஜரின் நடத்தை தமிழ் மக்களின்
உணர்வையும், நலனையும் மிகவும் பாதிப்பதாக அமைந்தது. தமிழர்கள்
பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பெரும் நிலப்பரப்பு ஆந்திர, கர்நாடக, கேரள
எல்லைக்குள் சென்றன. அதோடு நீர்வள ஆதாரங்களும் சென்றன. கேரள எல்லையில்
உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டில் சேர்க்க வேண்டும் என்று
மக்கள் கோரிக்கை விடுத்தனர். எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல
‘‘மேடாவது, குளமாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளேதானே இருக்கு?’’ என்று
கிண்டலடிக்கும் பாணியில் பதிலளித்தார் காமராஜர். அந்தப் பகுதிகள்
தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டிருந்தால் இன்று முல்லைப் பெரியாறு
பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. தனக்கு பூகோள அறிவு உள்ளது என்றும்
எந்தெந்த ஊர்களில் எந்தெந்த மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று
தனக்குத் தெரியுமென சொல்லிக்கொண்ட காமராஜர் எல்லையை சரியாக பிரிக்கா
விட்டால் ஆற்றுநீர் உரிமையை இழந்து விடுவோம் என்பதை அறியாமல்
போய்விட்டார்.
23. அதேபோல தமிழர்கள் முன்னெடுத்த எல்லைப் போராட்டங்களை காமராஜர்
அலட்சியப்படுத்தினார். ம.பொ.சி., மார்ஷல் நேசமணி போன்றோர் எல்லைப்
போராட்டத்தை வலுவாக முன்னெடுத்தனர். மா.பொ.சி.-யால் திருத்தணியும்,
மார்ஷல் நேசமணியால் குமரி மாவட்டமும் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன.
24. மொழிவழி பிரிவினையை ஏற்காமல் தட்சிண பிரதேசத்தை உருவாக்குவதற்கு
எதிர்ப்பு, தமிழக எல்லைப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும், சென்னை
மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பது போன்ற கோரிக்கைகளை முன்
வைத்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் 1956-ம்
ஆண்டு பிப்ரவதி 20-ம் தேதி போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின்போது
நடத்தப்பட்ட ஊர்வலத்தில் போலீசார் திடீரென புகுந்து தடியடி நடத்தினர்.
இதில் கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜீவா, எம்.வி. வெங்கட்ராமன் ஆகியோர்
காயமடைந்தனர்.
25. தூய காங்கிரஸ் தியாகியான சங்கரலிங்கம் சென்னை மாகாணம் என்ற பெயரை
தமிழ்நாடு என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 1956
ஜூலை 27 முதல் உண்ணாவிரதத்தை துவக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ்
கட்சியினர் உண்ணாவிரம் நடைபெற்ற இடத்தில் அல்வா துண்டுகள், உணவுப்
பொட்டலங்களை வீசிச் சென்றனர். நாட்கள் கடந்தன. அவரது உடல் நிலை
மோசமடைந்தது. கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, அண்ணாதுரை ஆகியோர்
அவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால்
அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவர் அனுப்பிய கோரிக்கை கடிதங்களில்
ஒன்றில் மரண வாக்குமூலம் போல, தான் இறந்தால் தனது உடலை கம்யூனிஸ்ட்
கட்சியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். காமராஜர் அவரை
கண்டுகொள்ளவேயில்லை. தமிழ்நாடு என்று பெயர் சூட்டினால் தமிழகத்திற்கு
முதலீடுகள் கிடைக்காது என்று காமராஜர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
அவர் இறந்த பின்னால் மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என்று எழுதிக்
கொள்ளலாம் என்று காமராஜர் அறிவித்தார். சங்கரலிங்கத்தின் மறைவு
தமிழகத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை தூண்டியது. (ம.பொ.சி., மார்ஷல்
நேசமணி, சங்கரலிங்கம் ஆகிய மூன்றுபேருமே நாடார் சமுதாயத்தைச்
சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
26. எந்த ராஜாஜியால் பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்று பிரச்சாரம்
செய்யப்பட்டதோ அதே ராஜாஜிதான் சென்னை நகரம் தமிழகத்திற்கு கிடைக்க
காரணமாக அமைந்தார். இல்லாவிட்டால் சென்னையும் ஆந்திராவுக்கு
சென்றிருக்கும். தெலுங்கர்களின் அழுத்தத்தில் இருந்த நேரு சென்னையை
ஆந்திராவுடன் இணைக்கவே விரும்பினார். ஆனால் அப்போது முதல்வராக இருந்த
ராஜாஜி, அவ்வாறு செய்தால் நடக்கும் விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்க
முடியாது என்று கூறிவிட்டார். அதன் பின்னரே நேரு அந்த முயற்சியை
கைவிட்டார்.
27. திமுகவும், மாணவர்களும் இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்புத்
தெரிவித்தனர். இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் காமராஜர் இந்தி மொழிக்கான
ஆதரவாளராகவே இருந்து, அதற்கு ஆதரவாகவே பேசி வந்தார். இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில்
600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தின் கணக்கு
மிகச் சிலரே.
28. அதேபோல ராஜாஜி, காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் அமைச்சர்களின்
திமிரான பேச்சுக்களை அளவிட முடியாது. பஞ்சகாலத்தில் உணவு
கிடைக்காவிட்டால் மக்களை ‘புண்ணாக்கு தின்னுங்கள்’ என்று சொன்னார் ஒரு
அமைச்சர். உள்துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம் “தேவரை சிசுபாலனை வதம்
செய்தது போல வதம் செய்வோம்” என்று பேசினார்.
29. பொதுவாகவே சுதந்திரம் வரை அகிம்சை பற்றி பேசிவந்த காங்கிரஸ்
கட்சியினர் சுதந்திரத்திற்குப் பின்னர் துப்பாக்கிக் கலாச்சாரத்தை
முன்னெடுத்தனர். கம்யூனிஸ்ட்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை ஒழித்துக்
கட்டும் வேலையிலும் இறங்கினர். இதில் தமிழக காங்கிரஸ் கட்சி விதிவிலக்காக
இருக்கவில்லை. விவசாயிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைவெறி
தாண்டவமாடியது.
30. மதுரை மில் தொழிலாளிகளை மண்டைகளை பிளந்தது, வால்பாறை தேயிலைத்
தோட்டத் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றது, தூத்துக்குடி தொழிலாளர்கள் மீது
துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட்டுத் தள்ளியது,
முதுகுளத்தூர் துப்பாக்கிச் சூடு போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
31. காமராஜர் சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார், ஆளைப் பார்த்து, பணத்தைப்
பார்த்து, சாதி பார்த்து வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்,
அவர் உண்மையான காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் தருவதில்லை
என்றும் காங்கிரஸ் கட்சியினராலேயே குற்றம் சாட்டப்பட்டது. அவ்வாறு
குற்றம் சாட்டிய தலைவர்கள் சீர்திருத்தக் காங்கிரஸ் என்ற கட்சியைத்
துவங்கி பார்வர்டு பிளாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து 1957-ம் ஆண்டு
தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி தமிழக வரலாற்றில் ஏற்பட்ட
முதல் எதிர்க்கட்சி என்றால் மிகையாகாது.
32. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்து பெரியார்
காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அவர் பச்சைத் தமிழர் காமராஜரின்
கரத்தை வலுப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு,
அண்ணாதுரை “அந்தக் கரம் வலுப்பெற்றால் தமிழரின் குரல்வளையை நெறிக்கும்.
வடநாட்டவருக்கு காவடி தூக்கும். காமராஜர் எதில் வல்லவர்? தமிழ் மொழியைக்
காப்பதில்- வளர்ப்பதில் வல்லவரா? தமிழர்தம் உரிமைகளை காப்பதில் வல்லவரா?
தமிழர்களின் எல்லைகளை காப்பதில் வல்லவராக இருந்தாரா? இல்லையே” என்று
கேள்வி எழுப்பினார்.
43. 1960-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி குமாராபாளையத்தில் கூடிய திமுக
பொதுக்குழுவில் ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் ஜனாதிபதியின் இந்தித் திணிப்பு
உத்தரவை திருப்பி பெறவேண்டும், இல்லாவிட்டால் தென்னகத்தை விடுவிக்கும்
சுதந்திரப் போராட்டம் தொடங்கும் என்று தீர்மானித்து அண்ணா தலைமையில்
போராட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் ஆத்திரமடைந்த
காமராஜர் திமுக போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று எச்சரித்தார். குறிப்பாக, துப்பாக்கி இருக்கிறது, அதில் தோட்டாவும்
இருக்கிறது என்று காமராஜர் பேசியதாக அண்ணாவுக்கு செய்தி கிடைத்தது.
அதற்கு பதிலளித்த அண்ணா, மொழிப்போர் நடந்தபோது மூன்று இளைஞர்கள்தான்
உயிர் தியாகம் செய்தார்கள். தற்போது மூன்று லட்சம் தொண்டர்கள்
இருக்கிறார்கள் என்று சொன்னார். இந்தப் பதில் முடிந்தால்
சுட்டுப்பாருங்கள் என்பதாக இருந்தது.
47. அண்ணாதுரை 1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக், பார்வர்டு பிளாக், பிரஜா
சோஷலிஸ்ட் கட்சி, ஆதித்தனாரின் நாம் தமிழர், மாபொசியின் தமிழரசு கழகம் என
சிறிய கட்சிகளைக் கொண்ட பெரிய கூட்டணியை ஏற்படுத்தினார். இது பற்றி பேசிய
காமராஜர், “எட்டு நொண்டிகளைக் கொண்ட கூட்டணியை படுத்துக் கொண்டே
ஜெயிப்பேன்” என்று கேலியாக பேசினார். இதற்கு பதிலளித்த ராஜாஜி, “காமராஜர்
படுப்பது நிச்சயம், ஜெயிப்பது சாத்தியமல்ல” என்று பேசினார். இந்த
நிலையில்தான் காமராஜர் தோல்வி பெற்றார்.
1938-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ்,
முத்துராமலிங்கத் தேவர் போன்றோர், “வெள்ளையருடன் இணக்கமாகச் சென்று
சுதந்திரம் பெறுவது நாட்டிற்கு கேட்டையே ஏற்படுத்தும், காங்கிரஸ்
கட்சியில் முதலாளித்துவ சக்திகள் ஆதிக்கம் பெற்று வருகின்றன,
தலைவர்களுக்குள் பதவி சண்டை நடைபெறுகிறது, கட்சி பொதுமக்களை விட்டு விலகி
வருகிறது” போன்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர். தொடர்ந்து காங்கிரஸ்
கட்சியில் செயல்பட்டு வந்த காமராஜர் தன் இறுதி காலத்தில்தான் அதை
உணர்ந்துகொண்டார். அந்த புரிதல் அவருக்கு கைகொடுப்பதாக இருக்கவில்லை.
எப்போதுமே ஒரு பொருளால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் ஒப்பிட்டு
பார்க்கப்பட்டே அதன் தேவை நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் காங்கிரஸ்
கட்சியினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், காந்தி, நேரு, ராஜாஜியின்
நடவடிக்கைகள், அவற்றுடன் காமராஜரின் நடவடிக்கைகள் என்ற பல காரணங்களின்
ஒட்டுமொத்தச் சேர்க்கையால்தான் காமராஜர் தோல்வியுற்றார். அரசியல்வாதிகள்
எப்போதும் “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்ற சிலப்பதிகார
வரிகளை நினைவில் கொள்வது நல்லது.
— பெருமாள் தேவன்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த காரணங்கள் காமராஜர் மக்களின் அபிமானத்திலிருந்து கீழிறங்கி தோல்வியுற, முக்கிய காரணங்களாக அமைந்திருக்கலாம் என்று கருத நிறைய இடமிருக்கிறது.
முழுக்கட்டுரையையும் கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.
https://groups.google.com/g/panbudan/c/GSW7a9ZPHrM/m/OoUKw8hFAQAJ?pli=1