நடிகர் இயக்குநர் சுந்தர்.சியை ஒரு இயக்குநராக மட்டும் பார்க்க நேர்கிறபோது, ‘அடடே இவர் பேசாம நடிகராக மட்டும் இருந்து தொலைக்கலாமே? என்றும் அவரை ஒரு நடிகராகப் பார்க்கும்போது ‘அடக் கொடுமையே இவர் பேசாம படங்களை இயக்க மட்ட்மே செய்யலாமே என்றும் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்…அப்படி இவருக்கு என்ன ஆச்சி? என்று கேட்கவைக்கும் இன்னொரு படம் தான் இந்த பட்டாம் பூச்சி.
ஒரு கொலை செய்ததாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். இந்நிலையில் திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கில்லர் என்கிறார்.
குழம்பிய நீதிமன்றம் அவர் தூக்கை நிறுத்தி வைத்து ஜெய்யை விசாரிக்க உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால், ஒரு சிண்ட்ரோம் காரணம் சொல்லி தான் கொலைகளை செய்ய வாய்ப்பில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய்.
இருப்பினும் ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த சுந்தர்.சி அதை நிரூபிக்கப் போராடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.இறுதியில் சுந்தர்.சி வெற்றிபெறும்ப்போது கதை தோற்றுவிடுகிறது.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கம்பீரமாகவே நடித்திருக்கிறார் சுந்தர் சி. மகள், மனைவியைப் பறி கொடுத்த துக்கம் அவரை அடிக்கடி பயமுறுத்த இந்த விசாரணையில் இருந்து வெளிவர நினைக்கிறார்.
ஆனாலும் அவருக்குள் இருக்கும் போலீஸ் புத்தி ஜெய் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வரவே உந்துகிறது. இருப்பினும் சட்டப்படி தண்டிக்க முடியாமல் துறை ரீதியான நடவடிக்கையையும் எதிர்கொண்டு அவர் படும்பாடு பரிதாபம். அதை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி
வில்லனாக ஜெய் – அதிலும் கொடூர கொலைகள் செய்யும் வில்லனாக அவரை எப்படித்தான் இயக்குனர் கற்பனை செய்தாரோ தெரியவில்லை. ஒரு ‘சின்ட்ரோம்’ காரணம் சொல்லி கழுத்தையும், கையையும் மடக்கி நீட்டி அவர் ஒரு மேனரிசம் செய்வது நன்றாகவே இருக்கிறது. ஆனால் அவர் அடிக்கடி செய்யும்போது கழுத்து வலிப்பதென்னவோ நமக்குத்தான்.
அதேபோல் ஒரு சைக்கோ கொலைகாரன் என்றாலும் அந்த கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருக்கும். இதில் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. ஜெய் இயல்பாகவே எல்லோருடனும் பழகுகிறார். ஆனால் அவர் எப்படி அத்தனை கொலைகளை கொடூரமாக செய்திருப்பார் என்று புரியவில்லை. உண்மையில் அவர்தான் அந்த கொலைகளை எல்லாம் செய்தாரா என்பதும் கடைசிவரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.
கதாநாயகி தேவைப்படாத படத்தில் ஹனி ரோஸ் பெண் பத்திரிகையாளராக வேடம் ஏற்கிறார். அவர்தான் ஜெய் பற்றிய உண்மை கதைகளை வெளியுலகுக்கு எழுத்தின் மூலமாக தெரிவித்தவர். கணவரைப் பிரிந்து மகளுடன் வசிக்கும் ஹனி ரோஸ், சுந்தர் சியின் மாஜி காதலியாகவும் இருக்க, அவரையும், சுந்தர்.சியையும் மீண்டும் சேர்த்து வைக்க இயக்குனர் ரொம்பவே போராடுகிறார்.
சுந்தர் சி யின் பாசிட்டிவ் எனர்ஜி ஆக இருக்கும் அவரது தந்தை கேரக்டர் நல்ல வார்ப்பு. கடைசியில் அவர் இறந்ததை கூட அறியாமல் சுந்தர்.சி கடமையை நிறைவேற்றுவது நெகிழ்ச்சி.
நவ்நீத் சுந்தரின் இசை படத்தின் ஆரம்பம் முதலே அதிரி புதிரி ஆக ஒலிக்கிறது. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். கதை நடப்பது எண்பதுகளில் என்பதால் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசுவாமியும், கலை இயக்குனர் பிரேம்குமாரும் அந்தக் காலத்துக்கே போய்விட்டார்கள்.பட ரிலீஸ் சமயத்திலாவது திரும்பி வந்திருக்கலாம்.
படத்தின் இடைவேளை வரை விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் சுற்றி வளைக்கிறது. நீதி மன்றத்தின் சார்பில் சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாததால் ஜெய்யை விடுதலை செய்கிறார்கள். ஓகே… ஆனால் போலீசுக்கு அவர் மீது சந்தேகம் இல்லாமலா இருக்கும். ஜெய்யை கண்காணிப்பதை விட்டுவிட்டு சுந்தர்சியைப் பழிவாங்குவதிலேயே ஒட்டுமொத்த போலீசும் குறியாக இருக்கிறது.
வழக்கமாக காமெடியில் கலக்கும் இயக்குனர் பத்ரி இந்த முறை ரத்தமும் சகதியுமாகக் களம் இறங்கியிருக்கிறார். கத்ரி வெயில் நேரத்தில் இப்படி ஒரு பத்ரி.