கோடம்பாக்கத்தின் எவர்கிரீன் ஹாட்டஸ்ட் சப்ஜெக்ட் கதைத்திருட்டு. அதைப்பற்றி மிகத் துணிச்சலாகப் பேசியிருக்கும் படம்தான் இந்த படைப்பாளன்’.
திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்கள் வருடக்கணக்கில் முட்டி மோதி தயார் செய்யும் கதைகள் ஒரே நாளில் அபகரிக்கடுவதை பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த துயரத்தை ஒரு க்ரைம் திரில்லராக்கியிருக்கிறார்கள்.
ஓர் உதவி இயக்குநர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்கிறார். அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு இயக்குநர் வாய்ப்பு தராமல் அவருடைய கதையை புகழ்பெற்ற இயக்குநரிடம் கொடுத்து பெரும்பொருட்செலவில் படமாக எடுக்க முயல்கிறார்கள். விசயமறிந்து கேட்கப்போன அவருக்கு சொல்ல முடியாத கொடூர விபரீதம் நிகழ்கிறது. அடுத்து என்ன? என்பதுதான் கதை.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் தியான்பிரபு, உதவி இயக்குநர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். கதை சொல்லப்போகும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் தனது கோட்டைக் கழட்டி வைத்திருக்கலாம்.
நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர் ஆகிய இருவர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பேயைப் பார்த்துப் பயப்படுவதுதான் வேலை. இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.
காக்காமுட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள். வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா மட்டும் கொஞ்சம் தடித்திருக்கிறார்.
வேல்முருகனின் பேய்த்தனமான ஒளிப்பதிவில் பேய்ப்படங்களுக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.
பாலமுரளியின் இசை அவ்வப்போது திசை மாறி ஒலிக்கிறது.
படத்தில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் நாயகன். அவை காட்சிகளாக விரிகின்றன. அதில் சமுதாய சேவைக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் கிறித்துவத்துறவிகளை உயிரோடு எரிக்கும் மதவாதக் கும்பலை அம்பலப்படுத்துகிறார். கதை சொல்லி முடித்தபின்பு நிஜத்தில் உதவி இயக்குநர்களின் பிரதிநிதியாக மாறி விஸ்வரூபம் எடுத்து பன்னாட்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
படம் பார்க்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் சிக்கல்கள் கண்முன்னே வந்து செல்கின்றன.
எத்தனை பேர் எத்தனை கதைகளைத் திருடினாலும் படைப்பாளன் என்பவனுக்கு எண்டே கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்படத்தின் நாயகனுக்கு எண்ட் கார்டு போட்டிருக்கக் கூடாது அல்லவா?